Sunday, August 5, 2018

கடல் - சிறுகதை - விஷால் ராஜா



                               
விஷாலின் கதை கேட்ட வரை யாருக்குமே புரியவில்லை. சரி கதை அவ்வளவுதான் என்று ஒதுக்க நினைத்த நேரத்தில் சுனில் கிருஷ்ணன் கதையைப் புரிந்துகொள்ள ஒரு பார்வையை முன் வைத்தார். சுவாரசியமாகத்தான் இருந்தது. சற்று விரிவாக எனக்குப் பட்டதை எழுதலாம் என்று தோன்றியது,.

கதையை இரண்டு பாகங்களாக பிரித்துக்கொள்கிறேன். முதல் பகுதியில் ஒரு குடும்பம் கடற்கரைக்குச் செல்கிறது. இரண்டாம் பகுதியில் குடும்பத்திலிருக்கும் ஒரு ஆண் ஒரு காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு இறுதியில் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

முதல் பகுதியைப் பார்ப்போம்.

ஒரு சிறுவன் தன் குடும்பத்தோடு கடற்கரைக்குச் செல்கிறான்.

அம்மா, அப்பா மற்றும் அண்ணன் (பெரியம்மா மகன்) உடன். அண்ணன் கையைப் பிடித்துக்கொண்டு கால் நனைத்து விளையாடுகிறான். சற்று முன்னால் போக விரும்பவனிடம் போகக் கூடாது அலை வந்து தூக்கிப் போய்விடும் என்று அண்ணன் சொல்ல, சிறுவன் சுற்றும் முற்றும் பார்க்கிறான். அவன் மனதில் இருக்கும் கேள்வியைப் புரிந்துகொண்டு பெரியவர்கள் ஒரு எல்லை வரை போகலாம் என்கிறான். மீண்டும் இலையேல் அலை வந்து தூக்கிப் போய்விடும் என்கிறான். பின் சிறுவனின் அம்மா கூப்பிட, அவளிடம் ஓடிச் செல்கிறான். அங்கு சாப்பிட இருக்கும் பலவற்றைப் பார்த்து ஆசைப் படுகிறான். தந்தை அவனிடம் அண்ணனைப் பார். நீ இப்படியெல்லாம் அடம் பிடிக்கக்கூடாது. அண்ணன் சிறுவயதில் கூட இப்படியெல்லாம் நடந்துகொண்டதில்லை என்று சொல்கிறார்.

இதுவரையிலும் அந்தச் சிறுவன் மீதும் அவன் அண்ணனின் மீதும் கதை செல்கிறது. "யாக்கோப் அண்ணா அவன் கைகளை விடவே இல்லை. சிலபோது பிடி இறுக்கமாக இருந்தபோதும்கூட அவரது அண்மையின் விருப்பத்தால் அச்சிறுவலியைப் பொறுத்துக் கொண்டான்." இவ்வரிகள் அதற்கு சிறந்த உதாரணம். தனக்கும் பிடித்தமானவர்கள் உடன் இருக்கும் போது ஒரு சிறுவனுக்குள் இனம் புரியாத சந்தோசம் இருக்கும். கடலின் பங்கு என்பது இதுவரை இவ்வுறவை நமக்கு நனைத்துக்காட்டியதே.

பின் கதை இரண்டாம் பகுதிக்கு நகர்கிறது (என்  பகுப்பில் :) )

ஒரு நாள் தூங்கி எழுந்த சிறுவன் கடற்கரைக்கு போக வேன்டும் இன்றைக்கு என்று அவன் அம்மாவிடம் போய் சொல்கிறான். அம்மா அவனைத் திட்டுகிறாள். கடலுக்குலாம் போக முடியாது என்று சொல்கிறாள். காரணம் சுனாமி வந்து எல்லாம் இடமும் மூழ்கி இருக்கிறது என்று சிறுவன் தெரிந்துகொள்கிறான். சிறிது நேரத்தில் சிறுவனின் அண்ணன் வருகிறான். எப்போது பார்த்தாலும் இவனிடம் பாசமாக இருக்கும் அண்ணன் இன்றைக்கு முகம் கொடுத்துக் கூட பேசவில்லை என்பது சிறுவனை வருத்தப்பட வைக்கிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது எனேறு தெரியவருகிறது. சிறுவனிடம் அவன் அம்மா அண்ணனிற்கு சாப்பாடு கொடுத்து அனுப்புகிறாள். அதை சாப்பிட மறுப்பவனை சாப்பிட வைக்கிறாள். அண்ணன் சிறுவனின் அம்மாவிடம் (சித்தி) நான் போகிறேன் என்கிறான். ஏதோ தப்பு நடந்துவிட்டது இனி  ஒழுங்காக இரு என்று சொல்பவளிடம் மீண்டும் நான் போகிறேன் என்று சொல்ல உன் அம்மா வரும் வரை இரு அல்லது உன் சித்தப்பா வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட்டேனும் போ என்கிறாள். சித்தப்பா அறைந்து ஒழுங்கா உங்கம்மா வந்தவுடன் போ என்று வரும் அவன் தாயிடம் அனுப்பி வைக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறிப்போகும்போது ஓடி வரும் நாயை கல்லால் அடிக்கிறான். தாய் அழுகையுடன் அவனை அணைத்துக்கொள்வதோடு கதை முடிகிறது.

