Tuesday, October 25, 2016

சாத்தானின் குழந்தைகள்

நாம்
சாத்தானின்
குழந்தைகள்

நமது குழந்தைகளுக்கு
சீனித் தண்ணியில்
கடவுளின் ரத்தத்தைக்
கலந்து கொடுக்கிறோம்

கடவுளின்
சதையைப் பிய்த்து தின்று
ஞானம் பெறுகிறோம்

நாம்
சாத்தானின்
குழந்தைகள்

நமது
பிதாவின் ராஜ்ஜியத்தில்
அவரின் வீடுகளை
இடித்துத் தள்ளி
தெருவில் தள்ளுகிறோம்
பின்னர் சிறைப்பிடித்து
சிலுவையில் ஏற்றுகிறோம்

நாம்
சாத்தானின்
குழந்தைகள்

ரத்தம் குடிக்கும் நாம்
தூமை தீட்டென்கிறோம்
கொலை செய்த நாளை
புனிதமாக்குகிறோம்

நாம்
சாத்தானின் குழந்தைகள்

நமக்கு
அது
விலக்கப்பட்ட கனி என்று
நன்றாகத் தெரியும்

அதை
உண்டதுதான்
இதுவரை
நாம் தீட்டியதிலேயே
ஆகப் பெரிய‌
சதித்திட்டம்

சாத்தனிற்கு
தோத்திரம்

ஆமென்!









Thursday, October 13, 2016

இலக்கியத்திற்கான நோபல் பரிசு - 2016

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியர், பாடகர் பாப் டைலன் என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இளையராஜா ஒரு மேடையில் இசையுடன் சேரும்போதுதான் பாடல் வரிகள் உயிர் பெறுகின்றன என்பதைப் பாடல் வரிகளை மட்டும் தனியாகச் சொல்லிக்காட்டுவார் (சொல்லிக்காட்டும்போதே மொக்கையா இருக்குல்ல என்பதுபோல் இருக்கும் அவர் சொல்லும் தொனி) பின் தன் ட்யூனோடு சேர்த்துப் பாடிக்காட்டுவார்.. இப்ப எப்படி இருக்கு என்று அவர் கேட்க்கும்போது கூட்டம் கைத்தட்டும்.

என்னைப் பொறுத்தவரை பாடல்கள் என்றால் அதில் பாடல் வரிகள்தான் முக்கியம் அல்லது இரண்டுமே முக்கியம். தமிழ் சினிமாவில் குத்துப்பாட்டு கலாச்சாரம் தொடங்கியபின் எத்தனையோ குத்துப்பாட்டுக்கள் வந்திருக்கின்றன. அவற்றில் எத்தனைப் பாடல்கள் காலத்தால் அழியாமல் நிற்கின்றன. அதே சமயம், இன்றும் நாம் செந்தமிழ் தேன் மொழியாளை ரசிக்கிறோமே.... அதற்கு வரிகள்தான் முக்கிய காரணம் இல்லையா..

சரி விசயத்திற்கு வருவோம். பாப் டைலனின் பாடல்கள் இவ்வளவு பிரசத்தி என்றால் அவர் வரிகளுக்கு இசை அமைத்தவர்களுக்கு விருதில் பங்கில்லையா? ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காக தேசிய விருது கொடுக்கப்பெற்றபோது பரத்வாஜ் அவர்கள் இதே கேள்வியைக் கேட்டார்.

பாடல்கள் எப்படி உருவாகின்றன என்பது தெரியாது. விக்கிபீடியாவில் இசையைப் பற்றி எதுவும் போடவில்லை என்பதால் அதைப் பிறர்தான் செய்வர் என்று யூகிக்கிறேன்.

டைலனிற்கு கொடுக்கப்பட்டதற்கு ஆதரித்து எதிர்த்தும் எழுதப்பட்டிருந்த பதிவுகளில் அவரின் பல பாடல்கள் பொயட்ரிதான் என்றும் அவர் காலம் முழுவதும் போர்களுக்கு எதிராக பாடியவர் என்றும் ஆதிரிப்போர் குறிப்பிடுகின்றனர். எதிர்ப்போர் அவர் பாடல்கள் எப்படி இலக்கியத்திற்குள் வருகின்றன என்று கேட்க்கின்றர்.

எனக்கு இசை என்பது மன அமைதி கொள்ள வைப்பது மட்டுமே. பாடல்கள் என்றால் அதோடு வார்த்தைகள் சேர வேண்டும். இவ்வளவுதான் என் இசை ரசனை. இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அதன் கதவுகளை திறக்க காலிங் பெல் அடித்துவிட்டு காத்திருக்கிறேன். நிலமை இப்படியிருக்க இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஒரு பாடகர்/பாடலாசிரியருக்கு கொடுக்கிறார்கள் என்றால் என்னத்தைத்தான் புரிந்துகொள்வது :(

சில அடிப்படைக் கேள்விகள்:

*போர்களுக்கு எதிராக பாடினார் என்றால் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் ஏன் இலக்கியத்திற்கு கொடுக்க வேண்டும்.

