Sunday, September 21, 2014

கிறுக்கல்கள்

ஆயிரம் வார்த்தைகள் கொண்ட கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கண்கள் வழியாக உள் செல்லும் வார்த்தைகளை வழி மறித்து காதல் ரசாயனத்தை ஊற்றி உன் பெயராய் மாற்றி  அனுப்புகிறது உன்னால் ஆன என் மனம்.
நீள் கவிதை யொன்றின் முடிவில் வரும் உன் பெயரைச் சுற்றி சுற்றி வந்து படக் கவிதையாக்கியதில் உன் முகம் வரைந்து பூக்களின் சுயம்வரத்ததிற்கு அனுப்பி வைக்கின்றன வார்த்தைகள்.
வானவில்லை அனுப்பி உன்னோடு வரிசையில் நிற்க வைத்து உன் மணம் பிடித்து வர சதி செய்கிறது இந்த சின்னப் பிரபஞ்சம்
உன் கன்னம் உரசிச் சென்ற காற்றை விரட்டிச் செல்கின்றன காதற் பறவைகள்
யாரிடமும் சொல்லாமல் உன்னைப் பார்க்க, இரவு நதியில் பூத்துக் குலுங்கும் நட்சித்திங்களைப் பறித்து வரும் நிலவிற்குப் பரிசாக உன் புன்னகையை மட்டும் தந்துவிடாதே.
இதழில் புன்னகைத் தவழ நீ ஏறிய அழகைக் கண்ட மின்சார ரயில் மூச்சு முட்டி புகை விடத் தொடங்குகிறது. இன்னொரு முறை நீ சிரித்தால் பறக்கும் ரயி்ல் ஆகி விடும் போலும்
உனக்கு மட்டுமே புரியும் ஒரு கவிதையை எழுதித் தருகிறேன்.நீ புன்னகைக்கிறாய். இப்பொழுது இந்த ஆகச் சிறந்தக் கவிதைக்கு எ‌ன்ன அர்த்தமென புரியாமல் நிற்கிறேன்
தேவதை உன் வீட்டு வழி கேட்டு வண்ணத்துப் பூச்சிகள் அலைகின்றன
உன் பாதங்களில் பாதைகளும் ஒட்டிக் கொள்கின்றன போலும்

No comments:

Post a Comment