Friday, May 30, 2014

அப்படித்தான் தோன்றுகிறது...

அவள்
என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
என்னைப் பார்க்க வேண்டும் போலிருந்திருக்கும்

அவள்
என்னிடம் வந்து பேசினாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
என்னிடம் பேச வேண்டும் போலிருந்திருக்கும்

அவள்
என்னருகில் வந்தமர்ந்தாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
என்னருகிலேயே இருக்க வேண்டுமென்றிருந்திருக்கும்

அவள்
சிரித்துக்கொண்டே இருந்தாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
கத்தி அழ  வேண்டுமென்றிருந்திருக்கும்

அவள்
அழகான புடவையணிந்திருந்தாள்
ஆம்
அப்படித்தான் தோன்றுகிறது
அவளுக்கும்
அழகாய்த் தெரிய வேண்டுமென்றிருந்திருக்கும்

இன்று
என்னிடம்
அவள் காதல் மட்டுமேயிருக்கிறது
இன்றும்
அவளிடம்
என் காதல் மீதமிருக்கிறது

உங்களுக்குத் தெரியுமா
மரணம் நிகழ்ந்த வீட்டாரிடமும்
மணமாகிவிட்ட பெண்ணிடமும்
'போய் வருகிறேன்'
என்று கூறுவது
எவ்வளவு அபத்தமென்று!!

No comments:

Post a Comment