Saturday, September 24, 2016

வெக்கை - பூமணி

அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது வாங்குகிறார் பூமணி என்று படித்தபொழுதுதான் அவரின் முதல் அறிமுகம். புத்தகக்கண்காட்சியில் நாவலின் அளவைப் பார்த்து நிச்சயம் படிக்க மாட்டோமென்று அளவில் சிறியதான வெக்கை வாங்கி வைத்திருந்தேன்.
பதினைந்து வயது சிறுவன் ஒரு கொலை செய்கிறான். அதன்பின் தந்தையுடன் ஏழு நாட்களுக்குத் தலைமறைவாய்ச் சுற்றித்திரிந்து விட்டு நீதிமன்றத்தில் சரணடையச் செல்வதுதான் நாவல்.
சிறுகதை வாசிப்பது என்பது திருப்பதியில் லட்டு வாங்குவதைப் போன்றது. நேரத்தை வசமாக்கிவிட்டால் லட்டு நிச்சயம் கிடைக்கும். கவிதை வாசிப்பது என்பது ஒரு கண நேரமே தோன்றும் அற்புத ஜோதியைப் பார்ப்பது போன்றது. பார்த்துவிட்டால் நாம் புண்ணியம் செய்தவராவோம். இல்லையென்றால் நமக்கு ஒன்றுமே தெரிவதில்லை என்ற உணர்வோடு வீடு திரும்ப வேண்டியதுதான்நாவலில் இந்தச் சிக்கல்கள் இல்லை. அவைகள் பல அறைகள் நிறைந்த அரண்மனைகள். குறைந்தபட்ச்சம் உள் நுழைவதற்கும், வெளியேறுவதற்குமேனும் இரண்டு கதவுகள் திறக்கும்.
வெக்கை கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையின் வாயிலாக பல கேள்விகளை நம் முன்னே எழுப்புகிறது. ஒரு பதினைந்து வயது சிறுவனின் மனதில் கொலை செய்யும் எண்ணம் எவ்வாறு எழுகிறது என்பதில் தொடங்கி வாழ்க்கை ஏன் பச்சோந்தியைப் போல் இடத்திற்கு இடம், மனிதருக்கு மனிதர் நிறம் மாறுகிறது போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல நாவல் என்பது தனி நபர்களின் கதைகளாகத் தொடங்கி அது ஒட்டுமொத்த மனிதத்தின் கதையாக மாற வேண்டும் என்று சொல்லுவார்கள். அவ்வகையில் வெக்கை ஒரு சிறந்த நாவல்.
வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து எத்தனையோ விசயங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன. சிதம்பரமும் அவன் அய்யாவும் எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது நான் எங்கோ பார்த்தவர்கள் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. என் சிறு வயதில் நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர் முன் விரோதத்தால் ஒருவரின் காதைக் கடித்து துப்பிவிட்டார் என்று கேள்விப்பட்டதுதான் என் நினைவில் இருக்கும் முதல் வன்முறைச் சம்பவம். பிறகு சாதிப் பிரச்சனையில் நடக்கும் கொலைகள், திருவிழாவில் சண்டை என அவ்வப் பொழுது தெரிந்த இடங்களிலிருந்து அல்லது தெரிந்த மனிதர்களின் வன்முறைச் சம்பவங்களைக் கேள்விப்படுவதுண்டு. ஒவ்வொரு முறையும் நான் யோசிப்பது ஆத்திரத்தில் செய்துவிட்டு கண நேரத்தில் வாழ்க்கையத் தொலைத்துவிடுகிறார்களே என்பதுதான். அதே வேளையில் ஒரு திட்டமிட்டக் கொலை நடக்கும்பொழுது அதன் பின்னால் இருக்கும் கொலை வெறிதான் கண்ணுக்குத் தெரியும். திட்டமிட்டு கொலை செய்பவர்கள் ஆபத்தான மன நிலை உடையவர்கள் என்றே நினைத்துவந்தேன். பதினைந்து வயது சிறுவன் கொலை செய்கிறான், அவனே குண்டு தயாரித்து தன்னைத் துரத்தி வருபவர்கள் மீது வீசுகிறான் என்றாலும் நாம் பார்ப்பது இங்கு வேறு. பழிவாங்குதலில் இருக்கும் நியாயம். அந்த நியாயமும் glorify செய்யப்படவில்லை என்பதுதான் இங்கு சிறப்பு.
குடும்பமே அலைக்கழிப்பிற்கு ஆளான பின்னரும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பதும், ஒன்றாக கைகோர்த்து எதிர்வரும் துன்பத்தை எதிர்கொள்வதும் ஒருவர் மீது ஒருவர் பாசத்தைப் பொழிவதும், வாசிக்கையில் ஒரு துளிக் கண்ணீரையேனும் நிச்சயம் கோரும். அனேக நேரங்களில் நாம் அதிகம் காண்பது  தனிக்குடும்பத்தில் இருக்கும் ஒருவரின் தனியறையில் நடக்கும் கதைகளைத்தான். அவ்வாறிருக்க இவ்வளவு அந்நியோன்யமான ஒரு குடும்பம் மனதிற்கு நெருக்கமாவது இயல்பு. ஒருவர் கூட ஒரு இடத்தில் கூட மற்றவர் மீது கோபமாக பேசாத மனதிர்களாய் வெக்கையில் வரும் ,மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பாசம் மிக  மிகஇயல்பானதாய் இருக்கிறது. Romanticise செய்யப்படவில்லை. படித்து முடித்தவுடன் இயல்புவாதம் என்றால் என்னவென்று புரிகிறது.

