Monday, May 25, 2015

"பெரியாரும் பிராமணர்களும் - அபிலாஷ்"

பூணூலும், நாமமும் பிராமணர்கள் மட்டுந்தான் அணிகிறார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது. பூணூல் அணியும் மற்ற சமூக மக்களிடம் நீங்கள் பூணூல் அணிய வேண்டாம் என்று ஏன் யாரும் இதுவரை சொல்லவில்லை. சிலை உடைப்பு நடத்திய தி.க வினர் பெரியாரின் சிலை அவமதிப்பு நடக்கும்பொழுது ஏன் சலசலப்பும் பதபதைப்பும் அடையவேண்டும். அது வெறும் சிலைதானே? பெரியார் இல்லையே? சரி இதைப் பெரியாரும் பிராமணர்களும் என்ற கட்டுரையில் ஏன் சேர்த்திருக்கிறீர்கள். என்ன சொல்கிறீர்கள்? இதைச் செய்தது பிராமணர்கள் என்கிறீர்களா?

இன்று பிராமணர்கள் அசைவம் உண்ண ஆரம்பித்துவிட்டார்கள் என்று எழுதிவிட்டு அவர்களில் "தொட்டால் தீட்டு" பார்க்கும் ஒருவரைப் பற்றி எழுதுகிறீர்கள். விதிவிலக்கு என்ற வார்த்தையை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியுள்ளீர்கள். ஏனென்றால் அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்ட யாரும் இன்னமும் தீட்டு பார்க்க மாட்டார்கள். பிராமணர்கள் அல்லாத மற்ற சமூக மக்களும் விரதம் இருக்கும் நாட்களில் 'சுத்தமாக' இருக்க வேண்டும் என்று மற்றவர்களிடமிருந்தோ கடையிலோ சாப்பிடமாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? இது பிராமணர்களைப் பற்றி மட்டுமேயான பதிவு என்பதால் அதைப் பற்றி எழுதவில்லையா? தொட்டால் தீட்டு என்று ஒதுங்கிக்கொள்பவர்கள் 'தொட்டால்' கொல்வேன் என்று சாதியக் கொலைகளை செய்பவர்களுக்கு மேல் இல்லையா?

சடங்குகள் குறித்து விமர்சிக்கப்பட்டு வருவதால் பிராமணர்களுக்குள் புகைச்சல் இருக்கிறது சரி. ஆனால் அவர்கள் மட்டும்தான் சடங்குகள் செய்கிறார்களா? தமிழகத்தில் மற்ற சமூக மக்களிடம் இல்லையா? அவர்கள் மத்தியில் அந்த புகைச்சல் இல்லையென்றால் அவர்கள் மீது அந்த விமர்சனம் வைக்கப்படவில்லையென்றுதானே அர்த்தம். வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மத்தியில் புகைச்சல் ஏன் இல்லை? இருக்கிறது என்றால் ஏன் அதைப் பற்றி நீங்கள் எழுதவில்லை. மறுபடியும் இது பிராமணர்களைப் பற்றி மட்டுந்தான் எழுதப்பட்ட கட்டுரை என்பதாலா? தமிழகத்தின் பல முனீஷ்வரன், அய்யனார்,அம்மன் கோவில்களில் "பூசாரிகள்" பிராமணர்கள் அல்ல. அங்கு நடக்கும் சடங்குகள் எல்லாம் சடங்குகள் இல்லையா என்ன?
தமிழகத்தில் பிராமணர்கள் மீது காழ்ப்பும் வெறுப்பும் உருவாக்கப்பட்டு அது இன்றளவும் அணையாமல் பார்த்துக்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனென்றால் பெரியரால் மத்த சமூக மக்களிடமும் இருந்த/இருக்கும் சாதிய வெறியை, மூட நம்பிக்கைகளை களைய முடியவில்லையென்பதே உண்மை. அதை ஒரு சமூக மக்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி மறைத்துவருகிறார்கள்.
ஒவ்வொரு சமூக மக்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையை வாழ உரிமையுள்ளது. நீ என்னைப்போல் பேச வேண்டும், என்னைப்போல் உடையணிந்து கொள்ள வேண்டும், என்னைப் போல் எல்லோருக்கும் வீடு கொடுக்க வேண்டும் என்று சொல்வது அடக்குமுறை, ஜன நாயகம் அல்ல. "பந்து போயிண்டே இருக்கு" என்பது அவரையும் மீறி வந்த ஒன்று. நீங்கள் சொல்வது போல் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்த பேசியிருந்தால் ஒவ்வொரு வார்த்தையும் மாறியிருக்கும். நீங்களும் இந்த ஒற்றை வார்த்தையைப் பிடித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். தொடர்ந்து கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுவதால் பிராமணப் பேச்சு வழக்கு பிராமணர்களுக்கு மத்தியிலேயே அழிந்து வருகிறது என்பதுதான் உண்மை.
பிராமணர்களின் சைவ உணவுப் பழக்கத்தை நீட்டி நீட்டி அது உலகையே அழிக்க வல்லது என்று நீட்டியிருக்கும் நீங்கள் தீட்டைக் கடைப்பிடிப்பது பற்றி தலித்துக்களுக்கு மத்திய சாதியினர்மீது புகார்கள் இருக்கலாம் என்று ஒற்றை வரியில் கடந்திருப்பது இந்தக் கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

