Thursday, September 25, 2014

பூ

செடியிலிருந்து உதிர்ந்து
வீட்டு வாசலில்
ஒரு பூ கிடந்தது

மழையிலும் வெயிலிலும்
பகலிலும் இரவிலும்
அங்கேயே கிடந்தது

முதல் பார்வையில்
பேரழகு
எனத் தோன்றியது

ஆகா எவ்வளவு அழகு
என மறுநாள்

பின்
அழகான பூவென‌

ஏதும் தோன்றவில்லை
சில நாட்கள்

பல நாட்கள் ஆகியும்
அங்கேயே அப்படியே
பூவாய் கிடந்தது
அந்தப் பூ

எரிச்சலும் கோபமும்
மணம் வீசியது

என்ன திமிர்!
என்ன ஆணவம்!
ச்சீ ச்சீ
குப்பை என‌
தூக்கி எறிந்தபின்னேதான்
இந்த நாள்
இனிய நாளாய் தொடங்கியது

தண்ணீர்

இரண்டாயிரத்தின் பிற்பாதியில் எங்கள் ஊரில் மாதக் கணக்கில் தண்ணீர் பிரச்சனை இருந்தது. லாரி தண்ணீரும் கிடைக்காத நிலையில், ஊருக்கே தண்ணீர் தந்த கிணற்றை நினைத்துப் பார்க்கிறேன். வாய்க்கால் வரப்புகளைத் தாண்டி, ஒரு சிறு குன்றின் அருகில் இருந்த அக்கிணற்று நீருக்காக, சைக்கிளில், டி.வி.எஸ் எக்சலில் குடங்களை வைத்துக் கொண்டு ஊரே செல்லும் காட்சி கண் முன் தோன்றி மறைகிறது. ஒரு குடம் தண்ணீர் மூன்று ரூபாய். :)

புளு வரும் தண்ணீர், சாக்கடை நீர் கலந்து வரும் தண்ணீர், மஞ்சள் நிறத்தில் தண்ணீர்,துர்நாற்றம் வீசும் தண்ணீர் – அசோகமித்திரன் அவர்களின் “தண்ணீர்” காட்டும் எல்லா தண்ணீர்களைப் பற்றியும் எனக்கு அறிமுகம் உண்டு
நினைவூற்றைக் கிளறி விட்ட புத்தகம் என்பதாலேயே இப்புதகம் மனதிற்கு நெருங்கிய ஒன்றாக உள்ளது. யதார்த்தம் என்பது வார்த்தைகளில் தொடங்கி, இக்கதையின் கதை மாந்தர்களின் வாழ்வு வரை விரவி உள்ளது. பெண்களே முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். ஜமுனாவின் வீட்டு ஜன்னல் வழியே இக்கதை பயணிக்கிறது.

கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் :)

சில இடங்களில் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. ஜெ.மோ வை தொடர்ந்து படிப்பதால் ஒருவேளை இப்படி தோன்றலாம். முடிவு மறுப்பதற்கு இல்லையெனினும் சுருக்கமாக வந்த முந்தைய நிகழ்வுகளால் மனதில் ஒட்டவில்லை.

கிழக்கு பதிப்பகம்
விலை: ரூபாய் 115

உன் பெயர்

உன்னைப் பற்றி பாடப் போகும்
கவிதையொன்றுக்காக‌
வார்த்தைகளுக்கு
நேர்முகத் தேர்வு நடத்தினேன்
முற்றுப் புள்ளிக்கு
இடமளிக்காமல்
வந்து விழுந்த வார்த்தைகளில்
கழித்தது போக‌
மீதமிருப்பவை
எல்லா மொழிகளிலும்
உன் பெயர் மட்டுமே!

“தெரியவில்லை”

நானும் நண்பரும்
ஒரு பயணத்திலிருந்தோம்
நண்பர் என்றா சொன்னேன்?
ம்…
உற்சாகமான பயணமென்று
சொல்வதற்கில்லை
ஆனால் அதுதான் வழி
என்று சொல்லியிருந்தார்கள்
நீண்ட நெடுஞ்சாலையொன்றின்
ஓரத்தில்
“என்னை முத்தமிட்டுக்கொள்ளலாம்”
என்று எழுதியிருந்த அட்டையைப்
பிடித்துக் கொண்டு
ஒரு பெண் நின்றிருந்தாள்
அவளைப் பார்க்காமல்
வந்து விடுங்கள்
“அவள் பெயர் மாயை” என்றார் உடன் வந்தவர்
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“சொல்லியிருக்கிறார்கள்”
அவர் சென்றுவிட்டார்
சிறிது தயக்கத்துடந்தான் ஆரம்பித்தேன்
மெதுவாய்
ஒன்றாய்
இரண்டாய்
பின்
காலமொன்றை மறந்து
திரும்பி வந்து
“என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்”
என்றார் நான் முன்னால் கூறிய நண்பர்
“தெரியவில்லை”
“நீங்கள் எங்கு சென்றீர்கள்?”
“தெரியவில்லை”
அதன் பின்

அவர் மீண்டும் போய்விட்டார்
நான்
அந்த அட்டையில்
சொல்லியிருந்தபடி
செய்யத் தொடங்கினேன்….

மனம் தொட்ட கவிதை

உங்களுக்குப் பிடித்த கவிதை அல்லது கவிதைகள் கூறுங்கள் என்று நண்பர்கள் கேட்கும் பொழுது எனக்கு எதைச் சொல்வது இல்லை எவற்றைச் சொலவது என்று தெரியாமல் கஷ்டப் படுவேன். இதற்கு முக்கியக் காரணம் என் ஞாபக சக்தி. என்னால் ஒரு விசயத்தை நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளவே முடிவதில்லை. நான் எழுதியவற்றில் கூட என்னால் ஒன்றிரண்டைத் தவிர வேறெதையும் சொல்ல முடிவதில்லை.பல வருடம் பழகிய நண்பர்களையெல்லாம் ஒரு சில ஆண்டுகள் பார்க்கவில்லை என்றால் யார் நீங்கள் என்று கேட்ட அனுபவமெல்லாம் உண்டு. இதனாலேயே இப்படி யாராவது கேட்டால் “அப்படி ஒன்னு ரெண்டுலாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது” என்று சொல்லி சமாளிப்பேன். ஆனால் நகுலனின் இக்கவிதை என்றைக்கும் என் நினைவை விட்டு அகலும் என்று தோன்றவில்லை.

