எல்லாம் மறந்துபோகும்
ஓர் நாளில்
நம் வீட்டில்
ஒரு தனியறையை
வாடகைக்கு எடுக்கிறோம்
கட்டிடங்கள் ஆகிப்போன
குளம்
மழையை ஏற்க மறுப்பதுபோல்
கண்ணில் வழியும் நீரைத்
துடைத்துக்கொண்டேஇருக்கிறோம்
நம் பிரியத்தின்
எச்சிலை எடுத்து
நாம் நம்
உடல் முழுவதும்
பூசிக்கொள்கிறோம்
தனிமையை
முகர்கிறோம்
ஏசுவிடம்
முள் க்ரீடத்தை
கேட்டு வாங்கி
அணிகிறோம்
நமக்குப் பிடித்தமான
தண்டனையை
தந்துகொள்கிறோம்
நமக்கு மிகப் பிடித்தமானவரைத்
தேர்ந்தெடுத்து
அதற்கு
நீதிபதி ஆக்குகிறோம்
உண்மையில்
எல்லாம் மறந்துபோகும்
ஓர் நாளில்
நாம்
ஒன்றே ஒன்றை மட்டும்தான்
மறந்துபோகிறோம்
No comments:
Post a Comment