அவையோர்
பெரியோர் அனைவருக்கும் வணக்கம். கவிதை என்று தோன்றியதையெல்லாம், தோன்றியபடி எழுதிக்கொண்டு,
ஒன்றேனும் அச்சில் வந்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தவனுக்கு இவ்வளவு கவிஞர்கள்
மத்தியில் பேச கிடைத்த வாய்ப்பை பெரிய கவுரவமாகவே கருதுகிறேன். கார்த்திகேயன் அவர்கள்
பேசுகிறீர்களா என்று கேட்ட பொழுது உடனேயே இல்லை என்று சொல்ல உதடு துடித்தது. இருந்தும்
ஏதோ ஒரு ஆசையில் சரி என்று சொல்லிவிட்டேன்.
தமிழ்
இலக்கிய சூழலில் எல்லோரும் சொல்வது இங்கு படைப்பாளியாய் இருப்பது கடினம் என்று. அனேகமாக
எல்லா ஆளுமைகளுமே சொல்லியிருப்பார்கள். என்னளவில் வாசகனாய் இருப்பதும் சவாலன விசயமே.
அதில் குறிப்பாக கவிதை வாசகனாய் இருப்பது பெரும் சவால். யானையை தடவிப் பார்த்து கதை
சொல்லுவதாய்தான் இங்கு கவிதை வாசிப்பு பெரும்பாலும் நிகழ்கிறது. ஒருவேளை நான் ஒரு மூத்த
படைப்பாளியாய் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாய் இருந்திருந்தால் படைப்பைப் பற்றி
பேசுவது மிக சுலபமாய் இருந்திருக்கும். படைப்பை நீட்டி இது பேரன்பின் தரிசனம் என்றோ
படைப்பாளியைப் பார்த்து, நீ என்ன செய்திருக்க தெரியுமா? நீ சவுத் இந்தியாவின் டால்ஸ்டாய்,
(எல்லோரும் குறிப்பிடும் இன்னொரு பெயர் எனக்கு சொல்ல வராது என்பதால் டால்ஸ்டாய்) என்றோ
சொன்னால் போதும் (அது சரி தவறு என்பது இரண்டாம்பட்சம்) நீங்கள் கை தட்டுவீர்கள். எனக்கு
ஏன் என்று சொல்ல தேவையிருந்திருக்காது. ஆனால் இங்கு நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும்
விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால் தவறாகவோ, அதிகப்பிரசங்கித்தனமாகவோ ஏதேனும் பேசினால் மன்னித்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அந்தக்
காலம் மலையேறிப்போனது தொகுப்பின் அணிந்துரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் கவிஞர் இசையை
பற்றிச் சொல்லும்பொழுது இசை யாரைப் போலவும் எழுதவில்லை; இசை, இசையைப் போல் எழுதுகிறார்
என்று குறிப்பிடுகிறார். மேலும் அவர், தடம் இதழில் வந்த அவரின் நேர்காணலில்,
" இன்று மனுஷ்யப்புத்திரனைப் போல் ஒரு இருபது பேராவது எழுதுகிறார்கள்" என்று
ஒரு இடத்தில் சொல்கிறார். உண்மையான வார்த்தைகள் இவை. நானெல்லாம் கவிதை என்று என்ன எழுதினாலும்
கடைசி வார்த்தை அல்லது கடைசி வரி மனுஷ்யபுத்திரன் என்றே முடிவடைகிறது. ஒரு மூத்த படைப்பாளி
தனித்துவமான படைப்புகள், யார் சாயலுமற்ற தனித்துவமான மொழி கொண்ட படைப்பாளி வேண்டும்
என்று பேசுவது அச்சூழலில் நிலவும் ஆரோக்கியமின்மையைக் காட்டுகிறது. இதைப் பற்றி மேலும்
பேசுவதற்கு அல்லது சொல்வதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. இருப்பினும்
ஒரு எளிய வாசகனாய் எனக்குத் தோன்றிய ஒரு சில விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
கவிதை
என்பது, "நான் இப்பொழுது கவிதை எழுதப் போகிறேன்" என்று உட்கார்ந்தவுடன் வருவதல்ல.
அது வாழும் வாழ்க்கையில் இருந்து உருவாகி வருவது. கே. என். செந்தில் அந்தக் காலம் மலையேறிப்
போனது தொகுப்பைப் பற்றி எழுதிய தன் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார். "கவிதையின்
கவசங்களை அலங்காரங்களைத் துறந்து உரைநடையால் ஆன கவிதைகளின் வழி கவித்துவத்தை எட்டுவதற்கு
மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைத்தான் முன்னோடியாகக் கருத வேண்டியிருக்கிறது."
