நீட்டியோ
சுருக்கியோ
எப்படி எழுதினாலும்
ஒரு வேசியைப்
பற்றியக்
கவிதையில்
பல ஆண்களின்
வியர்வை நெடியே
அடிக்கிறது!
மரபோ
புதுக்கவிதையோ
எப்படி
எழுதினாலும்
போலிச் சாமியார்களைப்
பற்றியக்
கவிதை யொன்றில்
ஏமாளிகளே பளிச்சிடுகிறார்கள்!
போர்களைப் பற்றி
எப்படி எழுதினாலும்
கவிதை
அர்த்தமற்றதாகவே
வருகிறது
எப்படி எழுதினாலும்
ஒரு குடும்பத்தைப்
பற்றியக்
கவிதையில்
குடும்பத் தலைவி
தலைப்பாக வருவதேயில்லை!
சாதிகளைப் பற்றி
எப்படி எழுதினாலும்
கவிதையில்
சில
வார்த்தைகளுக்கான
இட ஒதுக்கீடு
அவசியமாகிறது!
எங்கிருந்து எழுதினாலும்
மதங்களைப் பற்றிய
ஒரு கவிதை
தொலைந்து
போய்விடுகிறது!
ஒருவருக்கு ஒரு வரி
என்றாலும்
வன்புணரப்பட்டவர்களைப் பற்றிய
ஒரு
கவிதை
முடிவதேயில்லை!
No comments:
Post a Comment