* அவர் பாடல்களில் இருப்பது கவித்துவமான வரிகளா? அல்லது அவை கவிதைகளா?

* விக்கிபீடியாவில் அவர் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்று போட்டிருக்கிறார்கள். ஆர்ட் லிட்ரேச்சர்க்குள் வருகிறதா?

* இந்தியாவில் இருந்து எப்பொழுது ஒருவர் வாங்கப் போகிறார். :)

Sunday, October 2, 2016

தற்கொலை

தற்கொலை செய்துகொள்வது
என்று முடிவெடுத்தப் பின்
வழக்கமான வழிகளில்
நான் போக விரும்பவில்லை
தூக்கிட்டுக்கொள்வதோ
ஓடும் ரயிலின் முன் பாய்வதோ
எல்லோரும் செய்வது
நிச்சயமாய்
தீவைத்துக்கொள்ளக்கூடாது
மின்சார வயர்களை
எப்படிக் கடிப்பதென்று தெரியாது
ஆற்றில் குதிப்பதென்பது
வழக்கொழிந்துபோன முறை
ஒன்று செய்யலாம்
குறியை அறுத்துவிட்டு
அங்கு ஓர் கோட்டைக் கிழித்துக்கொண்டு
தெருவில் இறங்கி
நடந்து செல்லலாம்
மற்றவற்றை
வேட்டை
மிருகங்கள் பார்த்துக்கொள்ளும்...

Saturday, September 24, 2016

வெக்கை - பூமணி

அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது வாங்குகிறார் பூமணி என்று படித்தபொழுதுதான் அவரின் முதல் அறிமுகம். புத்தகக்கண்காட்சியில் நாவலின் அளவைப் பார்த்து நிச்சயம் படிக்க மாட்டோமென்று அளவில் சிறியதான வெக்கை வாங்கி வைத்திருந்தேன்.
பதினைந்து வயது சிறுவன் ஒரு கொலை செய்கிறான். அதன்பின் தந்தையுடன் ஏழு நாட்களுக்குத் தலைமறைவாய்ச் சுற்றித்திரிந்து விட்டு நீதிமன்றத்தில் சரணடையச் செல்வதுதான் நாவல்.
சிறுகதை வாசிப்பது என்பது திருப்பதியில் லட்டு வாங்குவதைப் போன்றது. நேரத்தை வசமாக்கிவிட்டால் லட்டு நிச்சயம் கிடைக்கும். கவிதை வாசிப்பது என்பது ஒரு கண நேரமே தோன்றும் அற்புத ஜோதியைப் பார்ப்பது போன்றது. பார்த்துவிட்டால் நாம் புண்ணியம் செய்தவராவோம். இல்லையென்றால் நமக்கு ஒன்றுமே தெரிவதில்லை என்ற உணர்வோடு வீடு திரும்ப வேண்டியதுதான்நாவலில் இந்தச் சிக்கல்கள் இல்லை. அவைகள் பல அறைகள் நிறைந்த அரண்மனைகள். குறைந்தபட்ச்சம் உள் நுழைவதற்கும், வெளியேறுவதற்குமேனும் இரண்டு கதவுகள் திறக்கும்.
வெக்கை கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையின் வாயிலாக பல கேள்விகளை நம் முன்னே எழுப்புகிறது. ஒரு பதினைந்து வயது சிறுவனின் மனதில் கொலை செய்யும் எண்ணம் எவ்வாறு எழுகிறது என்பதில் தொடங்கி வாழ்க்கை ஏன் பச்சோந்தியைப் போல் இடத்திற்கு இடம், மனிதருக்கு மனிதர் நிறம் மாறுகிறது போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல நாவல் என்பது தனி நபர்களின் கதைகளாகத் தொடங்கி அது ஒட்டுமொத்த மனிதத்தின் கதையாக மாற வேண்டும் என்று சொல்லுவார்கள். அவ்வகையில் வெக்கை ஒரு சிறந்த நாவல்.
வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து எத்தனையோ விசயங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன. சிதம்பரமும் அவன் அய்யாவும் எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது நான் எங்கோ பார்த்தவர்கள் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. என் சிறு வயதில் நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர் முன் விரோதத்தால் ஒருவரின் காதைக் கடித்து துப்பிவிட்டார் என்று கேள்விப்பட்டதுதான் என் நினைவில் இருக்கும் முதல் வன்முறைச் சம்பவம். பிறகு சாதிப் பிரச்சனையில் நடக்கும் கொலைகள், திருவிழாவில் சண்டை என அவ்வப் பொழுது தெரிந்த இடங்களிலிருந்து அல்லது தெரிந்த மனிதர்களின் வன்முறைச் சம்பவங்களைக் கேள்விப்படுவதுண்டு. ஒவ்வொரு முறையும் நான் யோசிப்பது ஆத்திரத்தில் செய்துவிட்டு கண நேரத்தில் வாழ்க்கையத் தொலைத்துவிடுகிறார்களே என்பதுதான். அதே வேளையில் ஒரு திட்டமிட்டக் கொலை நடக்கும்பொழுது அதன் பின்னால் இருக்கும் கொலை வெறிதான் கண்ணுக்குத் தெரியும். திட்டமிட்டு கொலை செய்பவர்கள் ஆபத்தான மன நிலை உடையவர்கள் என்றே நினைத்துவந்தேன். பதினைந்து வயது சிறுவன் கொலை செய்கிறான், அவனே குண்டு தயாரித்து தன்னைத் துரத்தி வருபவர்கள் மீது வீசுகிறான் என்றாலும் நாம் பார்ப்பது இங்கு வேறு. பழிவாங்குதலில் இருக்கும் நியாயம். அந்த நியாயமும் glorify செய்யப்படவில்லை என்பதுதான் இங்கு சிறப்பு.
குடும்பமே அலைக்கழிப்பிற்கு ஆளான பின்னரும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பதும், ஒன்றாக கைகோர்த்து எதிர்வரும் துன்பத்தை எதிர்கொள்வதும் ஒருவர் மீது ஒருவர் பாசத்தைப் பொழிவதும், வாசிக்கையில் ஒரு துளிக் கண்ணீரையேனும் நிச்சயம் கோரும். அனேக நேரங்களில் நாம் அதிகம் காண்பது  தனிக்குடும்பத்தில் இருக்கும் ஒருவரின் தனியறையில் நடக்கும் கதைகளைத்தான். அவ்வாறிருக்க இவ்வளவு அந்நியோன்யமான ஒரு குடும்பம் மனதிற்கு நெருக்கமாவது இயல்பு. ஒருவர் கூட ஒரு இடத்தில் கூட மற்றவர் மீது கோபமாக பேசாத மனதிர்களாய் வெக்கையில் வரும் ,மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பாசம் மிக  மிகஇயல்பானதாய் இருக்கிறது. Romanticise செய்யப்படவில்லை. படித்து முடித்தவுடன் இயல்புவாதம் என்றால் என்னவென்று புரிகிறது.