முதல் பகுதியிலிருந்து முற்றிலும் துண்டாக இரண்டாம் பகுதி தனித்து இருக்கிறது. இப்படிப் போகப்போகிறது என்று நினைத்திருக்க சொல்லப்படாத பகுதிகளை அடக்கி ஒரு புதிர் தன்மையோடு நிறைந்திருக்கிறது இரண்டாம் பகுதி.  எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் நமக்குப் புரிவது என்னவென்றால் அண்ணன் கதாப்பாத்திரம் ஏதோ ஒரு தவறைச் செய்துவிட அவனை காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வருகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட விரும்புவனைக் கட்டாயப்படுத்தி அவன் தாயுடன் அனுப்பி வைக்கிறார்கள். இடை இடையே நாய்க்குட்டி, சிறுவனின் மன ஓட்டம் எல்லாம் வருகிறது. முதல் பகுதியை மறந்துவிட்டுப் படித்தால் மற்றவை நன்றாக வந்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் இறுதியில் எதற்காக நாயிடம் கோபம் கொள்கிறான் என்று புரியவில்லை. இவ்விடத்தில்தான் சுனில் கிருஷ்ணன் ஒரு பார்வையை முன் வைக்கிறார்.

கடல் பாவத்தின் அடையாளம். சில நேரம் கரை தாண்டி வந்து நம்மை ஆட்கொண்டுவிடும்.

கடல் இக்கதையில் பாபத்தின் உருவகமாக எப்போது ஆகிறது. ஒரு வேளை இலக்கியத்தில் கடல் பாபத்தின் உருவகம் என்று நிறுவப்பட்டிருக்கிறது என்றால் (அவ்வகையில் கதையில் அது நிறுவப்பட தேவையில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்) சிறுவனும், அண்ணனும் கடற்கரையில் இருக்கும் மற்றவர்களும் ஏன் கால் நனைக்கிறார்கள். ஒரு எல்லை வரை போகலாமா பாவத்தில். நாம் தள்ளி நின்றால் அலை நம்மைத் தூக்கிச் செல்லாது என்று  தெரிந்துதான் சொல்கிறானா? அவ்வளவு தெளிவு இருக்கும் ஒருவன் தன்னை மீறிப் பாவத்தில் ஈடுபடும்போது அதை உணரும் தருணம்தான் முக்கியமல்லவா? இக்கதையில் எங்கு உணர்கிறான். காவல் நிலையத்திலா, அல்லது சித்தி, சித்தப்பாவின் செய்கைகளினாலா அல்லது அவன் தாயைப் பார்த்தபின்னரா?  நம்மை மீறி நடக்கும் விசயத்திற்குக் கூட பொறுப்பெடுத்து குற்றவுணர்வு அடைய பக்குவமான மனம் வேண்டும். அண்ணன் கதாப்பாத்திரம் அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு இங்கு வளரவில்லை. எனில் குற்றத்தை நினைத்து வருந்தும் சாதாரண ஒருத்தனாகத்தான் அவன் தெரிகிறான். எனில் இங்கு கடலிற்கு வேலையே இல்லை. 