இதை
ஒட்டி மேலும் சிந்திக்கையில் எனக்குத் தோன்றியது - மனுஷ்யபுத்திரனுக்குள் ஒரு சிறந்த
கதை சொல்லி இருக்கிறார். அவர் கவிஞராய் இருக்கிறார். அதனால்தான் அவரால் உரை நடையால்
ஆன கவிதையில் கவித்துவ உட்சத்தை அடைய முடிகிறது. இது சரியா தவறா இதற்கு முன் யாரேனும்
சொல்லியிருக்கிறார்களா என்பதெல்லாம் தெரியாது. செந்தில் அவர்களின் வரிகள் அப்படியே
இசைக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால்
கவிதையின் கவசங்களை அலங்காரங்களை மட்டுமின்றி தன்னையே, தான் கவிஞன் என்பதையே களைந்து
தன் கவிதைகளை எழுதுகிறார். ஒரு சிறிய உதாரணம்.
ஞானக்கூத்தனின்
கவிதைகளைப் பற்றி பேசுகையில் இசை அவரின் ஒரு கவிதையின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.
“பொய் சொல்லாமல் சொல்லுங்கள்
உங்கள் குசுவிற்கு நீங்களே
மூக்கைப்பொத்திக்கொண்டதுண்டா?
மேலும்
இவ்வாறு தொடர்கிறார்: "தமிழ்சினிமா 1931 ல் பேசத்துவங்கியதாக சொல்கிறார்கள் அதன்
கதாநாயகர்களில் யாருக்கும் 80 ஆண்டுகளாக குசு வரவில்லை. கடைசியில் 2011 ஆம் ஆண்டு தோழர்
தனுஷும், தோழர் செல்வராகவனும் சேர்ந்து அந்த “ சின்ன காற்று புரட்சியை “ நிகழ்த்திக்காட்டினார்கள்"
ஆட்டுதி
அமுதே வில் இடம் பெற்றிருக்கும் ஒரு கவிதை:
"பேண்ட்
ஜிப் திறந்திருப்பது
வெகு
நேரம் கழித்துதான் கவனித்திற்கு வந்தது"
எனது
குறைந்த வாசிப்பனுபவத்தில் ஜிப் போடாமல் கவிஞர்கள் கவிதைகளில் வருவதைப் பார்ப்பது இதுதான்
முதல் முறை.
ஜெயமோகன் அவர்களின் தளத்தில் ஏ.வி மணிகண்டன் என்பவர் இசையின் கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரையில், "எமக்குத் தொழில் கவிதை என்று இருக்க முடியாத தமிழ் கவிஞனுக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில், உப்பு புளி தேடுவது முதல் இருட்டு கடை அல்வாவில் இளைப்பாறுவது வரை அத்தனையையும் செய்து தீர வேண்டி இருக்கிறது. ஆனால் ஓட்டு மொத்தமாக இலக்கியத்திற்கே ஓரிரு மணி நேரம் மட்டுமே வாய்த்த வாழ்க்கையில், அந்த சில மணி நேரங்களை நம்பியே நம்முடைய துடிப்பும், அலைக்கழிப்பும், ஆழ்நிலைகளும், உக்கிரங்களும் இன்ன பிறவும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அழுது ஆற்ற முடியாத அந்த கோலத்தைக் கண்டு சிரித்து சிரித்து கழிகின்றது இசையின் எஞ்சிய நேரம். நூறு நூறு வருடங்கள் ஆகியும் தமிழ் கவிஞனுக்கு உப்பு புளி சண்டை முடியவில்லை. கவி மனமோ, உள்ளொளி உள்ளொளி என்று குதிக்காமல் இருப்பதில்லை. மரபிலோ, உறுமீன்களை பற்றிய உபதேசங்களுக்கு ஒன்றும் குறைச்சலுமில்லை. இந்த மூன்று புள்ளிகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளியின் அபத்தமே இசையின் களம். அகமும் புறமும் அழிந்த, பின் நவீனத்துவ தமிழ் கவிதையின், முதன்மையான இளங்கவிஞராக இசையை நான் எண்ணுவது இந்த அம்சத்தினால்தான்." என்கிறார். எனக்கு இது புரிந்தது போல் தெரியவில்லை. நான் இசையின் கவிதைகளை, கவியுலகை, அவர் ஜானக்கூத்தனின் கவிதைகள் பற்றி பேசும்போது சொன்ன வரிகளின் வாயிலாக புரிந்து கொள்கிறேன்.