வெக்கை வாசித்து முடித்தப் பின் அம்மனிதர்களின் வாழ்க்கையைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது. உடனேயே அது என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியது.வாழ்க்கை என்றால் என்ன என்று என்னைக் கேட்டுக்கொண்டால் அதற்கு சொல்லும் பதிலை நான் எங்கிருந்து பெறுகிறேன். அந்தப் பதில் எனக்குச் சொல்லப்பட்டதாய் இருக்குமா? அல்லது இதை எடுத்துக்கொள் என்று என் முன்னால் வைக்கப்பட்டதாய் இருக்குமா? அல்லது நானாய் உருவாக்கிக்கொண்டதாய் இருக்குமா? சிதம்பரத்திற்கு வாழ்க்கை என்றால் என்ன? அவன் அய்யாவிற்கு, அவன் அம்மாவிற்கு, மாமா, அத்தை, சின்னையா, சித்தி இவர்களுக்கு? உலகம் பல்வேறு அடுக்குகளில் வாழும் மனிதர்களால் ஆனதுதான் என்றாலும் கடைசியில் எல்லோருமே ஒரு பிடிச் சாம்பலாய்ப் போகப்போகிறோம் என்கையில் வாழ்க்கையென்றால் என்னவென்ற கேள்விக்கு  ஆகச் சிறந்த பதிலென்று ஒன்று இருக்க முடியுமா என்று யோசிக்கிறேன். முன்பொருமுறை நானும் என் மாமா மகனும் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு ஆபத்தான விளையாட்டுகளில், சாகசங்களில் உயிரிழப்பவர்களைப் பற்றித் திரும்பியது. நான் அவர்கள் செய்வது முட்டாள்தனம். கிடைத்தற்கரிய வாழ்க்கையை அற்ப விசயங்களில் ஈடுபட்டு வீணாய் விடக்கூடாது என்றேன்.அற்ப விசயங்கள் என்று யார் முடிவு செய்வது. அந்தரத்தில் கயற்றில் நடப்பவனுக்கு அதில் நடப்பதும் தவறி விழுந்து இறப்பதும்தான் வாழ்க்கை. அவன் உயரத்தில் நின்று பார்க்கையில் நாம்தான் அவனுக்கு அற்பமாய்த் தெரிவோம் என்றான். சுயமாய் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை வாழ்பவர்களைப் பார்த்து பொறாமைக் கொள்ளும் அதே வேளையில் அதிகம் வாய்ப்புகள் இல்லாத எளிய மக்களின் வாழ்க்கையைப் பார்த்து பரிதாபம் கொள்வதும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். 