“எனக்கு யாருமில்லை நான் கூட‌” நான்கு வார்த்தைகளே உள்ளது என்பது காரணம் அல்ல.

இக்கவிதையைப் பற்றி பலர் சிலாகித்து எழுதியிருக்கலாம். சிலர் இது அப்படி ஒன்றும் ஆகச் சிறந்த கவிதை இல்லை, வெறும் தன்னிரக்க கவிதை, அது இது என்று ஆயிரம் கூறலாம். நான் இக்கவிதையை முதன் முதலில் வாசித்த பொழுது ஒன்றும் பெரிதாக தோன்றாததால் கடந்து சென்று விட்டேன் . மீண்டும் ஒரு நாள், மிக மிக மனம் வருந்திய தருணமொன்றில், தனிமையின் கோறப் பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட சோற்றுப் பருக்கையாய் உணர்ந்த தருணத்தில் வாசித்தேன். மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருந்தேன்,

ஒரு கணம், ஆளில்லா தீவில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு ” ஆம் நானும் இவ்வாறுதான் கஷ்டபட்டேன்” என்று யாரோ எழுதியிருப்பதைப் பார்ப்பது போல் இருந்தது. ஆறுதலாய் இருந்தது. மறுகணம், அங்கிருந்தும் தூக்கி அந்தரத்தில் எறியப்பட்டது போலிருந்தது.

தனிமை விரும்பி என்று சொல்லுவோர்களெல்லாம் யாரிடமிருந்தாவது தனித்து இருக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு யாரேனும் இருப்பார்கள். அவர்களிடமிருந்து பிரிந்து இருப்பது ஒரு தற்காலிக பிரிவாய் இருக்கும்.தனிமை அப்பொழுது சுகம் தருவதாக இருக்கும். ஆனால் தனித்து விடப்படும்பொழுது அதன் பிடி மூச்சை நிறுத்துவதாக மாறியிருக்கும்.”எனக்கு யாருமில்லை நான் கூட” என்ற வரிகளுக்கு ஆயிரம் அர்த்தம் கற்பிக்கலாம். நான் தனிமையை உணர்ந்தவனாய் இருந்த தருணத்தில் படித்ததால் அதைச் சார்ந்து பொருள் கொள்கிறேன். மேலும் நகுலனைப் பற்றி படித்திருப்பவர்களுக்கு அவருக்கு அல்சைமர் நோய் இருந்தது தெரிந்திருக்கும். அவருக்கு நினைவுகள் உடனுக்கு உடன் மறந்து போகுமாம். ஒரு வேளை அதை உணர்ந்தவராய் இதை எழுதியிருந்தால் இக்கவிதை எத்தகைய வலியைத் தருவதாய் இருக்கும்.

என்னளவில் ஒரு நல்ல கவிதை என்பது ஒரு கண்ணாடி போன்றது. ஒரு விஷேசம் என்னவென்றால் இக்கண்ணாடி பார்ப்போர் முகம் மட்டுமல்லாமல் அதன் பிரத்யேக முகமொன்றையும் காட்டும். இக்கவிதையில் என் முகமும், கவிதையின் முகமும் ஒன்றாய் இருப்பதாய் நான் உணர்கிறேன். அதனால் என் மனம் தொட்ட கவிதையாய் இக்கவிதை எப்பொழுதும் இருக்கும் என்று தோன்றுகிறது.

அஞ்சலி!

அவன்
இன்று
அங்கு வந்திருந்தான்

க‌ம்பீர‌மான‌
அழ‌கான‌
த‌ன் ம‌ர‌ணத்தைக் காட்ட‌
உடல் கிழிந்து இறந்த‌
ஒரு பெண்ணுடன்
அவன்
இன்று
அங்கு வந்திருந்தான்

"இங்குதான்
எல்லோரும்
பார்க்க‌
என் மரண நாட‌க‌ம்
இனிதே நிறைவேறியது

அதோ
அங்கு
சிதிறிக் கிடப்பவை
என் இறுதி வேண்டுதல்கள்

இங்கிருந்து அவ்வளவு தூரமே
என் இறுதிப் பயணம்

பதினெட்டு வயதுக்கு உட்பட்டவன் தான்
இவனும்

ஆனால்
கருணையுள்ளவன்

ஓட ஓட விரட்டியோ
கதறக் கதற குதறியோ
நடு ரோட்டில் வீசியோ
என்னைக் கொல்லவில்லை

எல்லோரும்
கதறினோம் பதறினோம்
என்பதற்காதாரமாய் படமெடுத்துக்கொண்டார்கள்

'விட்டுவிடு தம்பி
என்று கெஞ்சியிருந்தால்
விட்டிருக்கும்
என்று யாரும் அறிவுரை சொல்லவில்லை'