"நாம் மாசற்றதற்கு ஏங்குகிறோம். மாசற்றதையும் மகத்தானதையும் ரொம்பவும் ஆராதிக்கிறோம். மாசற்ற அழகு.. மகத்தான அன்பு… மாசற்ற கவிதை.. மகத்தான சித்தாந்தம்.. மாசற்ற மொழி.. மகத்தான தலைவர் ..என. இப்படியாக நாம் பளிங்கில் கீறல்களைப் பொறுப்பதில்லை. லட்சியத்தின் உடலில் ஒரு சின்ன அழுக்குத்திட்டைக் காட்டினால் ” பார்க்கமாட்டேன் “ என்று நாம் தலையைத் திருப்பிக் கொள்கிறோம்."
இசை தலையை திருப்பிக்கொள்ளவதில்லை. அவர் பார்க்கிறார். ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் ஒவ்வொரு நாளும் கடந்து போகும் ஒவ்வொருவரையும் அவர் பார்க்கிறார். அவர் சோ கால்ட் புனிதங்களை, அப்புனிதங்கள் உருவாக்கும் புனிதர்களைப் பார்த்து சிரிக்கிறார். வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ள சிரைக்காத யோகிகளை அல்ல ரிமோட் கடைக்காரர்களிடம் போங்கள் என்கிறார். உன் அப்பனுக்கு சிரட்டையில் தண்ணி ஊற்றிய பாவந்தான் நான் இப்படி ஒற்றை சொல்லிற்கு நாயாய் சாகிறேன் என்று வருந்துகிறார்.
கவிஞர்கள் அனைவருக்கும் மிக புகழ்பெற்ற கவிதைகள் என்று ஒன்று இருக்கும். தமிழ்தான் என் மூச்சு ஆனால் அதைப் பிறர் மேல் விட மாட்டேன் என்றால் கவிஞர் யாரென்று தெரிந்துவிடும். காற்றின் தீராத பக்கங்களில் வாழ்க்கையை எழுதிப்போன சிறகு யாருடையது என்று நாம் சொல்லத்தேவையில்ல. இருப்பதற்குதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் என்று சொன்னவர் சுசிலாவிற்கு வேண்டியவர் என்பது ஊரறிந்த ரகசியம். இசையின் நைஸ் கவிதை அப்படி ஒரு முத்தாய்ப்பான கவிதை. சமீபத்தில் கூட மனுஷ் அவர்கள் தன் பேஸ்புக் பக்கத்தில் அக்கவிதையை பகிர்ந்திருந்தார். எனக்கு நைஸை விட பிடித்தது அவரின் கழிவிரக்க கவிதைதான்.
ஒரு கழிவிரக்க கவிதை
கண்ணைக் கசக்கிக் கொண்டு
என் முன்னே வந்து நிற்கிறது
அதன் மேனியெங்கும் கந்தலின் துர் நாற்றம்
ஊசிப்போன வடையை தின்றுவாழும் அதை
கண்டாலே எரிச்சலெனக்கு
"போய்த்தொலை சனியனே....
கண்ணெதிரே இருக்காதே..."
கடுஞ்சொல்லால் விரட்டினேன்.
காலைத் தூக்கிக் கொண்டு
உதைக்கப் போனேன்
அது தெருமுக்கில் நின்றுகொண்டு
ஒருமுறை திரும்பிப் பார்த்தது
நான் ஓட்டோடிப் போய்க் கட்டிக்கொண்டேன்.
ஒரு வகையில் இக்கவிதை வெளிப்படுத்தும் கவிமனம் மேலும் பல கவிதைளில் வெளிப்படுகிறது. அல்லது அக்கவிதைகள் மூலம் இசையின் கவி மனதைப் புரிந்து கொள்ள முடிகிறது இல்லை நம்மையும் நம் மனம் பல நேரங்களில் செயல்படும் விதத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நைஸ்தான் வேண்டுமோ என்று நிதனாமாக கேட்கும் இசை லூஸ் ஹேருக்கு மயங்குகிறார். பின் அவரே அதிகாலை 5 மணிக்கு எல்லாக் கண்ணும் பீளையுண்ணும் கண் என்கிறார் ( இவ்விடத்தை பெண்ணியவாதிகள் நோட் பண்னிக்கவும்) இந்த வீக்கெண்ட் ஜாலியா மகாபலிபுரம் போலாமா என்று காதலை கழட்டிவிடும் அவர் ஏனோ உன் நினைவாக இருக்கிறது என்று கவிதை எழுதுகிறார்.
