மாற்றுத் துணி இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு நான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு கடைசியாக வெளியேறத் தொடங்கினேன். இரண்டு மைல்களுக்கு, எதிரே ஒரு உயிரையும் பார்க்கவில்லை. நான் பயப்படத் தொடங்கினேன். ஊரை விட்டு வெளியேறும் போது எங்கள் ஊர்த் தெய்வம் எல்லோருக்கும் அவர்கள் அதுவரை வாழ்ந்ததற்கேற்ப வரங்கள் கொடுத்தனுப்பியது. எனக்கு இரண்டு வரங்கள் கிடைத்தன. அதிலொன்றைப் பயன்படுத்தி ஊரார் இருக்கும் இடத்திற்குப் போகலாம் என்று ஒரு கணம் தோன்றியது. இருட்டும் வரை நடப்போம் அதன் பிறகு வேண்டுமானால் ஒரு வரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கும்பொழுதே சற்று தூரத்தில் ஒருவர் சென்றுகொண்டிருப்பது தெரிந்தது.
ஓட்டமும் நடையுமாக அவரை நோக்கிச் சென்றேன். அவரை நெருங்கிய நொடி அவர் திடீரென்று மறைந்துவிட்டார். எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக பிரமை இல்லை. இவ்வளவு நேரம் கண் முன்னே இருந்தவர் திடீரென்று எப்படி மறைந்தார்... ஒரு வேளை அவர்.. அவர் வரத்தைப் பயன்படுத்தி மறைந்திருக்க வேண்டும். ஆனால் ஏன்? ஏன் நான் நெருங்கி வந்தவுடன் அவ்வாறு செய்யவேண்டும்? சற்று நேரம், காற்றடிக்காத நேரத்தில் நிற்கும் மரத்தைப் போல் அசையாது, புரியாது நின்றிருந்தேன்.
ஒரு வழியாக மக்கள் கண்ணில் படத் தொடங்கியபொழுது நன்றாக இருட்டியிருந்தது. நீண்ட தூரம் நடந்த களைப்பாற ஒரு மரத்தடியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். தாகமெடுத்தது. பசி வேறு. இம்முறை யாரும் மறைந்துவிடக்கூடாது... பயத்துடனேயே சற்றுத் தள்ளி படுத்திருந்த ஒருவரிடம் குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டேன்.
தலையைத் தூக்கிப் பார்த்தவர் எதுவும் பேசாமல் திரும்பவும் படுத்துக்கொண்டார். ஒவ்வொரு மரத்தடியிலும் குழந்தைகள், பெரியவர்களென ஒரு குடும்பமோ, நான்கைந்து பேர்களாலான சிறு கூட்டமோ இருந்தது. மொத்தம் ஐம்பது பேர்களாவது இருப்பார்கள். ஒவ்வொரு மரத்தடியாய்ச் சென்றேன். சிலர் இல்லை என்றார்கள். சிலர் பதில் சொல்லவில்லை. கடைசியாக, ஒரு குழந்தையுடன் இருந்த பெண்ணிடம் சென்றேன். " அம்மா,மிகவும் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா". அவளும் எதுவும் பதில் சொல்லாமல் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த தன் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"அம்மா, நான் நம்மூரில் இருந்து கிளம்பியது முதல் எதுவும் சாப்பிடவில்லை..பசி.... தாகத்தையாவது தணித்துக்கொண்டால்தான் என்னால் இனி நடக்க இயலும்.. நாவை நனைத்துக்கொள்ளுமளவு நீர் தாருங்கள், அது போதும்”, என்றேன். அவள் அப்பொழுதும் எதுவும் பேசவில்லை. எனக்கு கண்களில் நீர் முட்டியது. கனவிலும் இப்படி ஒரு நிலை வரும் என்று நினைக்கவில்லை. அவளைச் சொல்லியும் குற்றமில்லை. பஞ்ச காலத்தில் யாரை நாம் குறை சொல்ல முடியும்.
