1.
உன் கழுத்து
மச்சத்தில்
பூக்கின்றன
என்இரவுகள்
அதனால்தான்
நான்
தலை சாய்வதேயில்லை..
***
2.
பகல்
பேசுவதுபோல் நடிக்கிறது
.
.
.
இரவு
கேட்பதுபோல் நடிக்கிறது
***
3.
எல்லா கவிதைகளும்
உறங்கிவிட்டன
இனி
நீ வரலாம்....
***
4.
அழகிய இக்காலையில்
செய்வதற்கென்று
எனக்கெதுவுமில்லை
கை கால்களை
நீட்டி/மடக்கி
படுக்கலாமென்றால்
யோக(கா) மில்லை
கருப்பு சட்டையில்
சிவனே வென்றிருக்கவும்
பயம்
ஆகாயமார்க்கமாய்
போய்க்கொண்டிருக்கும்
தேவமார்களைப் பார்த்து
கும்பிட்டுக்கொண்டிருக்கலாம்
தற்கொலை செய்துகொண்ட
அந்த மானைப்பற்றி
மிகத் தீவிரமாய்
யோசிக்கலாம்
அல்லது
ஒரு
உன்மத்த வேளையில்
உதித்த
இச்சூரியனின்
ஒளியில்
நூற்றாண்டுகளாய்
ஒளிந்திருக்கும்
ஒளியற்றுப் போனவர்களின்
துன்பியல் வரலாற்றை
பின் நவீனத்துவமும்
நவீனத்துவமும்
சந்திக்கும் புள்ளியில்
கவிதையாக்கலாம்
இல்லை
வேறு என்னதான் செய்யலாம்
உலகத்தீரே.....
***
5.
மீள மீள
வாசித்த பின்னும்
மீதமிருக்கிறது இரவு
திரும்பத் திரும்ப
கேட்டபின்னும்
காத்திருக்கிறது மனது
ஒரு துளிக் கண்ணீருக்குப் பின்
மீண்டும்
தொடங்குகிறது
அதே பாடல்
அதே ராகம்
***
6.
நான்
கடவுளை நம்புகிறேன்
அவர்
மிகவும் நல்லவர்
யாரையும்
கொலை செய்ததில்லை
எந்தக் கொலையையும்
தடுத்ததுமில்லை
அவர்
ஆற்றல் மிக்கவர்
போர்களில்
பங்கேற்றதுமில்லை
எந்தப் போரையும்
நிறுத்தியதுமில்லை
அவர்
மிகப் புனிதமானவர்
யாரையும்
வன்புணர்ந்ததில்லை
தடுத்ததுமில்லை
அவர்
பேரன்பு கொண்டவர்
பசியால் சாவோர்களை
நேசித்ததுமில்லை
வெறுத்ததுமில்லை
அவர்
உயர்ந்த பண்பாளர்
விலக்கப்பட்ட எதையும்
அவர் படைக்கவில்லை
அவர்
ஜகத் ரட்சகர்
சொர்கத்தின் கதவுகளையும்
நரகத்தின் கதவுகளையும்
திறந்தேதான் வைத்துள்ளார்
நான்
கடவுள்களை நம்புகிறேன்
தாங்களுண்டு
தங்கள் வேலையுண்டென்று
இங்கோ
அங்கோ
எங்கோ
இருக்கும்
அவர்கள்
மிகவும் நல்லவர்கள்!
***
7.
உன்னிடம்
கொடுக்க நினைத்து
முடியாமல் போன
எல்லாவற்றையும்
வெளியே எறிந்துவிட்டேன்
ஒரு முத்தம்
மட்டும் எஞ்சியிருக்கிறது
எச்சில்
அதையேன்
தொடுவானேன்
***
8.
அன்பே
இரவைத்
தூசித்தட்டி வைக்கையில்
ஒரு நிலவையும்
இரண்டு நட்சத்திரங்களையும்
கண்டெடுத்தேன்
இருதுளிக் கண்ணீரில்
இரண்டையும்
கழுவி வைத்துள்ளேன்
இதைப் போலவே
தூக்கத்தையும்
கண்டெடுத்துவிட்டால்
கனவினில் நிச்சயம்
நான் உனக்கு
அவற்றைத் தருகிறேன்
இப்பொழுது
போய் வா....சரிதானே?
No comments:
Post a Comment