காலச்சுவடு பதிப்பகம்
விலை : ரூபாய் 140

Friday, September 2, 2016

மறத்தல்

எல்லாம் மறந்துபோகும்
ஓர் நாளில்
நம் வீட்டில்
ஒரு தனியறையை
வாடகைக்கு எடுக்கிறோம்
கட்டிடங்கள் ஆகிப்போன
குளம்
மழையை ஏற்க மறுப்பதுபோல்
கண்ணில் வழியும் நீரைத்
துடைத்துக்கொண்டேஇருக்கிறோம்
நம் பிரியத்தின்
எச்சிலை எடுத்து
நாம் ம்
உடல் முழுவதும்
பூசிக்கொள்கிறோம்
தனிமையை
முகர்கிறோம்
ஏசுவிடம்
முள் க்ரீடத்தை
கேட்டு வாங்கி
அணிகிறோம்
நமக்குப் பிடித்தமான
தண்டனையை
தந்துகொள்கிறோம்
நமக்கு மிகப் பிடித்தமானவரைத்
தேர்ந்தெடுத்து
அதற்கு
நீதிபதி ஆக்குகிறோம்

உண்மையில்
எல்லாம் மறந்துபோகும்
ஓர் நாளில்
நாம்
ஒன்றே ஒன்றை மட்டும்தான்
மறந்துபோகிறோம்

Saturday, August 20, 2016

இசை


அவையோர் பெரியோர் அனைவருக்கும் வணக்கம். கவிதை என்று தோன்றியதையெல்லாம், தோன்றியபடி எழுதிக்கொண்டு, ஒன்றேனும் அச்சில் வந்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தவனுக்கு இவ்வளவு கவிஞர்கள் மத்தியில் பேச கிடைத்த வாய்ப்பை பெரிய கவுரவமாகவே கருதுகிறேன். கார்த்திகேயன் அவர்கள் பேசுகிறீர்களா என்று கேட்ட பொழுது உடனேயே இல்லை என்று சொல்ல உதடு துடித்தது. இருந்தும் ஏதோ ஒரு ஆசையில் சரி என்று சொல்லிவிட்டேன்.
தமிழ் இலக்கிய சூழலில் எல்லோரும் சொல்வது இங்கு படைப்பாளியாய் இருப்பது கடினம் என்று. அனேகமாக எல்லா ஆளுமைகளுமே சொல்லியிருப்பார்கள். என்னளவில் வாசகனாய் இருப்பதும் சவாலன விசயமே. அதில் குறிப்பாக கவிதை வாசகனாய் இருப்பது பெரும் சவால். யானையை தடவிப் பார்த்து கதை சொல்லுவதாய்தான் இங்கு கவிதை வாசிப்பு பெரும்பாலும் நிகழ்கிறது. ஒருவேளை நான் ஒரு மூத்த படைப்பாளியாய் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாய் இருந்திருந்தால் படைப்பைப் பற்றி பேசுவது மிக சுலபமாய் இருந்திருக்கும். படைப்பை நீட்டி இது பேரன்பின் தரிசனம் என்றோ படைப்பாளியைப் பார்த்து, நீ என்ன செய்திருக்க தெரியுமா? நீ சவுத் இந்தியாவின் டால்ஸ்டாய், (எல்லோரும் குறிப்பிடும் இன்னொரு பெயர் எனக்கு சொல்ல வராது என்பதால் டால்ஸ்டாய்) என்றோ சொன்னால் போதும் (அது சரி தவறு என்பது இரண்டாம்பட்சம்) நீங்கள் கை தட்டுவீர்கள். எனக்கு ஏன் என்று சொல்ல தேவையிருந்திருக்காது. ஆனால் இங்கு நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால் தவறாகவோ, அதிகப்பிரசங்கித்தனமாகவோ ஏதேனும் பேசினால்  மன்னித்துவிடுமாறு  கேட்டுக்கொள்கிறேன்.
அந்தக் காலம் மலையேறிப்போனது தொகுப்பின் அணிந்துரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் கவிஞர் இசையை பற்றிச் சொல்லும்பொழுது இசை யாரைப் போலவும் எழுதவில்லை; இசை, இசையைப் போல் எழுதுகிறார் என்று குறிப்பிடுகிறார். மேலும் அவர், தடம் இதழில் வந்த அவரின் நேர்காணலில், " இன்று மனுஷ்யப்புத்திரனைப் போல் ஒரு இருபது பேராவது எழுதுகிறார்கள்" என்று ஒரு இடத்தில் சொல்கிறார். உண்மையான வார்த்தைகள் இவை. நானெல்லாம் கவிதை என்று என்ன எழுதினாலும் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரி மனுஷ்யபுத்திரன் என்றே முடிவடைகிறது. ஒரு மூத்த படைப்பாளி தனித்துவமான படைப்புகள், யார் சாயலுமற்ற தனித்துவமான மொழி கொண்ட படைப்பாளி வேண்டும் என்று பேசுவது அச்சூழலில் நிலவும் ஆரோக்கியமின்மையைக் காட்டுகிறது. இதைப் பற்றி மேலும் பேசுவதற்கு அல்லது சொல்வதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. இருப்பினும் ஒரு எளிய வாசகனாய் எனக்குத் தோன்றிய ஒரு சில விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
கவிதை என்பது, "நான் இப்பொழுது கவிதை எழுதப் போகிறேன்" என்று உட்கார்ந்தவுடன் வருவதல்ல. அது வாழும் வாழ்க்கையில் இருந்து உருவாகி வருவது. கே. என். செந்தில் அந்தக் காலம் மலையேறிப் போனது தொகுப்பைப் பற்றி எழுதிய தன் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார். "கவிதையின் கவசங்களை அலங்காரங்களைத் துறந்து உரைநடையால் ஆன கவிதைகளின் வழி கவித்துவத்தை எட்டுவதற்கு மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைத்தான் முன்னோடியாகக் கருத வேண்டியிருக்கிறது."
இதை ஒட்டி மேலும் சிந்திக்கையில் எனக்குத் தோன்றியது - மனுஷ்யபுத்திரனுக்குள் ஒரு சிறந்த கதை சொல்லி இருக்கிறார். அவர் கவிஞராய் இருக்கிறார். அதனால்தான் அவரால் உரை நடையால் ஆன கவிதையில் கவித்துவ உட்சத்தை அடைய முடிகிறது. இது சரியா தவறா இதற்கு முன் யாரேனும் சொல்லியிருக்கிறார்களா என்பதெல்லாம் தெரியாது. செந்தில் அவர்களின் வரிகள் அப்படியே இசைக்கும் பொருந்தும்.  இன்னும் சொல்லப்போனால் கவிதையின் கவசங்களை அலங்காரங்களை மட்டுமின்றி தன்னையே, தான் கவிஞன் என்பதையே களைந்து தன் கவிதைகளை எழுதுகிறார். ஒரு சிறிய உதாரணம்.

