Thursday, July 2, 2015

    மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த‌
    அந்த இரண்டு சிறுமிகளைச் சுற்றிலும்
    கடவுள்களின் ஆவிகள்
    ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தன
    எல்லா கடவுள்களின் பிணங்களையும்
    உள்ளிழுத்துக்கொண்ட பின்பும்
    தணியாக் கோபத்துடன்
    அலைந்து திரிந்துகொண்டிருந்தன‌
    அந்த மரத்தின் வேர்கள்
    இதில்
    அவன் தவறு ஏதுமில்லையென்று
    கூடி நின்ற கூட்டத்திடம்
    அந்தக் கிளைக்காக‌
    கெஞ்சிக்கொண்டிருந்தன மற்றவை
    இறக்குகையில்
    பிடி நழுவி
    விழுந்த
    அக்குழந்தைகளைப்
    பிடிக்க ஓடியவனை
    விரட்டிச் சென்றது
    ஒரு நாய்
    கடப்பாறைகள் இல்லையென‌
    நிம்மதிப் பெருமூச்சுடன்
    கலைந்து சென்றது கூட்டம்
    பாவம்
    பைத்தியம் பிடித்து
    அங்கேயே கிடக்கிறது
    மரம்....
    அந்த ஊரில் இருந்த
    கடைசி வேப்ப மரமும்
    கடைசிப் புளிய மரமும்
    வெட்டப்பட்டப் பின்னர்
    அவற்றிலிருந்தப் பேய்களைப்...
    பிடித்து வந்து
    கருணையுள்ளம் கொண்ட நான்
    என் கவிதை வேலிகளுக்குள்
    அடைத்து வைத்தேன்
    பின்னர்
    கருணையுள்ளம் கொண்ட
    நான்
    பக்கத்து ஊரில்
    மரமிழக்கும்
    பேய்களுக்காக
    உண்ணாவிரதமிருக்கச்
    சென்றேன்
    அப்பொழுதொரு காகம்,
    கடைசி மரமும்
    வெட்டப்பட்டப் பின்
    கடைசி மலையும்
    தகர்க்கப்பட்டப் பின்
    கடைசி ஆறும்
    வற்றியப் பின்
    கடைசி மனிதனும்
    தற்கொலைச்
    செய்துகொண்டப் பின்
    இந்த பூமி
    நிம்மதியாய்
    கடைசி மூன்று
    சுற்றுகளைச் சுற்றும்
    என்று கரைந்தது
    கருணையுள்ளம் கொண்ட
    நான்
    அக்காகத்திற்கு
    சிலை வைக்க வேண்டுமென
    உண்ணாவிரதத்தில்
    பேசினேன்...

கவிஞன்

    கவிஞனாகிவிடலாமென்று
    முடிவெடுத்தப்பின்
    புனைப்பெயரொன்றைத்
    தேடத் தொடங்கினேன்
    இடதுசாரிப் பெயர்களில்...
    அர்த்தம் கேட்ப்பார்களென்பதால்
    வலதுசாரிப் பெயர்களில்
    திட்டுவார்களென்பதால்
    ஆத்திகப்பெயர்களில்
    இடிப்பார்களென்பதால்
    நாத்திகப் பெயர்களில்
    கருப்புச் சட்டையில்லையென்பதால்
    புரட்சியாளர்கள் பெயர்களில்
    எனக்குத் தோழர்களோ
    தம்பிகளோ
    இல்லையென்பதால்
    புராணங்களில்
    யாரும்
    நம்ப மாட்டார்களென்பதால்
    இலக்கியங்களில்
    யாருக்கும் புரியாதென்பதால்
    விளையாட்டுகளில்
    'நேம் பிக்சிங்'ல் மாட்ட நேரிடுமென்பதால்
    வண்ணங்களில்
    மேற்சொன்ன ங்கள்
    எடுத்துக்கொண்டது போக
    மீதமேதுமில்லையென்பதால்
    கவிஞன்
    என்றே வைத்துக் கொண்டேன்
    என்ன செய்யப் போகிறார்களோ..!

வீடு திரும்புதல்

    யாரோ
    எதற்கோ விடும்
    பெருமூச்சினில்
    நாம் நம்
    தொலைந்து போனக் கனவுகளை ...
    உள்ளித்துக் கொள்கிறோம்

    யாரோ
    ஒருவரின் தொடுதலில்
    சிலக் கனவுகளை
    மீண்டும் உணர்கிறோம்
    ஒரு சிலப் பயணங்கள்
    சிலக் கனவுகளிடம்
    கொண்டு சேர்க்கின்றன
    சில ஊர்களில்
    அவை
    நமக்காக
    எப்பொழுதும் காத்திருக்கின்றன
    யாரோ ஒருவரின்
    சிரிப்பினில்
    அழுகையில்
    வெற்றியில்
    தோல்வியில்
    ஏதோ
    சிலப் பெயர்களில்
    ஒரு மழை நாளில்
    ஒரு பின்னிரவில்
    எப்படியோ
    மீண்டு விடுகின்றன
    சிலக் கனவுகள்
    அல்லது
    கனவுகளாகிய
    ஆசைகள்
    சரியாய்ச் சொல்வதானால்
    கனவாய்ப் போன
    ஆசைகள்
    பின்
    தூக்க மென்பது
    வீடு
    திரும்புதல்
    மீதமிருக்கும் ஆறுகளில்
    மீதமிருக்கும் மணல்களில்
    ஒரு பிடியேனும்
    சீக்கிரம்
    எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ...
    இனி
    இவ்வுலகம்
    சிந்தப்போகும்
    கண்ணீரைத்
    தாங்க வல்லவை
    அவை மட்டுமே!