Sunday, September 7, 2014

அன்புள்ள தோழிக்கு,

அன்புள்ள தோழிக்கு,

நேற்று ஒரு கனவு கண்டேன். ஏவாள் என்று நினைக்கிறேன். ஆதாமைத் தேடி காட்டிற்குள் போகிறாள். காடென்றால் அது பூக்களால் ஆன காடு. பூக்களைக் கண்டு மனம் மகிழ்கிறாள். பூக்களுக்கும் அவளைக் கண்டு பெரு மகிழ்ச்சி. வரிசையில் வந்து முத்தமிடுகின்றன. வாசனைப் பாடல்களால் துதி பாடுகின்றன. ஏவாளுக்கு வெட்கத்தில் முகம் பூக்கிறது. அப்பூவிற்கு சொந்தம் கொண்டாட முயல்கின்றன காட்டுப் பூக்கள். காட்டுப் பூக்கள் என்றால் அவை வெறும் பூக்கள் அல்ல.

நேற்று ஒரு கனவு கண்டேன். ஏவாளாய் நீ. ஆதாம் உன்னைத் தேடி வருகிறான். பூக்களின் மத்தியில் பூத்து நிற்கும் உன்னைக் காண்கிறான். அவனால் காணவே முடியாத அழகைக் கண்டு மனம் பத பதைக்கிறான். பூக்களிடம் கோபம் கொள்கிறான். அழுகிறான். மனம் தடுமாறுகிறான். பூவாய் நின்ற நீ பாவமென மனமிறங்குகிறாய். ஆதாமை மடி  சாய்த்துக்கொள்கிறாய். நீ நீயாய் மாறுகிறாய்விழித்து அவன், முகம் பார்க்கிறான். பார்த்தவனுக்கு நீ யாரென்று புரிந்தவன்போல் விழிக்கிறான். அவனுக்கு என்ன புரிந்திருக்கும் என நீயே சொல்.


கனா ஒன்று கண்டேன் தோழி. அது வெறும் கனா என்று சொல்வதற்கில்லை. வான் வெளியில் நீ. உன் இடத்தில் இரவை விதைத்து நிலவுக்காய் காத்திருக்கிறாய். நிலவும் வருகிறது. தான் நிலவென்று தெரியாமலே. யாருமில்லா இடத்தில் தான் மட்டும் எதற்கு நிற்கிறோம் என்று குழம்புகிறது. தான் ஒளிர்வது எவ்வாறு என்று கேள்வியெல்லாம் அதற்கு கேட்கத் தெரியவில்லை. தூரத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து பயம் கொள்கிறது. வால் நட்சத்திரம் ஒன்றைத் துரத்திச் செல்கிறது. என்னிடம் நீ கேட்கிறாய்; ஏன் நிலவு நெருங்க மறுக்கிறதென்று. நீயே சொல் உன்னருகில் நிலவுக்கு இடமுண்டா?

No comments:

Post a Comment