வெக்கை வாசித்து முடித்தப் பின் அம்மனிதர்களின் வாழ்க்கையைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது. உடனேயே அது என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியது.வாழ்க்கை என்றால் என்ன என்று என்னைக் கேட்டுக்கொண்டால் அதற்கு சொல்லும் பதிலை நான் எங்கிருந்து பெறுகிறேன். அந்தப் பதில் எனக்குச் சொல்லப்பட்டதாய் இருக்குமா? அல்லது இதை எடுத்துக்கொள் என்று என் முன்னால் வைக்கப்பட்டதாய் இருக்குமா? அல்லது நானாய் உருவாக்கிக்கொண்டதாய் இருக்குமா? சிதம்பரத்திற்கு வாழ்க்கை என்றால் என்ன? அவன் அய்யாவிற்கு, அவன் அம்மாவிற்கு, மாமா, அத்தை, சின்னையா, சித்தி இவர்களுக்கு? உலகம் பல்வேறு அடுக்குகளில் வாழும் மனிதர்களால் ஆனதுதான் என்றாலும் கடைசியில் எல்லோருமே ஒரு பிடிச் சாம்பலாய்ப் போகப்போகிறோம் என்கையில் வாழ்க்கையென்றால் என்னவென்ற கேள்விக்கு  ஆகச் சிறந்த பதிலென்று ஒன்று இருக்க முடியுமா என்று யோசிக்கிறேன். முன்பொருமுறை நானும் என் மாமா மகனும் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு ஆபத்தான விளையாட்டுகளில், சாகசங்களில் உயிரிழப்பவர்களைப் பற்றித் திரும்பியது. நான் அவர்கள் செய்வது முட்டாள்தனம். கிடைத்தற்கரிய வாழ்க்கையை அற்ப விசயங்களில் ஈடுபட்டு வீணாய் விடக்கூடாது என்றேன்.அற்ப விசயங்கள் என்று யார் முடிவு செய்வது. அந்தரத்தில் கயற்றில் நடப்பவனுக்கு அதில் நடப்பதும் தவறி விழுந்து இறப்பதும்தான் வாழ்க்கை. அவன் உயரத்தில் நின்று பார்க்கையில் நாம்தான் அவனுக்கு அற்பமாய்த் தெரிவோம் என்றான். சுயமாய் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை வாழ்பவர்களைப் பார்த்து பொறாமைக் கொள்ளும் அதே வேளையில் அதிகம் வாய்ப்புகள் இல்லாத எளிய மக்களின் வாழ்க்கையைப் பார்த்து பரிதாபம் கொள்வதும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். 

காலச்சுவடு பதிப்பகம்
விலை : ரூபாய் 140

No comments:

Post a Comment