ஞானக்கூத்தனின் கவிதைகளைப் பற்றி பேசுகையில் இசை அவரின் ஒரு கவிதையின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.
பொய் சொல்லாமல் சொல்லுங்கள்
 உங்கள் குசுவிற்கு நீங்களே
 மூக்கைப்பொத்திக்கொண்டதுண்டா?
மேலும் இவ்வாறு தொடர்கிறார்: "தமிழ்சினிமா 1931 ல் பேசத்துவங்கியதாக சொல்கிறார்கள் அதன் கதாநாயகர்களில் யாருக்கும் 80 ஆண்டுகளாக குசு வரவில்லை. கடைசியில் 2011 ஆம் ஆண்டு தோழர் தனுஷும், தோழர் செல்வராகவனும் சேர்ந்து அந்த “ சின்ன காற்று புரட்சியை “ நிகழ்த்திக்காட்டினார்கள்"
ஆட்டுதி அமுதே வில் இடம் பெற்றிருக்கும் ஒரு கவிதை:
"பேண்ட் ஜிப் திறந்திருப்பது
வெகு நேரம் கழித்துதான் கவனித்திற்கு வந்தது"
எனது குறைந்த வாசிப்பனுபவத்தில் ஜிப் போடாமல் கவிஞர்கள் கவிதைகளில் வருவதைப் பார்ப்பது இதுதான் முதல் முறை.
ஜெயமோகன் அவர்களின் தளத்தில் .வி மணிகண்டன் என்பவர் இசையின் கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரையில், "எமக்குத் தொழில் கவிதை என்று இருக்க முடியாத தமிழ் கவிஞனுக்கு ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில், உப்பு புளி தேடுவது முதல் இருட்டு கடை அல்வாவில் இளைப்பாறுவது வரை அத்தனையையும் செய்து தீர வேண்டி இருக்கிறது. ஆனால் ஓட்டு மொத்தமாக இலக்கியத்திற்கே ஓரிரு மணி நேரம் மட்டுமே வாய்த்த வாழ்க்கையில், அந்த சில மணி நேரங்களை நம்பியே நம்முடைய துடிப்பும், அலைக்கழிப்பும், ஆழ்நிலைகளும், உக்கிரங்களும் இன்ன பிறவும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அழுது ஆற்ற முடியாத அந்த கோலத்தைக் கண்டு சிரித்து சிரித்து கழிகின்றது இசையின் எஞ்சிய நேரம். நூறு நூறு வருடங்கள் ஆகியும் தமிழ் கவிஞனுக்கு உப்பு புளி சண்டை முடியவில்லை. கவி மனமோ, உள்ளொளி உள்ளொளி என்று குதிக்காமல் இருப்பதில்லை. மரபிலோ, உறுமீன்களை பற்றிய உபதேசங்களுக்கு ஒன்றும் குறைச்சலுமில்லை. இந்த மூன்று புள்ளிகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளியின் அபத்தமே இசையின் களம். அகமும் புறமும் அழிந்த, பின் நவீனத்துவ தமிழ் கவிதையின், முதன்மையான இளங்கவிஞராக இசையை நான் எண்ணுவது இந்த அம்சத்தினால்தான்." என்கிறார். எனக்கு இது புரிந்தது போல் தெரியவில்லை. நான் இசையின் கவிதைகளை, கவியுலகை, அவர் ஜானக்கூத்தனின் கவிதைகள் பற்றி பேசும்போது சொன்ன வரிகளின் வாயிலாக புரிந்து கொள்கிறேன்.

