Sunday, August 10, 2014

எக்ஸைல் – ஒரு செய்தித்தாள் இலக்கியம்

(இப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல. என் மனம் புண்பட்டதால் எழுதுவது)
எக்ஸைல் – முதல் நூறு பக்கங்கள் என்று ஏற்கனவே ஒரு பதிவு எழுதிவிட்டபடியால் எங்கிருந்து தொடங்குவது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது ஆங்கில நாளிதழ் ஒன்று கண்ணில் பட்டது(“என்று” என்கிற வார்த்தை இருமுறை மட்டும் தான் வந்துள்ளது என்பதைக் கவனித்தீர்களா){லொள்லொள்: ஏன்டா ஒரு பதிவ படிக்கும் போது எந்த வார்த்த எத்தன தடவ வருதுன்னாடா ஒருத்தன் கவனிப்பான்} எக்ஸைல் வாசிக்கத் தொடங்கியதிலிருந்தே நாளிதழ் படிப்பதை மறந்துவிட்டிருந்தேன். பக்கங்களைப் புரட்டப் புரட்ட காரணம் புரியத் தொடங்கியது. கல்வி, களவி, அன்றாட நிகழ்வுகள், இசை, இலக்கியம், சினிமா, விளையாட்டு என ஒரு செய்தித்தாளில் என்னவெல்லாம் இருக்குமோ அதெல்லாம் ஒரே புத்தகமாய் எக்ஸைலில் இருக்கிறது. எனவே இதை நான் ஒரு செய்தித்தாள் இலக்கியம் என்று வகைப்படுத்துகிறேன்.{லொள்லொள்: நிஜமாகவே அப்படி ஒரு இலக்கிய வகை இருந்து தொலைக்கப் போகிறது}
இப்படி நான் கூறியவுடன் என்னை இலக்கிய நண்பர்கள் ஒரு பழமைவாதி, உங்களுக்கெல்லாம் ஒரு ஊரில் ராஜா இருந்தார், பாட்டி வடை சுட்டாள் என்று தான் எழுதவேண்டும் என்று கோபிப்பார்கள். அதற்காக ஒரு மளிகைக்கடை மாதிரி{லொள்லொள்: டிபார்ட்மென்டல் ஸ்டோர் என்று சொன்னால் தான் பல பேருக்கு புரியும்} எல்லாவற்றையும் வைத்து விற்றுக்கொண்டிருக்கவேண்டாமே. இதைக் கேட்டால் நம்மைத் திட்டுகிறார்கள்.
இதுவரை படித்தவரையில் லொள்லொள் என்று ஒன்று கூடவே குறைத்துக்கொண்டே வருகிறதே அது என்னவென்று தெரிய வேண்டுமா? எக்ஸைலில் கொக்கரக்கோ என்று ஒன்று வருகிறது{லொள்லொள்: கடும் கோபத்தில் இருக்கிறேன்.. வாயைக் கிளறாதே} அது என்ன என்று புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். சாரு வாசகர் அதைப் பற்றி இப்படிக் கூறுவார்.. ‘ எங்காவது கதையில் இல்லாத ஒரு கதாப் பாத்திரம் அந்தக் கதையை நகர்த்திச் சென்று பார்த்திருக்கிறீர்களா? என் தலைவன் கொக்கரக்கோ..” நீங்கள் ஆனந்த விகடன் படித்ததில்லையா.. அதில் ஒரு டவுசர் போட்ட குரங்கு ஒன்று வருமே. அது கூட விகடனில் இல்லாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது :)
நேற்று சாரு வாசகர் வட்ட முகப் புத்தகப் பதிவுகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் சாருவின் முதல் வாசகரில் ஒருவர், பிரபல கீசாளர் (இவர் படித்தப் பின்புதான் புத்தகத்தை அச்சுக்கே அனுப்புகிறார் சாரு) இவ்வாறு எழுதியிருந்தார். இப்பொழுதெல்லாம் எழுத்தாளர்கள் கையில் பேனா இருக்கிறது, பேப்பர் இருக்கிறது என்று சவ சவ என்று எழுதுகிறார்கள். சாரு மாதிரி பக்கத்து வீட்டில் பேசுவது போல் அன்றாட நடையில் சொல்லவந்ததை சொல்ல வேண்டாமா. {லொள்லொள்: ஆமாம். உண்மைதான். கொலையைப்பற்றி எழுத வேண்டுமென்றால், கொல என்று எழுதினால் போதாதா} அதைப் படித்த பின்பு தான் எனக்கு ஒன்று நியாபகத்திற்கு வந்தது. இங்கு வேலைக்கு சேருவதற்கு முன் சேத்துப்பட்டில் ஒரு குழுமத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் வரும் கடைசி மின்சார ரயிலில் தான் வீடு திரும்புவேன். அப்பொழுதெல்லாம் அங்கு ஒரு நடை மேடையில் ஒரு பெண் இல்லை ஒரு பிசைக்காரக் குடும்பம் பேசும் கெட்ட வார்த்தைகளை {லொள்லொள்: கெட்ட வார்த்தைகளைப் பற்றி பேசாதே. இல்லையென்றால் ஒரு இலக்கியப் பதிவை வாசிக்க வேண்டியிருக்கும்}கேட்டிருக்கிறேன். இப்பொழுது எக்ஸைல் படித்தபின்பு தான் புரிகிறது அவர்கள் எல்லாம் எவ்வளவு இலக்கிய நயத்தோடு பேசியிருக்கிறார்கள் என்று.
எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு புத்தகத்தை ஒரு நேரத்தில் படிக்கமட்டேன். வாங்கி வைத்திருக்கும் அனைத்து புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்து பிறகு எதைப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைப் படிப்பேன் {லொள்லொள்: நீ ஒரு பின் நவீனத்துவ வாசகன்டா} . அப்படி ஸிரோ டிகிரி வாசிக்க ஆரம்பித்த பொழுது ஒரு விளையாட்டைக் கண்டு பிடித்தேன். புக் கிரிக்கெட் மாதிரி ஒரு பக்கத்தைத் திறக்க வேண்டும். அதில் உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொல் இருந்தால் எனக்கு பாயின்ட் இல்லை என்றால் மைனஸ் பாயின்ட். {லொள்லொள்: விளையாட்டில் இது ஒரு உச்சம்}
இதற்கு மேல் இந்தப் பதிவைத் தொடர முடியவில்லை. இ-லெட்டெர் வந்து விட்டது. நான் போய் பார்க்கப் போகிறேன். சரி எக்ஸைல் படிக்கலாமா வேண்டாமா என்று யாராவது கேட்டீர்கள் என்றால் கட்டாயம் படியுங்கள். இதில் கொட்டப்பாக்கு ரகசியம் ஒன்று இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள கட்டாயம் இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன் :)
{லொள்லொள்: தொடரும்}
பி:கு: நண்பர்களே, நான் இந்தப் பதிவை ஒரு சாதனையாகவெல்லாம் கருதவில்லை. எனக்கு சாருவையையும் தெரியாது யாரையும் தெரியாது. இது ஒரு ஷேர் ஆட்டோ பிக்சன் மட்டுமே. {லொள்லொள்: Yes, a first time ever! }

No comments:

Post a Comment