அவள் தரப்போவதில்லை என்று திரும்ப எத்தனிக்கையில், " சுயநலவாதி" என்று அவள் சொல்வதுபோல் கேட்டது.
"என்ன சொன்னீர்கள்?" அவள் குழந்தையை எடுத்து மடி மீது வைத்துக்கொண்டு அதன் மேல் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டே, " உன்னிடம் எத்தனை வரங்கள் உள்ளன?" என்று கேட்டாள்.
"இரண்டு.."
"அதிலொன்றைத் தருவதாகச் சொன்னால் உனக்கு தண்ணிர் தருகிறேன்"
"அம்மா..." விக்கித்து நின்றேன்.
"அதான் சொன்னேன் சுயநலவாதியென்று.. போ..போ"
குழம்பிய மனதுடன் நான் படுத்திருந்த மரத்தடிக்கே திரும்பினேன். சுய நலவாதி? அந்த வார்த்தைக் கேட்டுக்கொண்டே இருந்தது. திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப.. ஏன் என்னை அப்படிச் சொன்னாள்? அதிலும் ஒரு வார்த்தைக்கூட பேசுவதற்கு முன்... அவள் பார்வையில் ஏன் அப்படி ஒரு வெறுப்பு? குஞ்சுகளைக் தூக்கிச் செல்ல வரும் பருந்தைப் பார்த்து கோழி கொள்ளும் பதட்டம் போல் மனம் பயமும், கோபமும் கலந்த பதட்டத்துடன் இருந்தது. பின் அப்படியே தூங்கிப் போனேன்.
கண் விழித்த பொழுது நல்ல வேளையாக எல்லோரும் அங்குதானிருந்தார்கள். சூரியன் வெளிவரத்தொடிங்கியதும் பறவைகள் கத்திக்கொண்டே இருந்தன. தலைவலி எடுத்தது. வேறு சமயமாய் இருந்திருந்தால் என் எல்லா வலிகளுக்கும் தீர்வாக பறவைகளின் ஒலிகள் இருந்திருக்கும். முந்திய நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததனால் என்னோடு சேர்ந்து பசியும் கண் விழித்துக்கொண்டுவிட்டது.
ஒரு குழந்தை அப்பொழுது என்னைக் கடந்து ஒரு மேடான பகுதியில் இருந்து கொண்டு ஏதோ சொல்லிக் கத்தியது. மொத்த மக்களும் அக்குழந்தை இருந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு தண்ணீர் ஊற்று ஒன்று உருவாகி இருந்தது. மக்கள் எல்லோரும் தாகம் தணித்துக்கொள்ளத் தொடங்கினர். வேகமாக ஓடிச் சென்று கூட்டத்தில் புகுந்தேன். முதியவர் ஒருவர் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தார். அவர் குடித்து முடித்து திரும்பியதும் ஊற்றை நோக்கி குனியப் போன என்னைத் தடுத்தார்.
"ஐயா நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. மயக்கமாய் இருக்கிறது. தண்ணீரையாவது குடிக்க அனுமதியுங்கள்.." கெஞ்சத் தொடங்கினேன்.
"சுயநலவாதி" முதியவர் முகம் சிவக்க என்னை முறைத்தபடி ஊற்றை நெருங்கவிடாதபடி நின்றுகொண்டார்.
" என்ன..." எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவரும் என்னை சுயநலவாதி என்கிறாரே என்று கோபம் வந்தது.
"தண்ணீர் குடிப்பது சுயநலமா?" என்று முதியவரைப் பார்த்துக் கத்தினேன்.
"அவ்வூற்று அந்தக் குழந்தையின் வரம்" என்றார். நீரில் வரும் பாம்பைக் கண்டு இலையில் இருக்கும் தவளையாய் தவளையாய் தவித்தேன். நகரவில்லை.