"நாம் மாசற்றதற்கு ஏங்குகிறோம். மாசற்றதையும் மகத்தானதையும் ரொம்பவும் ஆராதிக்கிறோம். மாசற்ற அழகு.. மகத்தான அன்புமாசற்ற கவிதை.. மகத்தான சித்தாந்தம்.. மாசற்ற மொழி.. மகத்தான தலைவர் ..என. இப்படியாக நாம் பளிங்கில் கீறல்களைப் பொறுப்பதில்லை. லட்சியத்தின் உடலில் ஒரு சின்ன அழுக்குத்திட்டைக் காட்டினால்பார்க்கமாட்டேன்என்று நாம் தலையைத் திருப்பிக் கொள்கிறோம்."

இசை தலையை திருப்பிக்கொள்ளவதில்லை. அவர் பார்க்கிறார். ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும்  ஒவ்வொரு நாளும் கடந்து போகும் ஒவ்வொருவரையும் அவர் பார்க்கிறார். அவர் சோ கால்ட் புனிதங்களை, அப்புனிதங்கள் உருவாக்கும் புனிதர்களைப் பார்த்து சிரிக்கிறார். வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ள சிரைக்காத யோகிகளை அல்ல ரிமோட் கடைக்காரர்களிடம் போங்கள் என்கிறார்உன் அப்பனுக்கு சிரட்டையில் தண்ணி ஊற்றிய பாவந்தான் நான் இப்படி ஒற்றை சொல்லிற்கு நாயாய் சாகிறேன் என்று வருந்துகிறார்.
கவிஞர்கள் அனைவருக்கும் மிக புகழ்பெற்ற கவிதைகள் என்று ஒன்று இருக்கும். தமிழ்தான் என் மூச்சு ஆனால் அதைப் பிறர் மேல் விட மாட்டேன் என்றால் கவிஞர் யாரென்று தெரிந்துவிடும்காற்றின் தீராத பக்கங்களில் வாழ்க்கையை எழுதிப்போன சிறகு யாருடையது என்று நாம் சொல்லத்தேவையில்ல. இருப்பதற்குதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் என்று சொன்னவர் சுசிலாவிற்கு வேண்டியவர் என்பது ஊரறிந்த ரகசியம்இசையின் நைஸ் கவிதை அப்படி ஒரு முத்தாய்ப்பான கவிதை. சமீபத்தில் கூட மனுஷ் அவர்கள் தன் பேஸ்புக் பக்கத்தில் அக்கவிதையை பகிர்ந்திருந்தார். எனக்கு நைஸை விட பிடித்தது அவரின் கழிவிரக்க கவிதைதான்.

ஒரு கழிவிரக்க கவிதை
கண்ணைக் கசக்கிக் கொண்டு
என் முன்னே வந்து நிற்கிறது
அதன் மேனியெங்கும் கந்தலின் துர் நாற்றம்
ஊசிப்போன வடையை தின்றுவாழும் அதை
கண்டாலே எரிச்சலெனக்கு
"போய்த்தொலை சனியனே....
கண்ணெதிரே இருக்காதே..."
கடுஞ்சொல்லால் விரட்டினேன்.
காலைத் தூக்கிக் கொண்டு
உதைக்கப் போனேன்
அது தெருமுக்கில் நின்றுகொண்டு
ஒருமுறை திரும்பிப் பார்த்தது
நான் ஓட்டோடிப் போய்க் கட்டிக்கொண்டேன்.

