Monday, December 15, 2014

இனி ஒரு விதி செய்வோம்

நம் நாட்டில் எழுத்தப்பட்ட சட்டங்களை விட, எழுதப்படாத சட்டங்களே நாட்டை ஆள்கின்றன என்று நீதிபதி ஒருவர் சொன்னதாகப் படித்தது நியாபகம் வருகிறது. எழுதப்படாத சட்டங்களுக்கு கலாச்சாரம், பண்பாடு என்று பெயர் இருக்கலாம். கலாச்சாரம் பற்றி பேசுவது எறும்புப் புற்றுக்குள் கையை விடுவது போன்றது. நிமிடத்திற்குள் கை முழுவதும் ஆயிரம் எறும்புகள் அப்பியிருக்கும்.
கலாச்சாரம், பண்பாடு என்ற சொற்களுக்கு அர்த்தம், விளக்கம், ” நாம பசி அடங்கி சாப்படற இட்லி அடுத்தவங்களோடது” என்ற ரீதியில் தருவது ஆபத்தானது. அத்தகைய ஒற்றை வரி அர்த்தங்களைக் கற்றதனால்தான் இன்று பலக் கலாச்சாரப் பிரச்சனைகள் வருகின்றன. மனித இனம் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து இச் சொற்களுக்கான அர்த்தம் எடுக்கப்பட வேண்டும்.
என் புரிதல்: ஒன்றாக வாழத் தொடங்கிய ஒரு குழுவின் வாழ்க்கை முறை, அவை சார்ந்தவைகள், நம்பிக்கைகள், இவற்றிலிருந்த பொதுவானவையின் தொகுப்பே கலாச்சாரமாகிறது. பின் அடுத்த தலைமுறைகளை அவை வழி நடத்துகின்றன. இவ்வாறு கூறும்பொழுதே ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பண்பாடு இருக்கும் என்பது புரியும். அமெரிக்காவில் ஒரு செயல் சரியென பார்க்கப்படுவதும், இந்தியாவில் தவறென அதே செயல் பார்க்கப்படுவதும் அதனால்தான்.
பண்பாட்டின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் மறுக்கப்படும் தனிமனித உரிமைகளைப் பற்றி பேசவே இதை எழுதத் தொடங்கினேன். தனி மனித உரிமை என்றால் என்ன. அடுத்தவர் மூக்கைத் தொடத வரை என் சுதந்திரம் உள்ளது என்ற சுதந்திரத்திற்கான அர்த்தத்தைப் பொறுத்திப் பார்க்கலாம் .ஆனால் நடைமுறையில் இந்த விளக்கம் அர்த்தமற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
எல்லாவற்றையும் சரி அல்லது தவறு என்று பார்ப்பதின் விளைவாக எழுகிறது பிரச்சனை. அதிலும் இது சரி, இது தவறு என்று நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை வைத்துக்கொண்டு இவற்றைச் செய்வதுதான் மிகப்பெரியப் பிரச்சனை. இவை வீட்டிலேயே தொடங்கி விடுகிறது. சரிக்கும், தவறிர்க்குமான வித்யாசங்களை உணரச் செய்வதற்குப் பதில் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்கிறோம். அத்தகையக் கற்பிதங்கள் எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. பகல் என்றால் வெளிச்சம், இரவென்றால் வெளிச்சமின்னை என்று சொல்லும்பொழுதே இங்கு பகலென்றால் இன்னொரு இடத்தில் இரவு, இங்கு இரவென்றால் இன்னொரு இடத்தில் அதுவே பகல் என்று சொன்னோமேயானால் எல்லோரும் ஒன்றாக மேற்கொள்ளும் பயணமல்ல வாழ்க்கை என்று புரியவரும்.
வாழ்க்கை. எங்கிருந்து வருகிறோம் எங்கு போகிறோம் என்பதே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் விளக்கப்படும்பொழுது நம் நம்பிக்கைகளின் பெயரால் மற்றவரின் வாழ்க்கையில் குறுக்கிடுவது அறிவார்ந்த செயலாகாது.
தனிமனித உரிமை என்று சொல்லிக்கொண்டு எதைவேண்டுமானாலும் செய்யலாமா என்று கேட்பது தனி விவாதம். தனிமனித உரிமை என்ற ஒன்று இருக்கிறது என்பதே இங்கு பலருக்குத் தெரியாத நிலையில், முதலில் அடிப்படைகளைச் சரி செய்து கொள்வோம்.
நம் வாழ்க்கையை மட்டும் நாம் வாழவேண்டுமென்று இனி ஒரு விதி செய்வொம்.

No comments:

Post a Comment