உனக்கு
இப்படி ஒரு மரணம் வாய்த்திருக்கலாம்" என்றான்

அவள் பேசவில்லை
ஆசிட் ஊற்றப்பட்ட அவள்
இன்றும் பேசவேயில்லை

Sunday, September 21, 2014

கிறுக்கல்கள்

ஆயிரம் வார்த்தைகள் கொண்ட கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கண்கள் வழியாக உள் செல்லும் வார்த்தைகளை வழி மறித்து காதல் ரசாயனத்தை ஊற்றி உன் பெயராய் மாற்றி  அனுப்புகிறது உன்னால் ஆன என் மனம்.
நீள் கவிதை யொன்றின் முடிவில் வரும் உன் பெயரைச் சுற்றி சுற்றி வந்து படக் கவிதையாக்கியதில் உன் முகம் வரைந்து பூக்களின் சுயம்வரத்ததிற்கு அனுப்பி வைக்கின்றன வார்த்தைகள்.
வானவில்லை அனுப்பி உன்னோடு வரிசையில் நிற்க வைத்து உன் மணம் பிடித்து வர சதி செய்கிறது இந்த சின்னப் பிரபஞ்சம்
உன் கன்னம் உரசிச் சென்ற காற்றை விரட்டிச் செல்கின்றன காதற் பறவைகள்
யாரிடமும் சொல்லாமல் உன்னைப் பார்க்க, இரவு நதியில் பூத்துக் குலுங்கும் நட்சித்திங்களைப் பறித்து வரும் நிலவிற்குப் பரிசாக உன் புன்னகையை மட்டும் தந்துவிடாதே.
இதழில் புன்னகைத் தவழ நீ ஏறிய அழகைக் கண்ட மின்சார ரயில் மூச்சு முட்டி புகை விடத் தொடங்குகிறது. இன்னொரு முறை நீ சிரித்தால் பறக்கும் ரயி்ல் ஆகி விடும் போலும்
உனக்கு மட்டுமே புரியும் ஒரு கவிதையை எழுதித் தருகிறேன்.நீ புன்னகைக்கிறாய். இப்பொழுது இந்த ஆகச் சிறந்தக் கவிதைக்கு எ‌ன்ன அர்த்தமென புரியாமல் நிற்கிறேன்
தேவதை உன் வீட்டு வழி கேட்டு வண்ணத்துப் பூச்சிகள் அலைகின்றன
உன் பாதங்களில் பாதைகளும் ஒட்டிக் கொள்கின்றன போலும்

பூ

செடியிலிருந்து உதிர்ந்து
வீட்டு வாசலில்
ஒரு பூ கிடந்தது

மழையிலும் வெயிலிலும்
பகலிலும் இரவிலும்
அங்கேயே கிடந்தது

முதல் பார்வையில்
பேரழகு
எனத் தோன்றியது

ஆகா எவ்வளவு அழகு
என மறுநாள்

பின்
அழகான பூவென‌

ஏதும் தோன்றவில்லை
சில நாட்கள்

பல நாட்கள் ஆகியும்
அங்கேயே அப்படியே
பூவாய் கிடந்தது
அந்தப் பூ

எரிச்சலும் கோபமும்
மணம் வீசியது

என்ன திமிர்!
என்ன ஆணவம்!
ச்சீ ச்சீ
குப்பை என‌
தூக்கி எறிந்தபின்னேதான்
இந்த நாள்
இனிய நாளாய் தொடங்கியது


Sunday, September 14, 2014

வெண்பா – முதல் முயற்சி

ஆண்டு பனிரெண்ட் டில்ப்பூக்கும் பூவதன்
நீண்ட  துயர மெதுவோ? – கண்ட
நுன் சிரிப்பில் காலம் மறந்தே
மலரும் மலரோ அது

வெண்பா எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. முதன் முதலில் நான் எழுத ஆரம்பித்தது, பள்ளியில் ஆசிரியர் வெண்பா நடத்தும் பொழுது, அதைப் போலவே எழுத முயற்சித்ததுதான். முதல் மூன்று அடிகள் நான்கு சீர்களாகவும், ஈற்றடி மூன்று சீர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே நானறிந்த இலக்கணமாக இருந்தது. ஆனால் இன்று எழுத ஆரம்பித்த பின்புதான் வெண்பா அவ்வளவு விளையாட்டான விசயமில்லை என்று தெரிந்தது. எவ்வளவு முயற்சித்தும் தளை தட்டாமல் மேலுள்ள வெண்பா முழுமையடையவில்லை. எனக்குத் தெரிந்து ஒரு இடத்தில் தளை தட்டியுள்ளது. அதிகமாக இருந்தால் கூறவும்.


மேலும் நேரிசை வெண்பாவாய் எழுதப்பட்டிருக்கும் இது இரு விகற்பமாகவும் இல்லை. முதல் முயற்சியென்பதால் என்னை நானே மன்னித்துக்கொண்டு, மனம் தேற்றி எழுதி முடித்தேன்.


“பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவின் துயரம்தான் என்ன? உன் சிரிப்பைக் கண்டு காலம் மறந்து மலர்கிறதா அம் மலர் என்று பொருள் வருமாறு எழுதியுள்ளேன்.”
வருகிறதா?

Wednesday, September 10, 2014

தீரா விளையாட்டு

ஒரு நாளை
பிடித்து
இரண்டாகக் கிழித்து
சட்டைப் பையில்
வைத்துக்கொண்டு
தூங்கப் போகிறேன்
விழித்துப்
பார்த்தால்
ஒன்று
பறந்து போயிருக்கும்…

சில விளையாட்டுகள்
அலுப்பதேயில்லை…
**********************

ஒவ்வொரு பகலிலும்
என் நிழலை
வெட்டி வீசுகிறேன்
அவை
இரவாய்
வளர்ந்து விடுகின்றன
யாரேனும்
என்னை
இந்தக் குழியிலிருந்து
தூக்கி விடுங்கள்…
*********************

துக்கத்தை
எழுதி வைக்கத்
தொடங்காதீர்கள்
அது
ஆற்று மணலின்
ஊற்று நீர் போல்
மிகச் சுவையாய் இருக்கும்.

Tuesday, September 9, 2014

பேஸ்புக் கவிதைகள்

ஒரு டஜன் ஜோடிகள்
உட்கார்ந்திருக்கும் பூங்காவில்
என்னை மட்டும் கடிக்கும்
கொசுவிற்கு
தனிமையென்றும்
நினைவு யென்றும்
பெயரிட்டு
விரட்டிக் கொண்டிருந்தேன்.

நான் உனக்கு அனுப்பும் கடிதங்கள் எல்லாம் என்னிடமே வந்து சேர்கின்றன.
நீ எங்கு இருக்கிறாய்?

பகல்
எல்லாவற்றையும் சத்தமாக சொல்கிறது.
கதவுகளையும், ஜன்னல்களையும் மூடிவிட்டுப் பார்க்கிறேன்
பகலின் மௌனம்
அதை விட
அதிகச் சத்தம் போடுகிறது.

பெண்மை

நானொரு
பெண்
இதைச் சத்தமாய்ப்
படித்திடாதீர்கள்!

காலம்
கிழித்த‌
இடத்தி(தா)ல்
ஊசலாடுகிறது
என் உயிர்!

