Monday, December 15, 2014

மேதகு குடிகாரர்கள் பேச்சு விடிஞ்சா போச்சு

இப்பொழுதெல்லாம் குடிகாரர்கள் என்று தனியாக யாரும் இல்லையென்பதால் ஒருமையில் எல்லாம் அழைத்தால் அடிதான் விழும். சமீபமாக, இரட்டை நிலைப்பாடு அல்லது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நிலைப்பாடு, இடத்திற்கு தகுந்தாற்போல் கொள்ளும் நிலைப்பாடு உடைய மனிதர்களைப் பற்றி அடிக்கடி கேட்கிறேன் அல்லது பார்க்கிறேன்.
‘மாத்தி மாத்தி பேசுறான் பாருடா பச்சோந்தி’ என்று பொதுவாக இவர்களை வசைப்பாடுவோம். சற்று யோசித்தால் ஒரே மாதிரி மன நிலையுடந்தான் ஒருவரால் அவர் வாழ் நாளெல்லாம் இருந்துவிட முடியுமா? அப்படி யாரேனும் இதற்கு முன்னர் இருந்துள்ளார்களா? போதி மரத்திற்கு முன் சித்தார்த்தன், பின் புத்தன், இல்லையா? திருடன் வால்மிகி ஆகிறார். காமுகன் அருணகிரி நாதர் ஆகிறார். இவர்களெல்லாம் இருவேறு நிலைப்பாடுடையவர்களாக வாழ்ந்து முடித்தவர்கள்தானே. இது தவறென்று சொல்ல முடியுமா? இயலாது. இவர்கள் ஒரே நேரத்தில் இரு விதமாக இருந்தவர்கள் இல்லை. ஒரு நேரத்திற்குப் பின் ஒரு நிலைப்பாடு எடுத்தவர்கள். சரி. இன்னொரு எடுத்துக்காட்டுப் பார்க்கலாம். ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்தது. ஒரு ஊரில் இருந்த மக்கள் எல்லோரும்/ பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாறுகின்றனர். மாற வேண்டிய சமூகச் சூழல். இதில் குறிப்பிடத் தகுந்த விசயம் என்னவென்றால் மதம் மாறிய யாரும் அவர்கள் குடும்ப உறிப்பினர்களைக் கட்டாயப் படுத்தவில்லை. விரும்பாதவர்களை அவர்கள் மதத்திலியே இருக்க அனுமதிக்கிறார்கள். அடுத்த தலைமுறை வருகிறது. அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய நேரம் வரும்பொழுது ஒரே குடும்பத்தில் இருவேறு மதங்கள் இருப்பது பிரச்சனை ஆகிறது. அப்பொழுது ஒரு குடும்பத்தலைவர் தன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களின் மதத்திற்கே திரும்புகிறார். இக்காரியத்தை மத அடிப்படைவாதிகள் தவிர யாரேனும் தவறென்று கூறுவார்களா?
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மாதிரி இருப்பது தவறு போல் தோன்றினாலும் அனேகமாக நாம் எல்லோருமே அவ்வாறுதான் இருக்கிறோம். நம்மில் எத்தனைப் பேர் நம் அலுவலக மேலதிகாரர்களை ஒரே மாதிரியான மரியாதையுடன் அழைக்கிறோம். எத்தனைப் பேர் நேரில் பார்க்கும் பொழுது வயதில் மூத்தவரை அண்ணா என்று அழைத்துவிட்டு அவர் தலை மறைவில் ஒருமையில் ஆரம்பிக்கிறோம். ஆக எதுதான் சரி? எதுதான் தவறு?
வாழ்க்கை போராட்டமாகி விட்ட காலங்களில் சரிக்கும் தவறிர்க்கும் அதிக வித்யாசமில்லை.இருப்பினும் ஏட்டில் ஒரு விதி எழுதுவதற்காக: இதுதான் சரி, இது தவறு, என்பதற்காகப் பார்த்தால் ஒருவர் தன் வாழ்க்கை விழுமியங்களை மறந்து அல்லது அப்படி ஒன்றே இல்லாமல் வாழ்ந்தால் அது தவறெனக் கொள்ளலாம். குடிகாரர்கள் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கையின்பால் கூறும் வாக்கியம். அவர்கள் நிச்சயம் காலையில் மாறிவிடுவார்கள் என்பது இங்கு நம்பிக்கை. அலுவலக மேலதிகார்களை மரியாதையின்றி அழைத்தாலும் அங்கு நம்பிக்கைக்கு எந்த குறையுமில்லை. ஆக ஒருவர் தன் மேலுள்ள நம்பிக்கையை இழக்கும் வண்ணம் மாறுவாராயின்/ மாறிக்கொண்டே இருப்பாராயின் அது தவறாகிறது. மற்றபடி எனக்கு “சொல்லும் ஒன்றுதான், செயலும் ஒன்றுதான்” என்று கூறுவதல்லாம் என்னளவில் இன்னொரு பஞ்ச் டயலாக் மட்டுமே.

No comments:

Post a Comment