தொடர்ந்து தமிழகத்தில்,மக்களை பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாதவர்கள் என்று இரட்டைப்படுத்திவரும் முற்போக்காளர்கள்தான் நம் சாபக்கேடுகள். ஏனென்றால் இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான சாதிகளை இரண்டாகப் பிரிப்பதன்மூலம் சாதியக் கொடுமைகளை மறைமுகமாக வளர்த்துதான் வருகிறார்கள். சாதியக் கொடுமைகள் என்பதை பிராமணர்கள் மூலம் இன்று தமிழகம் அனுபவித்து வரவில்லை. சாதிய அடுக்குளில் கடைசியில் இருக்கும் மக்களின் மீது மற்ற மொத்த சமூகமும் ஏறி உட்கார்ந்திருக்கிறது என்பதை ஒற்றை வரிகளில் கடந்து போக முடியாது.

"பிராமணர்கள் இந்துமதத்தை ஆரோக்கியமாய் வைத்திருக்கவும், தம்மை பொதுசமூகத்துடன் ஒன்றிணைக்கவும் மதத்தை ஒரு கண்ணாடி கோப்பையை போல் பற்ற கற்க வேண்டும். " இதைவிட வேடிக்கையான வரி இருக்க முடியாது.  இந்து மதத்தை ஆரோகியமாக வைத்திருக்க பிராமணர்களுக்கு அறிவுரைக் கூறுவது கேலிக்கூத்து. பிராமணர்கள் மட்டுந்தான் இந்துமதமா? நீஙகள், எண்ணிக்கை அளவில் சிறுபான்மையாக இருக்கும் சமூகத்திடம் அவர்களின் மதத்தைக் காக்க அறிவுரை கூறுகிறீர்கள் என்றால் அந்தச் சிறுபான்மை சமூகத்திடந்தான் ஒட்டுமொத்த அதிகாரம் இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இவ்வளவுகாலம் நடந்த போராட்டங்கள் பயனளிக்கவில்லை என்று அர்த்தமாகிறது. அல்லது மற்ற சமூக மக்களின் இடங்களை நீங்கள் இன்னமும் தரவில்லை என்பதைக் காட்டுகிறது.
மற்ற சமூக மக்களின் குறைகளை ஏன் சுட்டிக்காட்ட மறுக்கிறீர்கள் என்று கேட்பது அபத்தமல்ல. ஒன்று, இங்கு ஜனநாயகம் இல்லை அல்லது உங்களுக்குத் தைரியம் இல்லை. ஏனென்றால் சமூகம் என்பது, அது எதுவயப்பட்டிருந்தாலும், ஒட்டு மொத்த மக்களும் சேர்ந்ததுதான். எங்கு குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.
அடித்து உடைக்காமல் எதையும் வளர்க்க முடியாது என்பது உண்மையல்ல. தீவிரவாதம். :) அகிம்சை மூலம் சுதந்திரமடைந்த நாட்டில் ஒரு எழுத்தாளர்/ ஒருஆசிரியர் இப்படிக் கூறுவது அது அடைந்திருக்கும் அவல நிலையைக் காட்டுகிறது.


No comments:

Post a Comment