போதும்
இனி வேண்டாவென‌
முலைய‌றுத்து
என் யோனியை
அடைத்திட்டேன்

ம‌ற்றொன்றறுத்து
என் இடையினை
நிறைத்திட்டேன்

மயிர‌றுத்து
நிர்வான‌(ண‌)த்திற்கு
த‌ந்திட்டேன்

பெயர‌றுத்து
பிண‌ங்க‌ளுக்குப்
போட்டேன்

ஆங்கோர்
குழந்தை அழக் கண்டு
முலை(ளை)த்திடும் ம‌ன‌த்தை
என் செய்வேன்!!

நிழல் தேடிய நதி

அந்த அறையில்
நாங்கள் மட்டுமே இருந்தோம்
தனித்து விடப்பட்ட
நாங்கள்
அந்த அறையாகவே இருந்தோம்
பகலினில்
அவனுடன் மட்டும்
இரவினில் அவனாகவே…
கட்டித் தழுவ
கை நீட்டிய பொழுதெல்லாம்
கை பற்றி
மேலெழத் துடிக்கும்
தூரத்தில்
அவன்
சரிந்து சரிந்து
விழும் நதிக்கு
கடல்தான்
முட்டுச்சந்து
நீ
என்னுடையவன்
என்று நினைத்திருந்தேன்
உன் பெயர்
நிழல்
என்று தெரியும்வரை….

Sunday, September 7, 2014

அன்புள்ள தோழிக்கு,

அன்புள்ள தோழிக்கு,

நேற்று ஒரு கனவு கண்டேன். ஏவாள் என்று நினைக்கிறேன். ஆதாமைத் தேடி காட்டிற்குள் போகிறாள். காடென்றால் அது பூக்களால் ஆன காடு. பூக்களைக் கண்டு மனம் மகிழ்கிறாள். பூக்களுக்கும் அவளைக் கண்டு பெரு மகிழ்ச்சி. வரிசையில் வந்து முத்தமிடுகின்றன. வாசனைப் பாடல்களால் துதி பாடுகின்றன. ஏவாளுக்கு வெட்கத்தில் முகம் பூக்கிறது. அப்பூவிற்கு சொந்தம் கொண்டாட முயல்கின்றன காட்டுப் பூக்கள். காட்டுப் பூக்கள் என்றால் அவை வெறும் பூக்கள் அல்ல.

நேற்று ஒரு கனவு கண்டேன். ஏவாளாய் நீ. ஆதாம் உன்னைத் தேடி வருகிறான். பூக்களின் மத்தியில் பூத்து நிற்கும் உன்னைக் காண்கிறான். அவனால் காணவே முடியாத அழகைக் கண்டு மனம் பத பதைக்கிறான். பூக்களிடம் கோபம் கொள்கிறான். அழுகிறான். மனம் தடுமாறுகிறான். பூவாய் நின்ற நீ பாவமென மனமிறங்குகிறாய். ஆதாமை மடி  சாய்த்துக்கொள்கிறாய். நீ நீயாய் மாறுகிறாய்விழித்து அவன், முகம் பார்க்கிறான். பார்த்தவனுக்கு நீ யாரென்று புரிந்தவன்போல் விழிக்கிறான். அவனுக்கு என்ன புரிந்திருக்கும் என நீயே சொல்.


கனா ஒன்று கண்டேன் தோழி. அது வெறும் கனா என்று சொல்வதற்கில்லை. வான் வெளியில் நீ. உன் இடத்தில் இரவை விதைத்து நிலவுக்காய் காத்திருக்கிறாய். நிலவும் வருகிறது. தான் நிலவென்று தெரியாமலே. யாருமில்லா இடத்தில் தான் மட்டும் எதற்கு நிற்கிறோம் என்று குழம்புகிறது. தான் ஒளிர்வது எவ்வாறு என்று கேள்வியெல்லாம் அதற்கு கேட்கத் தெரியவில்லை. தூரத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து பயம் கொள்கிறது. வால் நட்சத்திரம் ஒன்றைத் துரத்திச் செல்கிறது. என்னிடம் நீ கேட்கிறாய்; ஏன் நிலவு நெருங்க மறுக்கிறதென்று. நீயே சொல் உன்னருகில் நிலவுக்கு இடமுண்டா?

Saturday, September 6, 2014

அதைப் பார்த்தவுடன் அடிவயிறு பிரட்டிக் கொண்டு குடல் வெளியே வந்து விழுந்துவிடும் போல் இருந்தது.
                              *****

தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் கேட்காமல் தங்களைப் பக்கத்து ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்ற பழனிச்சாமியை, இன்றக்குத் திட்டித் தீர்த்துவிடுவது போல் ஆரம்பித்த அம்மா அரை மணி நேரம் ஆகியும் நிறுத்தாமல் திட்டிக் கொண்டிருப்பதை அச்சமும் வியப்பும் கலந்த பார்வையுடன் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் லட்சுமி. பழனிச்சாமி அவள் அப்பாதான். ராஜாங்கத்தைத்தான் தனியாக விட்டுப் போயிருந்தார்கள்லட்சுமியை விட மூன்று வயது மூத்தவன் ராஜாங்கம். வீட்டின் மூத்த மகன்.  மொத்தப் பாசத்தையும் கொட்டி வளர்க்கப்பட்ட 'ஆம்பள புள்ள'. அவனுக்குக் கொடுக்கப்பட்ட பாசத்தின் மிச்ச மீதிகளை உண்டு வளர்ந்து வந்தாள் லட்சுமி. இருந்தும் அண்ணன் என்றாள் அவளுக்கு உயிர். பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது என்பது இவள் விசயத்தில் குழந்தையிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. ஆம்பள புள்ளையைத்தான் கொண்டாடுகிறார்கள் என்பதை மிகச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டாளோ என்னவோ அண்ணனின் நிழல் அவனை விட்டுப் பிரிந்தாலும் அவள் பிரியாமல் உடன் இருந்தாள். "எனக்கு ரெண்டும் பசங்கதான்" என்று அவள் அம்மா சொல்லும் பொழுது சந்தோஷமே அடைந்தாள். இப்படி வீட்டின் இளவரசனாகவும், தன் ஹீரோவாகவும் இருந்த அண்ணன் ஒரு நாள் புத்தி சுவாதீனம் இல்லாமல் போனான் என்பதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதவளாய்  எல்லாக் கடவுள்களையும் ஏன், ஏனென்று கேள்விகளால் தன் மனதிலிருந்து விரட்டியடித்துக் கொண்டிருந்தாள் லட்சுமி.
                                                                                *****