இசையின் கவிதைகளின் சிறப்பம்சாகமாக நான் நினைப்பது அவரது கவிதை மாந்தர்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. ஏன் ஓர் கவிதையில் கடவுளும் கிடவுளாகிப் போகிறார். இசையின் கவிதை மாந்தர்கள் நாம்அன்றாடம் சந்திப்பவர்கள். உடற் திறன் குறையுள்ள குழந்தை, மன நலம் குறைந்தவர்கள், பரோட்டா மாஸ்டர், மேலும் முத்துவேல், ஞானவேல், தங்கவேல் போன்றவர்கள்தான். பரோட்டா மாஸ்டர் என்றவுடன் நினைவுக்கு வருகிறது-ஒரு கவிதையில் உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்.பி.பி என்று கேட்பது அழகு.
போலித்தனைங்களை, அல்லது போலியான நம்பிக்கைகளுக்குள் அல்லது பிறர் தரும் சட்டைக்குள் நம்மை அடைத்துக்கொள்ளுவதைப் பற்றி கேலி செய்யும் அவர்தான் போங்கடா நீங்களும் உங்க இதுகளும் எனக்கு என் ப்ரவுன் கலர் ஜட்டிதான் முக்கியம் என்கிறார். நாம் சில நேரங்களில் நம்மை மட்டுமல்லாது பிறரையும் எவ்வாறு புனித வார்த்தைகளால் வஞ்சிக்கிறோம் என்பதற்கு இடமுலை வடிவக்கல் என்கிற கவைதையை வாசிக்கிறேன்
ஒரு வழியாக
கவர்மெண்ட் கக்கூஸிலிருந்து
வெளியே வந்துவிட்டான்
துரத்தியடித்த நாய்களில் ஒன்று
திரும்ப வந்து உறுமி நிற்கிறது
நடப்பதும் ஊர்வதும் கண்ட அதற்கு
தவழ்வது பிடிக்கவில்லை
இவன் பாக்கெட்டில் கைவிட்டுத் தேடினான்
இன்னுமொரு கல் மிச்சமிருந்தது
அதை எடுத்து ஓங்கி எறிந்தான்
மொழியியல் வல்லுனனும்
தன்னம்பிக்கைப்
புழுத்தியும்
திடுக்கிட்டு எழுந்திருக்க
உடைந்து சிதறியது
"மாற்றுத்திறனாளி" எனும் சொற்கட்டு.
மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றில் எழுந்து போகும் வாய்ப்பு உனக்கும் எனக்கும் சரி சமமாக வழங்கப்படவில்லை என்ற வரி ஒன்று வரும். நெஞ்சின் ஆழத்தை தைத்த வரி. அன்றிலிருந்து யாரிடமோ நான் பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டேன். கண்களை திடீர் திடீரென்று குளமாக்கும் வரி அது. இரண்டு கவிதைத் தொகுப்புகளில் இரண்டு மூன்று இடங்களில் இசை அவ்வரியை நினைவுபடுத்தினார். தன்னிம்பிக்கை புழுத்தி போடா என்று திட்டுவது மனுஷ் அவர்களின் வரியின் இன்னொரு பக்கம்.
என் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், ஒவ்வொரு காதலர் தினத்தின் போதும் நாம் இன்றைக்கு யாருக்கேனும் நம் காதலைச் சொல்லுவோம் அல்லது நம்மிடம் யாரேனும் ஒருவர் வந்து தன் காதலைச் சொல்லுவார் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம் கூட அப்படித்தான் போனது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட கவிஞர் எழுதுகிறார்.
