Monday, December 15, 2014

Phillip Hughes

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் கிரிக்கெட் உலகில் பெரிய சோகத்தைத் தந்து கொண்டிருக்கும் சமீபத்திய நிகழ்வு. இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காலம் சுற்றும் வேகம் பன் மடங்காகிவிட்ட நிலையில் ஒவ்வொரு நிகழ்விற்கும், அது ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் ஆயுட்காலம் வெகு குறைவு. முன்னர் ஒரு பதிவில் நாளையோ நாளை மறு நாளோ மறந்து விடப் போகிற ஒரு மரணத்திற்கு என் கண்ணீர் அஞ்சலி என்று எழுதியிருந்தேன். இப்பொழுதும் அவ்வரிகளே நினைவிற்கு வருகின்றன.
பிலிப்பின் மரணம் மிகவும் துரதிருஷ்டவசாமனது. மிக இள வயதில் அவருக்கும் ஏற்பட்டிருக்கும் இம்முடிவு வேறு யாருக்கும் நிகழக்கூடாத ஒன்று. உலகின் பல பகுதி மக்களும் தங்களின் வருத்தங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவருக்காக இரண்டு நிமிடங்கள் ஒன்றாய் செலவு செய்கிறார்கள். இதைப் போன்ற துக்ககரமான நிகழ்வுகளிலெல்லாம் நான் கவனிப்பது, வியப்பது இது ஒன்றே. இந்த ஒற்றுமை, மனித்தன்மை ஏன் மற்ற நேரங்களில் அதிகம் வெளிப்படுவதில்லை. ஏன் ஒரு பெருந்துயரில் ஒன்று சேரும் நாம் மற்ற நேரங்களில் சேருவதில்லை. ” நல்ல விசயத்துல கூட இருக்கறமோ இல்லையோ கஷ்டக் காலத்துல இருக்கனும்” என்று ஏன் சொல்லி வளர்க்கிறார்கள். இப்படி ஒன்று சேர ஒரு இழப்பு ஏற்படத்தான் வேண்டுமா?
ஒரு மரணம்
எத்தனைப் பேரை
அழ வைக்கிறது
ஒரு மரணம்
எத்தனைப் பேரை
ஒன்றாகச் சேர்க்கிறது
ஒரு மரணம்
எத்தனைப் பேரின்
நேரத்தை
தன் பக்கம் இழுக்கிறது
ஒரு மரணம்
எத்தனை நாடுகளின்
தலைப்புச் செய்தியாகிறது
ஒரு மரணந்தான்
எத்தனை அனுதாபங்களை
எத்தனை இரங்கல் செய்திகளைச்
சம்பாதிக்கிறது
இதுபோல்
ஒவ்வொரு மரணமும் நிகழ்ந்தால்?
ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னும் நிகழ்ந்தால்?
யாரும் பிரியாத‌
ஒரு மரணம் வேண்டும்
எதுவும் நிகழாத‌
மரணம் தினம் வேண்டும்
இம் மானிடர்
ஒன்றாய்ச் சேர‌
இம் மானிடர்
மானிடராய் வாழ‌
யாரும் சாகாத‌
நாள்
தினமும் வர வேண்டும்!!

No comments:

Post a Comment