என்றைக்குமில்லாமல் அன்று வீட்டுக்குச் சீக்கிரமே வந்தான். எல்லோரிடமும் நன்றாக பேசினான் என்றுதான் நினைவு. சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்றான். நன்றாகவும் ஏன் வழக்கத்தை விட அதிகமாகவும் சாப்பிட்ட மகனை உச்சி முகர்ந்தாள் ராஜாங்கத்தின் அம்மா. வீட்டில் எல்லோரும் காரணமின்றி அன்று அதிக சந்தோஷமாக இருப்பது போல் தோன்றியது லட்சுமிக்கு. எனினும் சிரிப்பவர்களைப் பார்த்தால் தானும் சிரிக்கும் குழந்தைப்போல் அவளும் சந்தோஷமாகவே அன்று தூங்கிப் போனாள்.
மறு நாள் எல்லோரும் எழுந்து இரண்டு மணி நேரம் ஆகியும் ராஜாங்கம் எழவில்லை. வீட்டிற்கு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் காலையில் அவன் தான் முதலில் எழுந்திருப்பான். அதிகமாக சாப்பிட்டதால் தூங்குகிறான் என்று நினைத்துக்கொண்டு அவனை யாரும் எழுப்பவில்லைஆனால் நேரம் ஆக ஆக மனம் பொறுக்காமல் அம்மா கவலைப் படத் தொடங்கினாள். லட்சுமியிடம், "அண்ணன எழுப்புடி. என்ன இன்னைக்கு இவ்வள நேரம் தூங்குறான். தலயத் தொட்டுப் பாரு காய்ச்ச.. கீய்ச்ச அடிக்குதான்னு" என்று நச்சரிக்கத் தொடங்கினாள். ஆரம்பத்தில் "விடும்மா... தூங்கட்டும். எப்பவும் என் புள்ள ஒழுங்காவே தூங்கறதில்லன்னு புலம்புவ. இப்ப தூங்கறவன எழுப்பு எழுப்புன்ற" என்று சொன்னாலும் விடிந்து நான்கு மணி நேரம் ஆகியும் தூங்கும் ராஜாங்கத்தைப் பார்த்து கவலைப் படத் தொடங்கினாள்.

"அண்ணே.. அண்ணே.. எழுந்திரிண்ணே.. மணிப் பத்தாக போவுது. எழுந்துரிச்சு சாப்டாவது தூங்குணே "

ராஜங்கம் அசையவில்லை. பாறையென‌ கட்டிலில் கிடந்தான். லட்சுமி எழுப்பியும் எழுந்திருக்காத  மகனைப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா, அதற்கு மேலும் பொறுக்க மாட்டாதவளாய் அவளும் வந்து எழுப்பத் தொடங்கினாள்.
ஒருக்களித்துப் படுத்திருந்தவனின் தோளைப் பிடித்து திருப்பினாள். கசங்கிய நிலையில் ஒரு காகிதம் கிடந்ததுலட்சுமி அவள் அம்மாவைப் பார்த்தாள். அவளுக்கும் பயம் தான் என்பது கண்களிலேயே தெரிந்ததுலட்சுமிதான் அக்காகிதத்தைக் கையில் எடுத்தாள்.  "என்னடி அது.." அம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதவளாய் விழித்துக் கொண்டிருந்தவளை " படிடி.. என்ன எழுதிருக்குன்னு" என்று கத்தினாள் ராஜாங்கத்தின் அம்மா.

"யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை. யாருக்குச் சொன்னால் புரியும் என்றும் தெரியவில்லை. இன்று ஒரு பெண் குழந்தையைக் கண்டேன். ஐந்து வயது இருந்தாலே அதிகம். பேருந்து நிறுத்தத்தில் தன்னச் சுற்றி நிற்கும் கூட்டத்தைக் கண்டு மிரளவோ, வேடிகைப் பார்க்கவோ, ஒரு பொருட்டாகவோ கூடக் கருதியதாகத் தெரியவில்லை... தனக்கு நேர்ந்தது நாளை உனக்கும் நேரலாம் என்பது போலவோ இல்லை உன்னால்தான் நான் இன்று தெருவில் ஆடிக் கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் நீ இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். என்பது போலவோ தன் அம்மாவின் மடியில் இருக்கும் தங்கையை ஒரு நொடிப் பார்த்து விட்டு அம்மா விட்டெறிந்த வளையத்தை எடுத்துக்கொண்டு கூட்டத்தின் நடுவில் போய் நின்றது. கையில் வைத்திருந்த தட்டை அதன் அம்மா  தட்டத் தட்ட அதற்கு ஏற்றார் போல் உடலை இருமுறை அசைத்துவிட்டு வைத்திருந்த வளையத்துக்குள் தன் உடலைச் செலுத்தி வெளி வந்தது. சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல், கடமையைச் செய்யும் ஒரு போர் வீரன் போல் வேறு எண்ணங்கள் ஏதுமற்றவளாய் அக்குழந்தை தெரிந்தாள். முகத்தில் ஏதுமில்லை: சிரிப்போ, ஆசைகளோ, ஆச்சர்யங்களோ ஏதுமில்லை. எவ்வாறு ஐந்து வயதினும் குறைந்த ஒரு குழந்தையால் இவ்வாறு இருக்க முடியும். ஏன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் உலகிடமிருந்து அவளுக்குக் கேட்டுப் பெற ஒன்றுமில்லை. சுற்றிலும் நிற்கும் மாமிச மலைகளை எப்படி அவளால் எளிதாக உதாசீனப் படுத்தி விட்டுப் போக முடிகிறது. மனம் கிடந்து துடித்ததுஅதைவிடக் கொடுமையாய் கூட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்து,"அங்க பாரு அந்த பாப்பா எப்படி ஆடுதுன்னு.." என்று வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அட ஆண்டவா எப்படி இவர்களால் சிரிக்க முடிகிறது. இந்த உலகில் எதையுமே நான் பெரிதாக நினைத்ததில்லை. எந்த ஒரு விசயத்திற்கும் பெரிய மதிப்பில்லை என்னிடம். நான் மதிப்பது, ரசிப்பது எல்லாமே மனிதர்களின் சிரிப்பைத்தான். சிரிப்புதான் மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது என்று நம்பினேன். அதனினும் ஆகச் சிறந்த தத்துவம் வேறில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்று ஒரு வேளை உணவிற்காக ஒரு குழந்தை குழந்தையாக இல்லாமல் தெருவில் நின்று ஆடிக்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து இவர்களுக்கு எப்படி சிரிப்பு வருகிறது. எவ்வாறு சிரிக்கிறார்கள். நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அதற்கு பிறகு நடந்த ஒன்று என் வாழ்விற்கும் மறக்க முடியாதது. வளையத்திலிருந்து வெளி வந்த அந்தக் குழந்தை தட்டைத் தூக்கிக் கொண்டு கூட்டதிலிருக்கும் எல்லாரிடமும் சென்றது. ஒருவர் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. வேட்டியயோ, சேலையையோ தொட்டது. காசு போடவில்லை என்று தெரிந்தால் சிறிதும் கவலையின்றி அடுத்தவரிடம் போனது. ஒரு பெண்மனி கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தாள். அவளிடம் போன குழந்தை ஒரு நொடி அந்தப் பெட்டியைப் பார்த்துவிட்டு அதன் கைப்பிடியை பிடித்து ஆட்டிப் பார்த்தது. பின் தன் தட்டில் சேர்ந்திருந்தக் காசை அதன் அம்மாவிடம் குடுக்கச் சென்றுவிட்டது. என்னால் அதற்கு மேல் அங்கு நிக்க முடியவில்லை. அதுவரை அப்பெண் குழந்தை குழந்தை தானா என்று கேட்டுக் கொண்டிருந்த‌ என் மனம் அவள் குழந்தையாய் மாறிய ஒரு நிமிடம் துடி துடிதுப் போனது. ஓடிச் சென்று அக்குழந்தையை அள்ளிக் கொள்ள வேண்டும்; போதும், நீ ஆடி உன் அம்மாவின் வயிற்றை, உன் அப்பனென்று ஒருவன் இருந்தால் அவன் வயிற்றை நிரப்பியது போதும், தன் குழந்தையை தெருவில் தனியாக நிற்கக் கூட விடாத இந்த சமுதாயம் உன்னை ஆட விட்டு வேடிக்கைப் பார்த்ததுச் சிரித்தது போதும் என்று கதறி அழ வேண்டும் போலிருந்தது. என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. வந்துவிட்டேன். வரும் பொழுதெல்லாம் அந்தக் குழந்தையின் நினைவாகவே இருந்தது. இன்னும் எத்தனைக் காலத்திற்கு அதன் வாழ்க்கை  இப்படி இருக்கும். இன்னும் ஐந்து வருடங்கள், ஆறு வருடங்களில் இவள் பெரிய மனுசியாகிவிட்டாள் என்பார்கள். காலத்திற்கும் சுமக்க வேண்டிய பாரங்கள் இரண்டைக் காலம் இவள்  மார்பில் ஏற்றிவிடும். தங்கத்தில் செய்த விலங்கை அவள் கழுத்திலும், காதிலும் மாட்டிவிடலாம். சேலைச் சிறைக்குள் மறைத்து, மறைத்து அவள் உடலைச் சுமப்பாள். ஆனால் அப்பொழுதும் ஆடிக்கொண்டேதான் இருப்பாள். அப்பொழுதும் இந்த மனித மிருகங்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கும். என்னால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.. எனக்கு தீடீரென்று எல்லாம் மறக்க ஆரம்பிப்பது போல் இருக்கிறது. கண் முன்னேயே எல்லாவற்றின் பெயரும் அழியத் தொடங்குகிறது. என் தலைக்கு மேல் நிழல் ஒன்று சுற்றிக்கொண்டே இருக்கிறது. எதன் மேல் நான் படுத்திருக்கிறேன்... படுத்திருக்கிறேன்.. படுத்திருக்கிறேனென்றால்.. அம்மா.. அம்மா எங்கே... .."

 அக்கடிததில் அதற்கு மேல் ஒரே கோடு கோடாக இருந்தது. வார்த்தைகள் என்று ஏதுமில்லை. படித்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு தலை சுற்றியது. லட்சுமியின் அம்மாவுக்கோ ஒன்றும் விளங்கவில்லை. அவள் வாய் விட்டு அழத்தொடங்கினாள். " டேய் ராஜா என்னடா இது.. எழுந்திரிடா.. எழுந்திரிடா என்னடா எழுதி வச்சுருக்கா" என்று அவன் மேல் விழாதக் குறையாய் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். வெளியே போயிருந்த பழனிச்சாமியும் அப்பொழுது வந்து சேர்ந்தார். எல்லோருமாக சேர்ந்து ராஜாங்கத்தைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். டாக்டர் அவனைப் பரிசோதித்துவிட்டு அவனுக்கு உடலுக்கு ஒன்றுமில்லை எனவும் மன நலம் பாதிக்கப் பட்டிருப்பது போல் தோன்றுவதாகவும் அவரே ஒரு  மருத்துவரை பரிந்துரைத்து அவரிடம் அழைத்துப் போகும்படியும் கூறினார்.
   
மன நல மருத்துவர்  அவனைப் பரிசோதித்தார். அவன் எழுதியிருந்தக் கடிதத்தைப் படித்தார். "இவனுக்கு ஏற்பட்டிருப்பது பெர்சனாலிட்டி டிஸார்டர்" எனவும் அப்படி என்றால் என்னவெனவும் விளக்கினார். ஆழ் மனதில் இருந்து கொண்டே இருக்கும் விசயங்கள் திடீரென்று ஒரு நாள் வெளிப்படத் தொடங்கும். மனம் பிறழும் என்றார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. என் மகன் பைத்தியமாய்ட்டானா என்று ராஜாங்கத்தின் அம்மா திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். மருத்துவர் மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்.