ஒரு வகையில் இக்கவிதை வெளிப்படுத்தும் கவிமனம் மேலும் பல கவிதைளில் வெளிப்படுகிறது. அல்லது அக்கவிதைகள் மூலம் இசையின் கவி மனதைப் புரிந்து கொள்ள முடிகிறது இல்லை நம்மையும் நம் மனம் பல நேரங்களில் செயல்படும் விதத்தையும் புரிந்துகொள்ள முடிகிறதுஇந்த நைஸ்தான் வேண்டுமோ என்று நிதனாமாக கேட்கும் இசை லூஸ் ஹேருக்கு மயங்குகிறார். பின் அவரே அதிகாலை 5 மணிக்கு எல்லாக் கண்ணும் பீளையுண்ணும் கண் என்கிறார் ( இவ்விடத்தை பெண்ணியவாதிகள் நோட் பண்னிக்கவும்) இந்த வீக்கெண்ட் ஜாலியா மகாபலிபுரம் போலாமா என்று காதலை கழட்டிவிடும் அவர் ஏனோ உன் நினைவாக இருக்கிறது என்று கவிதை எழுதுகிறார்.

இசையின் கவிதைகளின் சிறப்பம்சாகமாக நான் நினைப்பது அவரது கவிதை மாந்தர்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. ஏன் ஓர் கவிதையில் கடவுளும் கிடவுளாகிப் போகிறார். இசையின் கவிதை மாந்தர்கள் நாம்அன்றாடம் சந்திப்பவர்கள். உடற் திறன் குறையுள்ள குழந்தைமன நலம் குறைந்தவர்கள், பரோட்டா மாஸ்டர், மேலும் முத்துவேல், ஞானவேல், தங்கவேல் போன்றவர்கள்தான். பரோட்டா மாஸ்டர் என்றவுடன் நினைவுக்கு வருகிறது-ஒரு கவிதையில் உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்.பி.பி என்று கேட்பது அழகு.

போலித்தனைங்களை, அல்லது போலியான நம்பிக்கைகளுக்குள் அல்லது பிறர் தரும் சட்டைக்குள்  நம்மை அடைத்துக்கொள்ளுவதைப் பற்றி கேலி செய்யும் அவர்தான் போங்கடா நீங்களும் உங்க இதுகளும் எனக்கு என் ப்ரவுன் கலர் ஜட்டிதான் முக்கியம் என்கிறார். நாம் சில நேரங்களில் நம்மை மட்டுமல்லாது பிறரையும் எவ்வாறு புனித வார்த்தைகளால் வஞ்சிக்கிறோம் என்பதற்கு இடமுலை வடிவக்கல் என்கிற கவைதையை வாசிக்கிறேன்

ஒரு வழியாக
கவர்மெண்ட் கக்கூஸிலிருந்து
வெளியே வந்துவிட்டான்
துரத்தியடித்த நாய்களில் ஒன்று
திரும்ப வந்து உறுமி நிற்கிறது
நடப்பதும் ஊர்வதும் கண்ட அதற்கு
தவழ்வது பிடிக்கவில்லை
இவன் பாக்கெட்டில் கைவிட்டுத் தேடினான்
இன்னுமொரு கல் மிச்சமிருந்தது
அதை எடுத்து ஓங்கி எறிந்தான்
மொழியியல் வல்லுனனும்
தன்னம்பிக்கைப் புழுத்தியும்
திடுக்கிட்டு எழுந்திருக்க
உடைந்து சிதறியது
"மாற்றுத்திறனாளி" எனும் சொற்கட்டு.
மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றில் எழுந்து போகும் வாய்ப்பு உனக்கும் எனக்கும் சரி சமமாக வழங்கப்படவில்லை என்ற வரி ஒன்று வரும். நெஞ்சின் ஆழத்தை தைத்த வரி. அன்றிலிருந்து யாரிடமோ நான் பல முறை மன்னிப்பு கேட்டுவிட்டேன். கண்களை திடீர் திடீரென்று குளமாக்கும் வரி அது. இரண்டு கவிதைத் தொகுப்புகளில் இரண்டு மூன்று இடங்களில் இசை அவ்வரியை நினைவுபடுத்தினார்தன்னிம்பிக்கை புழுத்தி போடா என்று திட்டுவது மனுஷ் அவர்களின் வரியின் இன்னொரு பக்கம்.

என் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், ஒவ்வொரு காதலர் தினத்தின் போதும் நாம் இன்றைக்கு யாருக்கேனும் நம் காதலைச் சொல்லுவோம் அல்லது நம்மிடம் யாரேனும் ஒருவர் வந்து தன் காதலைச் சொல்லுவார் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம் கூட அப்படித்தான் போனது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட கவிஞர் எழுதுகிறார்.