ஒரு சிறுகதையில் கதாப்பாத்திரங்கள் பெருகப் பெருக அதன் நீளம், காலம் அதிகரிக்க நிர்பந்தம் உருவாகும். இக்கதையில் வரும் எல்லாக் கதாப்பாத்திரங்களும் வலுவான அறிமுகங்களோடு இருப்பதோடு சரி. அங்கேயே நின்று விடுகிறார்கள்.அதிலும் சிறுவன் பாதிக்குமேல் தேவையே இல்லை என்றாகிறான்.  நாய்க்குட்டி படம் போட்ட படத்தில் பைபிளின் வசனம் வருகிறது என்பதைத் தவிர நாய்க்குட்டி கடைசியில் ஓடி வருவதற்கும் அது கடவுளாவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கடலாவது ஆரம்பத்திலேயே வருகிறது. உருவகமாகிறது என்று வைத்துக்கொண்டால் கூட கடவுள் சட்டென்று உருவகம் கொண்டுவிடுகிறார் இறுதியில். அவரை நாம் ஏற்றுக்கொண்டால் கூட அண்ணன் கதாப்பாத்திரம் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியவில்லை.

சொல்லாமல் உணர்த்துவது நல்ல யுக்திதான் என்றாலும் இக்கதைக்கு கைகூடவில்லை. நிறைய விசயங்களை வாசகனிடமே விட்டுவிட்டதாக நினைக்கிறேன்.

கடவுள் எப்போதும் கூடவே வருவார் என்பது கடவுளைப் பற்றிய பழம்பெருமைகளுள் ஒன்றாகிவிட்டது.

இதுவரை விஷாலின் நான்கு கதைகள் படித்திருப்பேன். இக்கதையில் முன்னகர்ந்திருக்கிறார்.

படிக்கச் சொன்ன கார்த்திக்கிற்கும், எழுதக் காரணமாக இருந்த சுனில் கிருஷ்ணனிற்கும் நன்றி :) 

Monday, July 16, 2018

நிம்மதி!

நேற்று வாசித்த சிறுகதையில்
ஒரு கிழவன் செத்துப்போய்விட்டான்
அவன் பிணந்தான்
இரண்டு நாட்களாய்
தோளில் தூங்குகிறது
ஏனோ
நிம்மதி
அப்படி
ஒரு நிம்மதி!

Monday, July 2, 2018

ஒரு பழம்பாடல்...


சுருக்கங்கள் தோன்றுவது வயதின் அடையாளம். அச்சுருக்கங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு நினைவுகளைத் தாங்கி நிற்கும் தடுப்பணைகள் போல் செயல்பட்டால் வலைக்குள் பறக்கும் பறவைபோல் நம் உடலுக்குள் உயிர் துடிக்கும்.. அப்படித்தான் தோன்றியது அக்கடிதங்களைப் பார்க்கும்பொழுது. அவை என் உயிரிலிருந்து பிரிக்க முடியாத படி கசங்கிச், சுருங்கிக் கிடக்கின்றன.திரும்பி படிக்கத் தேவையில்லாத படி ஒவ்வொரு வரியும் நினைவிலிருக்கிறது.  இருந்த போதும் கண்ணில் படும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றையும் பிரித்துப் படிக்கத்தான் செய்கிறேன்.

அன்றிரவு நடந்த எதையும் யாரிடம் சொன்னாலும் காறி முகத்தில் துப்பிவிடுவர். அப்படி ஒரு இரவிற்காகத்தான் நான் காத்திருந்தேனா என்பதே என் உயிரை அறுக்கும் கேள்வி. அப்படித்தான் அவளும் சொல்லிச் சென்றாள். "நீ இதற்குத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தாய் என்பது எனக்குத் தெரியும். சந்தர்ப்பம் கிடைத்தபோது பயன்படுத்திக்கொண்டாய்" என்றாள். நீ தூக்கத்தில் இல்லை என்று நினைத்தேன்”, என்று சொன்னேன். ஆனால் அவள் கண்கள் திறக்கவில்லை என்பதை நான் உறுதிபடுத்திக்கொண்டேதான் இருந்தேன்.

கடிதம் ஒன்று:

நீ இல்லாமல் வாழ்வது இயலாத காரியமாய் இருக்கிறது.. நான் சாகத்தான் போகிறேன்..

கடிதம் இரண்டு:

சீக்கிரம் உன்னையும்... இவ்வுலகையும் விட்டுப் பிரியப் போகிறேன்...

கடிதம் மூன்று:

மன்னித்து விடு நிலா இன்னும் சாகாமல் இருப்பதற்கு

கடிதம் நான்கு:

….
….
….