அன்றிலிருந்து ராஜாங்கத்தைத் தனியாக விடுவதேயில்லை யாரும். தூக்கத்தி லேயே உயிர் போனால் அது நல்ல சாவு என்பார்கள். அப்படித்தான் போக வேண்டும் என்று விரும்புவார்கள். அதுபோல் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது அவன் மனம்.
                                                                                *****

வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு அதிர்ச்சி. ராஜாங்கம் படுத்திருந்த கட்டில் சரிந்து கிடந்தது. அவன் மலம் கழித்திருந்தான். அவன் மூத்திரம் அவன் தலையருகே வந்துவிட்டிருந்தது. பதறிப் போய் லட்சுமி அவனை நகர்த்தினாள். லட்சுமியின் அம்மா தண்ணீர்க் கொண்டு வர ஓடினாள். பழனிச்சாமிக்கு ராஜங்கத்தின் கோலத்தைப் பார்த்தவுடன் அடிவயிறு பிரட்டிக் கொண்டு குடல் வெளியே வந்து விழுந்துவிடும் போல் இருந்தது.
                              *****


Wednesday, September 3, 2014

நினைவலைகள்

மூன்றிலிருந்து ஐந்து வயதுக்குள் இருக்கும், சரியாக நினைவிலில்லை. தலைக் குளித்துவிட்டு முதன்முறையாக நானே தலைத்துவட்டிக்கொண்டு அம்மாவிடம் போய், ” அம்மா நானே தோட்டின்டேன்” என்றேன்.சிரித்துக் கொண்டே”Very Good” என்றாள். பெருமிதம் தாளவில்லை. அடுத்து ஒவ்வொரு முறைத் தலைக் குளிக்கும் பொழுதும் அந்த Very Goodக்காக போய் நின்றேன். ஆனால் ஏனா அதன் பிறகு அவள் V.Good தரவேயில்லை. முகத்தில் மீசை அரும்பத் தொடங்கும் வரை என் எல்லா நாட்களும் அம்மாவிடம் சொல்லிவிட்டே தொடங்கியது; அம்மாவிடம் சொல்லிவிட்டே முடிந்தது. பள்ளிகளில் (ஆம். பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் பொழுது நான்காவது பள்ளி) சேர்த்தது முதல், தாவங்கட்டை உடைந்து ஏழு தையல் போட பக்கத்து ஊருக்குத் தூக்கிக்கொண்டது ஓடியது தொடங்கி எல்லாமே அம்மாதான். அம்மாதான் புத்தகங்களை அறிமுகப்படுத்தினாள்.சாண்டில்யனையும், கல்கியையும் அறிமுகப் படுத்தினாள். வேஷ்டிக் கட்ட கற்றுக் கொடுத்ததும் அவள்தான். தமிழ் டீச்சர் அடித்து கையில் ரத்தம் வந்ததும் பள்ளியில் வந்து சண்டைப் போட்டதும் அவளே. அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சைக்கிளில் கால் எட்டிய திருநாள் அன்று அம்மாவிடம் சொல்ல வேண்டுமென்று இரண்டு கைகளையும் விட்டு ஓட்டிக்கொண்டு போய் வீட்டின் முன் நிறுத்தி்னேன். கும்பிட போன தெய்வம் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். ” அம்மா, இங்க பாரேன். எனக்கு கால் எட்றது” என்றேன். ” த்து.. இவ்வளவுதானா” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். எனக்கு பெருத்த ஏமாற்றம். அதன்பிறகு நான் அம்மாவிடம் சொல்லும் விசயங்கள் குறைந்துக்கொண்டே வரத்தொடங்கின.
“போய்ட்டு வரேன்ம்மா” என்று சொல்லிவிட்டு கிளம்பும் பொழுது கண் கலங்க கையசைத்து வழி அனுப்பும் அம்மாவைப் பார்க்கும் பொழுது காலம் fast forwardல் காணொளியாய் வந்து போனது.
மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு கிளம்புகிறேன். திருச்சியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மணப்பாறை. ஆறு முப்பதுக்கு திருச்சியிலிருந்து கிளம்பும் பல்லவன் எக்ஸ்பிரஸிற்கு காலை நான்கு முப்பதிற்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு இறங்கும் பொழுது எங்கள் தெரு ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருந்ததது. அதிகாலை இரண்டு மணிக்கே கூவி என்னை எழுப்பிவிட்ட சேவல் வீட்டின்முன் கட்டப்பட்டிருந்த ஆட்டுக் குடும்பத்துடன் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தது. ” உனக்கு கோழியே கிடைக்காது போ ” என்று அதற்கு ஒரு சாபம் கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
தெருமுனையில் எதையோ தேடிக் கொண்டிருந்த நாய் ஒன்று தலையைத்தூக்கிப் பார்த்தது. வீட்டை விட்டு வெளியே போகும்பொழுது ‘ போறேன்னு செல்லக்கூடாது, போய்ட்டு வரேன்னு சொல்லனும்’ என்பார்கள். நானோ அந்த நாயிடம் நான் போறேன் திரும்பி வரமாட்டேன் என்று ரகசிய ப்ரேயர் செய்துவிட்டு முன் நகர்ந்தேன். தெருவைத் தாண்டியவுடன் ஒருவர் ஒரு கையால் பல் தேய்துக்கொண்டே ஒரு கையில் மான் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். மானா? அட.. இல்லை அது நாய்தான். ஆனால் மிக விநோதமாக இருந்தது. அதற்கு முன் அப்படி ஒரு நாயைப் பார்த்ததேயில்லை. அதன் முகம் மான் மற்றும் ஆடுகளின் முகங்கள் போல் முன் நீண்டிருந்தது. அதன் கால்கள் கங்காருவின் கால்கள் போல் இருந்தன. காதுகள் இரண்டும் தலைக்குமேல் பக்கத்து பக்கத்தில் இருந்தன. என்ன ஜந்துவோ என்று நினைத்துக்கொண்டேன். இரண்டு தெரு தாண்டியவுடன் தவளைகள் கத்தும் சத்தும் கேட்கத் தொடங்கியது. தெரு விளக்குகள் எரியவில்லை. பயத்தில் கத்துகின்றனவா? இரவுப் பூதம் எப்படி இதன் இடைவிடாத சத்தத்தைச் சகித்துக்கொள்கிறது. சட்டென்று கண் முன்னே பூமராங் போல் ஒரு பறவை பறந்து போனது. அதன் சிறகசைவு இரவு கண் சிமிட்டுவதுபோலிருந்தது. அடுத்த சந்தில் சிவன் கோயில். நான்கு வருடங்கள் விடாது சென்ற கோவில். இக்கோவில் பாண்டியர்காலத்து கோவில் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். உறுதியாகத் தெரியவில்லையெனினும் அம்மா சொல்லிவிட்டதால் அது பாண்டியர் காலத்துக் கோவில்தான். அம்மா புதிதாக எந்த விசயத்தைப் படித்தாலும், தெரிந்துகொண்டாலும் எங்களிடம் சொல்லும்பொழுது ஒரு குழந்தையின் குதூகலத்துடன், கண்கள் விரிய, குரலில் அதிக சந்தோஷத்தை வெளிப்படுத்தியவாறு சொல்வாள். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதை ரசிப்பதற்காகவே அவள் சொல்வதை மறுத்து எதுவும் சொல்ல மாட்டேன். “கண்ணா, உனக்குத் தெரியுமா? நம்ம சிவன் கோவில் பாண்டியர் காலத்தச் சேர்ந்ததாமா. தூண்கள்ள மீன் சின்னம் இருக்கு”. அம்மாவிடம் இதனால்தான் எல்லாக் குழந்தைகளும் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன போலும்.
வேப்பிலை மாரியம்மன் கோவிலருகே திருச்சி பேருந்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். மணப்பாறை கடந்த ஐந்தாண்டுகளில் நிறையவே மாறியிருக்கிறது. ட்ராபிக் போலிஸ், ரயில்வே மேம்பாலம், சி.பி.எஸ்.சி பள்ளிகள், பதினொன்றாவது படிக்கும் தன் பையனை பிரசவம் பார்க்க வைத்த டாகடர், பத்தாவது படிக்கும் பையன் தன் கிளாஸ் டீச்சர் வீட்டிற்குச் சென்று,நீங்க என்ன லவ் பண்றேன்னு சொன்னாத்தான் போவேன் என்று அடம்பிடித்த சம்பவம்- மணப்பாறையின் புது வரவுகள். நீண்ட கால அடையாளங்கள் – முறுக்கு மற்றும் மாட்டுச் சந்தை.
கட்டிடங்களிலும் வாகனங்களிலும் நிகழ்ந்திருக்கும் மாற்றம் மக்களின் மனங்களில் நிகழ்ந்திருக்கிறதா என்றால் சந்தேகம்தான். நான் ஊருக்கு வரும் பொழுது குழாய் ஸ்பீக்கரில் ஒருவர் இவ்வாறு அனௌன்ஸ் பன்னிக்கொண்டிருந்தார்:” அன்பான காட்டுப்பட்டி வாழ் பெருங்குடி மக்களே, காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறவுள்ளது. எனவே தாங்கள் குடும்பத்துடன் வந்து விழாவைச் சிறப்பித்து தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளப்படுகிறோம்” அடப்பாவி இவ்வளவு நேரம் நல்லாத்தான பேசுன கடைசில வந்து ஏன்டா கேட்டுக்கொள்ளப்படுகிறோம்? சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் போனால் அம்மாவும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
இந்த ஊர் இப்படித்தான் இருந்தது என்பதற்கு அடையாளமாய் இன்னும் இங்கே இறந்த காலத்தின் மிச்சங்களாய் நிறைய இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் கோவில் விசேஷங்களில் போடப்படும் நாடகங்கள்.
வீட்டிற்குச் சென்ற மறுநாள் இரவு காளியம்மன் கோவிலில் நாடகம். என்ன நாடகமென்று தெரியவில்லை. உள்ளூர் கிரிக்கெட் அணியினர் பேனர்களில் வரவேற்றனர். நாடக மேடையருகே மைக் செட் போடப்பட்டிருந்தது. “… மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம். நேற்று நடைப்பெற்ற அன்னதானத்தில் சிறப்பாக உழைத்த தென்றல் பாய்ஸ் அணியினரை விழாக் கமிட்டியினர் சார்பாக மனமாரப் பாராட்டுகிறோம். மீண்டும் மீண்டும்… “ நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். ” இங்க பாருங்கடா சொல்லச் சொன்னீங்க சொல்லிட்டோம். அப்பறம் வந்து அடிக்கலாம் கூடாது ” என்று சொல்வதுபோலிருந்தது. ‘கேட்டுக்கொள்ளப்படுகிறோம்’ அடுத்து அரை மணிநேரம் யாரையோ விழா மேடைக்கு அழைத்துக்கொண்டேயிருந்தார். சிறிய கோவில் என்பதால் மக்கள் சொற்பமான எண்ணிக்கையில்தான் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள். பாய் விரித்து போர்வைக்குள் தங்களை ஒளித்துக்கொண்டு நாடகம் தொடங்குவதற்காக காத்திருந்தனர். நினைவுகள் இருபது வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றன.
அப்பொழுது M.கல்லுப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வந்தோம். அங்கு நடக்கும் திருவிழாக்களில் மூன்று நாடகங்கள் தொடர்ந்து மூன்று இரவுகள் நடக்கும். அப்படி ஒரு நாடகத்தை முன்னால் உட்கார்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எமதர்ம ராஜா எமலோகத்தில் குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் காட்சி. ஆட்கள் பற்றாக்குறையால் முன்னால் உட்கார்ந்திருந்த சிறுவர்களை மேடையேற்றி விட்டனர். எமன் என்னை எண்ணைச் சட்டியில் போட்டு வருக்கச் சொன்னார். அம்மாவிடம் நான் நாடகத்தில நடிச்சேன்..நாடகத்தில் நடிச்சேனென்று ஒரு மாதம் சொல்லிக்கொண்டேயிருந்தேன்.
நினைவுகளில் மூழ்கியவனாய் திருச்சி வந்து சேர்ந்த பொழுது மணி ஆறு. உங்கள் கடை பொங்கலை விட பெருமாள் கோவில் பிராசதம் அதிகமாக இருக்கும் என்று கண்டு கொள்ளாத டிபன் சாப்பிட்ட கடைக்காரனிடம் சொல்லிவிட்டு இரண்டாவது பிளார்ட்பாரமில் நின்று கொண்டிருந்த பல்லவனில் அரை டவுசர் வெள்ளக்காரனோடு ஏறி இதை எழுத ஆரம்பிக்கையில் மணி ஆறு நாப்பது. :)