ஒவ்வொரு அதிகாலையிலும்
அவசர அவசரமாகப் பல்துலக்கி முடிக்கையில்
ஒரு நினைப்பு
இன்று எவளோ ஒருத்தியின் இதழ்கடித்துத் தின்போமென
தம்பி
இன்னும் கொஞ்சம் பேஸ்டை பிதுக்கி
இன்னும் கொஞ்சம் துலக்குகிறான்
எனக்கு கவிஞர் என் தோள் மேல் கை போட்டு கவிதை பாடுவது பிடித்திருக்கிறது. எனது குறைந்த வாசிப்பனுபவத்தில், குறைந்த பட்ச புரிந்துணர்வில் எனக்குத் தோன்றுவது. பெரும்பாலான கவிஞர்கள் அகத்தைப் பேசினாலும், புறத்தைப் பேசினாலும், ஒரு மேடையின் மீது ஏறி நின்று கொண்டு பேசுகிறார்கள். வாசகன் எதிரே நின்று கொண்டு கேட்கிறான். இசை வாசகனோடு நின்று கொண்டு பேசுகிறார்.இதற்கு வாசகன் மீது நம்பிக்கை கொண்ட மனம் தேவை. அதனினும், மேலாக தன் மீது அசாத்திய நம்பிக்கையுள்ள மனம் தேவை. படைப்பதனாலே என் பேர் இறைவன் என்று பாடும் மனதிற்கு ஒப்பான நம்பிக்கை. கவிதைகள் என்பது ஒரு ரகசிய உலகம் அல்லது கவிதைக்குள் நுழைவது என்பது பல ரகசியங்கள் நிறைந்த குகைக்குள் நுழைவது போன்றது என்ற சராசரிப் பொதுப் புரிவுகள் உள்ள வாசகனை இசை அவன் வாழும் உலகிற்கு கூட்டிச் செல்கிறார். அவன் வாழ் நாளின் ஒரு நாளை அவனுக்குப் போட்டு காட்டுகிறார். பைத்தியத்தின் டீயை அவனை சுவைக்க வைக்கிறார். கிரிக்கெட் பார்க்க அழைத்துச் செல்கிறார். பரோட்டா மாஸ்டரின் கானத்தை கேட்க வைக்கிறார். ஸ்கூட்டிகளுக்குப் பின்னால் போலாம் என்கிறார். நாம் பார்த்திராத மகிழ்ச்சி ததும்பும் சுந்தர மூர்த்திகளின் முகங்களை நமக்கு காட்டுகிறார். நாம் மனம் தளரும்போது தம்பி கோட்டைக் கழட்டு ஒரு வேம்பின் கீழே குறையுடையில் கிடப்போம் வா என அழைக்கிறார். அப்பொழுதும் மனம் ஆறுதல் அடையாத பொழுது ஆம் தற்கொலைக் கவிதைகள் க்ளீஷே ஆகியிருக்கலாம், தற்கொலையைப் பார் எவ்வளவு புத்தம் புதிதாய் ஜொலிக்கிறது என்று நம் தோள் மீது கை போடுகிறார். சற்று மனம் தேறும் வேளையில் நம் அறவுணர்வைச் சீண்டுகிறார். சரி சரி வா மூக்கைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு போவோம் என்று அழைத்துச் செல்கிறார்.
அந்தக் காலம் மலையேறிப்போனது, ஆட்டுதி அமுதே இரண்டிலும் சேர்த்து மொத்தம் 148 கவிதைகள் உள்ளன. நான் வாசகனாய் என் கறார்தன்மையைக் காட்டுவதற்காக 145 என்றுதான் சொல்வேன். அந்த மூன்றைப் பற்றி அடுத்து சொல்கிறேன். இந்த 145 கவிதைகளைப் படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றுவது கவிஞர் அகத்தைப் பற்றி பேசினாலும் புறத்தைப் பேசினாலும் அவை வாசகனான நம்மைப் பேச வைக்கிறது என்பதுதான் அல்லது நம்மை ஒரு நிலையில் நிற்க விடுவதில்லை. சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது, கோபப்பட வைக்கிறது, வெட்கப்பட வைக்கிறது, ஆறுதல் படுத்துகிறது. கவதைகள் மூலம் இவ்வளவு நெருங்கி வருவதற்கு அவரது மொழி மட்டுமே காரணமில்லை என்பது உறுதி.
என் கறார்தன்மையைக் காட்டுவதற்காக மூன்று கவிதைகளை மறுத்தேன் என்று சொன்னேன் இல்லையா அவை.
1. என் ஊறுகாய் மட்டை திருவனந்தபுரத்திலிருக்கிறது என்று முடியும் கவிதை
2. ஒரே குத்து சும்மா பயமுறுத்தாதே என்ற கவிதை
3. செல்பொன் கவிதை
இறுதியாக பீடி குடிக்கும் உதடுகளுக்கு முத்தம் என்று எழுதிய கவிஞர் கைகளுக்கு, தலைவி ரேஷ்மாவின் படத்தை பேஸ்புக்கில் முகப்பு படமாக வைத்த அண்ணனின் கைகளுக்கு ஒரு ஆயிரம் முத்தங்கள்.
நன்றி
No comments:
Post a Comment