"போ .. போய் உன் வரங்களைப் பயன்படுத்திக்கொள்" முதியவர் சொல்லிவிட்டு என்னைத் திரும்பிப் பார்க்கமால் சென்றார். அதற்குமேல் அங்கு நிற்க இயலாமல் மரத்தடிக்குத் திரும்பினேன். அது புளிய மரம் என்பதை அப்பொழுதுதான் கவனித்தேன். நான் படுத்திருந்த இடத்தைச் சுற்றி புளியம்பழங்கள் விழுந்து கிடந்தன. கைகொள்ளுமளவு பொறுக்கிக்கொண்டு ஒன்றின் ஓட்டை நீக்கிச் சாப்பிடப் போனேன்.
"அதைச் சாப்பிடாதே.. எங்களிடம் கொடு" என்று கத்திக்கொண்டே என்னை நோக்கி இருவர் ஒடி வந்தனர். இருவரும் மெலிந்த தேகத்தினராய் இருந்தனர்.
"ஏன் சாப்பிடக்கூடாது"
" நீ கடைசியாய் உணவருந்தி எத்தனை நாளாகின்றன?"
"ஒரு நாளாகிறது"
" நாங்கள் சாப்பிட்டு ஒரு வாரமாகிறது.. குடு எங்களிடம், சுயநலவாதி" என்றான் ஒருவன்.
" நீங்கள் எல்லாவற்றையும் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், என்னைச் சுயநலவாதி என்று மட்டும் சொல்லாதீர்கள்" என்றேன். முறைத்துவிட்டு இரண்டு பழங்களை மட்டும் விட்டுவிட்டு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றனர். அந்தப் பழங்களோடு நாள் கழிந்தது. அடுத்து இரண்டு நாட்களும் அதே நிலைதான். ஒரு நாள் மட்டும் தண்ணீர் குடிக்க அனுமதித்தார்கள். சுய நலவாதி என்ற சொல் மட்டும் தாராளமாக கிடைத்தது.இப்படியாக ஒரு வாரம் புளியம் பழங்களும் தண்ணீருமாக என் உயிரைக் காத்து வந்தன.
ஒரு வாரத்தில் அவ்விடம் ஒரு சிறு கிராமமாக மாறியிருந்தது. மக்கள் தங்கள் வரங்களைப் பயன்படுத்தி ஒரு கிராமத்தை உருவாக்கியிருந்தார்கள். என்னிடம் இரண்டு வரங்கள் பயன்படுத்தப்படாமலேயே இருந்தன. யாரும் என்னிடம் கேட்கவுமில்லை. நானும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன்.
பசியைவிட ஒருவரும் என்னிடம் முகம் குடுத்துப் பேசாதது என்னை வாட்டி வதைத்தது. ஒரு பிற்பகலில் எல்லோரும் அவரவர் வீட்டில் உணவருந்திக்கொண்டிருக்கும்பொழுது ஒவ்வொரு வீடாகச் சென்று, "என்னையும் இந்தக் கிராமத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்... எனக்கு சாப்பாடு தர வேண்டாம், தங்க இடம் தர வேண்டாம், உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டாலே போதும்.. நான் சாகவும் தயார்" என்று கத்தினேன்.
ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியே வந்தனர். மொத்தமாக எல்லோரும் வந்ததும், " ஏன் என்னை மட்டும் ஒதுக்கி வைத்துள்ளீர்கள், ஏன் என்னைச் சுயநலவாதி என்று வசைப் பாடிக்கொண்டே இருக்கிறீர்கள்" என்றேன். கூட்டத்திலிருந்து என்னைத் தண்ணீர் குடிக்கவிடாது தடுத்த பெரியவர் குரல் கேட்டது.
" நீ ஏன் உன் வரங்களைப் பயன்படுத்தவில்லை?"