கடிதம் ஐந்து:

அன்புள்ள நிலா,
நீ என்னை விட்டுப் போனால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உன்னிடம் சொல்லி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. அன்று நீ சிவப்பு நிறத் துப்பட்டா அணிந்திருந்தாய். எப்போதும் போல் நீ மூக்கில் அணிந்திருந்த வளையம் மின்னியது. வழக்கத்துக்கு மாறாக காதுகளிலும் வளையங்கள் தொங்கின. பெண்களுக்கு வேறு நகைகளைவிட எளிய வளையங்கள் மிக அழகாக இருக்கின்றன என்று அன்றும் உன்னிடம் சொன்னேன். அதை நீ கேட்டாயா என்றே இன்றும் சந்தேகமாக இருக்கிறது.  அதற்கு முன் பார்த்ததிலிருந்து கொஞ்சம் எடை கூடியிருந்தாய். உன்னிடம் கேட்க்கவில்லை. உனக்கு உன் எடைப் பற்றி சொன்னால் பிடிக்காது. ஆனாலும் நீ மிக மிக அழகாய் இருந்தாய் நிலா. அதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று எப்படித் துடித்தேன் தெரியுமா? நீ சொன்னாய்.. காதில் சரியாக விழவில்லை... என்ன என்றேன்... ஒன்றுமில்லை என்று திரும்பிக் கொண்டாய். அதை நினைத்து நினைத்து ஓராயிரம் முறை அழுதுவிட்டேன். சற்று கவனமாய் இருந்திருர்ந்தால் நீ சொன்னது காதில் விழுந்திருக்குமே என்று..  நான் ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறேன்....
ஆனால் அதைப் பற்றி யோசிக்காமல் இல்லை என்று சத்தியம் செய்கிறேன். ஒவ்வொரு நாளும் யோசித்ததுண்டு. எனக்குத் தெரிந்தவர்கள் யாரெல்லாம் தற்கொலை செய்து கொண்டார்கள் ... அவர்களில் யாரைப் போல் நானும் சாகலாம் என்று...
உன்னிடம் சொல்லியிருக்கிறேன் அல்லவா... இல்லையென்றால் கேள்..எனக்கு ஒரு சித்தி இருந்தாள். என் தாயின் இளைய சகோதரி. என் தாயோடு பிறந்தவர்களில் அதிகம் படித்தவள் அவள்தான். அவள்தான் குடும்பத்திலேயே மிக அழகு. அவள் சிரித்தால் தெருவிற்கே கேட்க்கும். எனக்கு அவளைப் பிடிக்கும் என்று சொல்லவும் வேண்டுமா.. அந்தக் காலத்திலேயே படித்து முடித்தவுடன் வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குப் போய்விட்டாள். கோபக்காரி. அவள் பல காலம் திருமணம் செய்துகொள்ளவேயில்லை. எனக்கு பதினைந்து வயதிருக்கும். ஒரு நாள் திடீரென்று வீட்டிற்கு ஒருவனைக் கூட்டி வந்தாள். அவனைக் காதலிப்பதாகவும், யார் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும், யார் திருமணத்திற்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒரு மாதத்தில் நடக்க வேண்டியது நடக்கும் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு அன்றே போய்விட்டாள். பின் அவள் ஏழு ஆண்டுகள் உயிரோடு இருந்தாள்.  அவள் நம்பிப் போனவளின் சொற்கள் அவளுக்கு கொள்ளி வைத்துவிட்டன.. சில நேரம் அவள் வழி போகலாமா என்று நினைப்பேன்...
சில ஆண்டுகளுக்கு முன்  நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரப் பெண் ஒருவர்... அவரும் அக்னிப் பிரவேசம் செய்தார். கணவன் ஏதோ சொல்லிவிட்டானாம்.
பள்ளியில் படிக்கும்போது ஒருவன். என்னோடு படித்தவந்தான். அவன் அப்பா ஏதோ சொல்லிவிட்டாராம். தூக்கு மாட்டிச் செத்துப்போனான்.
நீ கடைசியாக சொன்ன வார்த்தைகள் மட்டும் கேட்டிருந்தால் நானும் இன்னேரம் செத்துருப்பேன் நிலா..
பொய்யில்லை. போன வாரம் கூட ஒருவன் செத்தான். அவன் காதலித்த பெண் ஒரு நாள் திடீரென்று இனி நாம் பிரிந்துவிடலாம் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். அவன் ஒரு வாரம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்திருக்கிறான். ஒரு வார்த்தை கூட அதன் பின் அந்தப் பெண் பேசவில்லையாம்.  வீட்டில் தொங்கிவிட்டான். உனக்குத் தெரியுமா அன்று அவன் வீட்டில் அவன் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி எல்லோரும் இருந்திருக்கிறார்கள். நீ விரும்பினால் கடைசியாய் சொன்ன வார்த்தைகளைச் சொல்லலாம்....