ஒவ்வொரு அதிகாலையிலும்
அவசர அவசரமாகப் பல்துலக்கி முடிக்கையில்
ஒரு நினைப்பு
இன்று எவளோ ஒருத்தியின் இதழ்கடித்துத் தின்போமென

தம்பி
இன்னும் கொஞ்சம் பேஸ்டை பிதுக்கி
இன்னும் கொஞ்சம் துலக்குகிறான்


எனக்கு கவிஞர் என் தோள் மேல் கை போட்டு கவிதை பாடுவது பிடித்திருக்கிறது. எனது குறைந்த வாசிப்பனுபவத்தில், குறைந்த பட்ச புரிந்துணர்வில் எனக்குத் தோன்றுவது. பெரும்பாலான கவிஞர்கள் அகத்தைப் பேசினாலும், புறத்தைப் பேசினாலும், ஒரு மேடையின் மீது ஏறி நின்று கொண்டு பேசுகிறார்கள். வாசகன் எதிரே நின்று கொண்டு கேட்கிறான். இசை வாசகனோடு நின்று கொண்டு பேசுகிறார்.இதற்கு வாசகன் மீது நம்பிக்கை கொண்ட மனம் தேவை. அதனினும், மேலாக தன் மீது அசாத்திய நம்பிக்கையுள்ள மனம் தேவை. படைப்பதனாலே என் பேர் இறைவன் என்று பாடும் மனதிற்கு ஒப்பான நம்பிக்கைகவிதைகள் என்பது ஒரு ரகசிய உலகம் அல்லது கவிதைக்குள் நுழைவது என்பது பல ரகசியங்கள் நிறைந்த குகைக்குள் நுழைவது போன்றது என்ற சராசரிப் பொதுப் புரிவுகள் உள்ளவாசகனை இசை அவன் வாழும் உலகிற்கு கூட்டிச் செல்கிறார். அவன் வாழ் நாளின் ஒரு நாளை அவனுக்குப் போட்டு காட்டுகிறார்பைத்தியத்தின் டீயை அவனை சுவைக்க வைக்கிறார். கிரிக்கெட் பார்க்க அழைத்துச் செல்கிறார். பரோட்டா மாஸ்டரின் கானத்தை கேட்க வைக்கிறார். ஸ்கூட்டிகளுக்குப் பின்னால் போலாம் என்கிறார். நாம் பார்த்திராத மகிழ்ச்சி ததும்பும் சுந்தர மூர்த்திகளின் முகங்களை நமக்கு காட்டுகிறார். நாம் மனம் தளரும்போது தம்பி கோட்டைக் கழட்டு ஒரு வேம்பின் கீழே குறையுடையில் கிடப்போம் வா என அழைக்கிறார். அப்பொழுதும் மனம் ஆறுதல் அடையாத பொழுது ஆம் தற்கொலைக் கவிதைகள் க்ளீஷே ஆகியிருக்கலாம், தற்கொலையைப் பார் எவ்வளவு புத்தம் புதிதாய் ஜொலிக்கிறது என்று நம் தோள் மீது கை போடுகிறார். சற்று மனம் தேறும் வேளையில் நம் அறவுணர்வைச் சீண்டுகிறார். சரி சரி வா மூக்கைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு போவோம் என்று அழைத்துச் செல்கிறார்.


அந்தக் காலம் மலையேறிப்போனது, ஆட்டுதி அமுதே இரண்டிலும் சேர்த்து மொத்தம் 148 கவிதைகள் உள்ளன. நான் வாசகனாய் என் கறார்தன்மையைக் காட்டுவதற்காக 145 என்றுதான் சொல்வேன். அந்த மூன்றைப் பற்றி அடுத்து சொல்கிறேன். இந்த 145 கவிதைகளைப் படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றுவது கவிஞர் அகத்தைப் பற்றி பேசினாலும் புறத்தைப் பேசினாலும் அவை வாசகனான நம்மைப் பேச வைக்கிறது என்பதுதான் அல்லது நம்மை ஒரு நிலையில் நிற்க விடுவதில்லை. சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது, கோபப்பட வைக்கிறது, வெட்கப்பட வைக்கிறது, ஆறுதல் படுத்துகிறது. கவதைகள் மூலம் இவ்வளவு நெருங்கி வருவதற்கு அவரது மொழி மட்டுமே காரணமில்லை என்பது உறுதி.



என் கறார்தன்மையைக் காட்டுவதற்காக மூன்று கவிதைகளை மறுத்தேன் என்று  சொன்னேன் இல்லையா அவை.

1. என் ஊறுகாய் மட்டை திருவனந்தபுரத்திலிருக்கிறது என்று முடியும் கவிதை
2. ஒரே குத்து சும்மா பயமுறுத்தாதே என்ற கவிதை
3. செல்பொன் கவிதை
இறுதியாக பீடி குடிக்கும் உதடுகளுக்கு முத்தம் என்று எழுதிய கவிஞர் கைகளுக்கு, தலைவி ரேஷ்மாவின் படத்தை பேஸ்புக்கில் முகப்பு படமாக வைத்த அண்ணனின் கைகளுக்கு ஒரு ஆயிரம் முத்தங்கள்.


நன்றி