"எனக்கு அவ்வரங்களைப் பயன்படுத்தி என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரேனும் என்னிடம் பேசினால், பழகினால். என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டிருந்தால் இக்கிராமத்தை உருவாக்க நானும் என் வரங்களைத் தந்திருப்பேன்" என்றேன்.அவர் அப்பொழுதும் என்னைச் சுயநலவாதி என்றார்.
"நீங்களெல்லோரும் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு என்னை ஏன் சுய நலவாதி என்கிறீர்கள்" என்று கத்தினேன். பின்னாலிருந்து ஒரு பெண் குரல், " உனக்கு உன் பெற்றோர் யாரென்று தெரியுமா?" என்று கேட்டது. முதன் முதலில் என்னை சுய நலவாதி என்று அழைத்தப் பெண்.
" தெரியாது.. நான் பிறந்த ஒரு வருடத்திலேயே அவர்கள் இறந்து விட்டார்கள்"
"உன் பாட்டன்களைப் பற்றி?"
" இல்லை.. ஏன் கேட்கிறீர்கள்"
"உன் அப்பாவைப் பெற்ற பாட்டன் காலம் வரை உன் வம்சந்தான் நம் ஊரை ஆண்டு வந்தார்கள்" அந்தப் பெண் மேலும் சொன்னாள்
" நம் ஊரில் முதன் முதலில் பஞ்சம் வந்தது உன் அப்பாவின் காலத்தில். மழை பொய்க்கத்தொடங்கியது. குளங்கள் வற்றின. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கியது. ஆனால் உன் வீட்டில் மட்டும் மூன்று வேளையும் உலை கொதித்தது. ஊரில் ஒவ்வொருவராக பசியில் சாக, எழும் ஒப்பாரி கேட்டுத்தான் நீ வளர்ந்தாய். "
"இல்லை நீங்கள் பொய் சொல்கிறீர்கள்"
"உன் பெற்றோர் எப்படி இறந்தனர் என்று உனக்குத் தெரியுமா?" நான் இல்லை என்று தலையசைத்தேன்.
" ஒரு நாள் இரவு வீட்டிலிருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஊரைக் விட்டுப் போகும் பொழுது நம் ஊர் தெய்வம் அடித்துவிட்டது. நீ குழந்தையாய் இருந்ததால் நீ மட்டும் தப்பித்தாய். அதுமுதல் உன் அத்தை உன்னை எடுத்து வளர்த்தாள்" என்றாள். நெருப்பில் விழும் நீர்த்துளிகளாய் என்னுயிரை அவளின் வார்த்தைகள் அணைத்துக்கொண்டிருந்தன. பத்து வருடப் போராட்டத்திற்குப்பின் ஊரை மீட்டோம். ஆனால் இம்முறை வந்த பஞ்சம் மொத்தமாக ஊரை விழுங்கிவிட்டது. சரி சொல் நாங்கள் எல்லோரும் ஊரை விட்டு வந்த பின்பும் உன் வீட்டில் சாப்பாடு இருந்ததே எப்படி?
நான் அவளையே பதில் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். "சொல்.. சுயநலவாதி பெற்ற சுய நலவாதியே பதில் சொல்" அந்தப் பெண் கொஞ்சமும் கருணையற்றவளாய் என்னைக் கொன்று கொண்டிருந்தாள்.
" என்னை நம்புங்கள் சத்தியமாய் இவை எதுவுமே எனக்குத் தெரியாது."
அவள் நம்பவில்லை. அவர்கள் யாரும் என்னை நம்பவில்லை. அடுத்தடுத்து ஒவ்வொருவராய் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டனர். எல்லாமே எனக்குப் புதிதாய் இருந்தன. சுய நலவாதிப் பெற்ற சுய நலவாதியை யாரும் நம்பவில்லை.
குளத்தில் விழுந்த கல்லாய் நான் மரத்தடிக்குத் திரும்பினேன். ஒரே ஒரு கிளையின் நிழலில்தான் உனக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று அங்கு எழுதி வைத்திருந்தார்கள்.
No comments:
Post a Comment