இதுவரை சொன்னவர்களை விட ஒருத்தியின் மரணம் நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் கண்ணில் நீர் வரவைக்கிறது. உன்னிடம் அவளைப் பற்றி சொன்னதில்லை.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் புதிதாய் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்தார். இரண்டாவது திருமணம்.  முதல் மனைவியின் தங்கைதான். அவரின் மனைவி கேன்சர் வந்து இறந்தாள். அக்காவின் பிள்ளைகளைத் தன் பிள்ளைபோல் வளர்த்துவந்தாள். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை. அவளுக்கும் கேன்சர் என்றார்கள். சில வருடங்களிலேயே அவள் அக்காவிடம் போய்ச் சேர்ந்தாள். அவள் செத்த அன்று அவள் கணவன் அழுது அரற்றியது. பாவி.. விளையாட்டா சொன்னத மனசுக்குள்ளயே வச்சுருந்து பழி வாங்கிட்டியேடி..  ஒரு நாள் என்னைப் பிடிக்குமா அக்காவைப் பிடிக்குமா என்று கேட்டிருக்கிறாள். அக்கா என்று சொன்னவுடன் அன்றிலிருந்து வையிற்று வலிக்கு எடுத்துக்கொண்டிருந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளாமல் மறைத்திருக்கிறாள்…  ஒருவேளை இதைச் சொன்னால் நீ கடைசியாக சொன்னதைச் சொல்வாயா நிலா...
இப்போதும் சொல்கிறேன். நிச்சயம் என்றேனும் ஒரு நாள் செத்துப்போவேன் என்று நம்பிக்கையிருக்கிறது  நிலா. என் ஒரே பயமெல்லாம் எனக்கு மறதி அதிகமாகிக்கொண்டே வருவதுபோல் உணர்கிறேன். நீயும் நானும் சேர்ந்திருந்த ஏழு வருடங்களில் ஏறக்குறைய எல்லா விசயங்களும் நினைவிருக்கிறது. ஆனால் எல்லாவற்றின் மேலும் ஒரு மெல்லிய புகை படிய ஆரம்பித்திருக்கிறது. கடைசியாக பார்த்த அன்று நீ அணிந்திருந்த துப்பட்டாவின் உடையின் நிறம் நியாபகம் இருக்கிறது.  ஆனால் உன் சுரிதாரின் நிறம் நியாபகம் இல்லை. அதற்கு முன் நாம் சந்தித்தது நினைவிருக்கிறது ஆனால் எப்போது என்று நியாபகம் இல்லை. கடைசியாக உன்னைப் பார்த்த நாள் எது என்று குறித்து வைத்திருக்கலாம். ஆனால் அதுதான் கடைசி என்று எனக்கு எப்படித் தெரியும். பொய்யில்லை நிலா.. சத்தியமாய் என் நியாபக மறதி பற்றி உன்னிடமே பலமுறை சொல்லியிருக்கிறேன்.  நான் உன்னிடம் இப்போது கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீ என்னிடம் கடைசியாக சொன்னது என்ன.. அவ்வார்த்தைகளை மட்டும் தா.. அதன் பலத்தில் என்னை இறுக்கிக்கொள்கிறேன். அதன் வெப்பத்தில் என்னைச் சுட்டுக்கொள்கிறேன். அதன் இறுக்கத்தில் என் மூச்சை அடைத்துக்கொள்கிறேன்..உன்னை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். .. இவ்வுதவியை மட்டும் செய்...
இப்படிக்கு,
நான்
கடைசியாய் ஒரு கடிதம் மீதமிருந்தது. அக்கடிதத்தை மட்டும் பிரிக்கவில்லை. அதில் ஒரே வரிதான் இருக்கிறது என்பது தெரியும். ஆனாலும் படிக்கத் தோன்றவில்லை. ஒவ்வொரு வார்த்தையும் விடுதலையயும், கோபத்தையும், அருவெருப்பையும், காதலையும், ஏக்கத்தையும் இன்னும் பல உணர்வுகளையும் ஒருங்கே தருவன.
ச்சி. ச்சீ... அன்று நடந்தது எல்லாம் எனக்குத் தெரிந்துதான் நடந்தது....

ஒரு நீண்ட பெருமூச்சோடு கைகளில் இருந்த கடிதங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின் ஒவ்வொன்றாய் கிழித்தேன்...

காதல், காதல், காதல்,
    காதல் போயிற் காதல் போயிற்
    சாதல், சாதல், சாதல்.என்பது ஒரு பழம்பாடல்....