Monday, June 9, 2014

எக்ஸைல் - முதல் நூறு பக்கங்கள்


ஒரு பெரும் விவாதத்திற்கு பின் படிக்கும் புத்தகம் என்பதால் திறந்த மனதுடனும், எந்த வித முன் அனுமானங்களுக்கும் இடம் அளிக்காமலும், எந்த வித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமலும் படிக்க வேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்துகொண்டேன். 'ஆட்டோ பிக்சன்' புதினம் என்பது எக்ஸைல் பற்றி நான் அறிந்த முதல் தகவல்.
எடுத்தவுடன் ஒரு தவறைச் செய்தேன். மொத்தம் எத்தனைப் பக்கங்கள் என்று தெரிந்து கொள்ள நினைத்து கடைசி பக்கத்திற்கு புரட்டினால், "இது நாவலின் ஐந்தாவது க்ளைமேக்ஸ்" என்று எழுதப்பட்டிருந்ததைப் படிக்க நேர்ந்தது, அது பத்தாம் பக்க முடிவிலேயேஇது நாவலின் க்ளைமேக்ஸ்” என்பதைப் படிக்கும் போது எழ வேண்டிய அதிர்ச்சியிலிருந்தது காப்பாற்றியது. புதிய புத்தகங்களை வாங்கிய பின் முதலில் முகர்ந்து பார்ப்பதையும், எத்தனைப் பக்கக்கள் இருக்கிறது என்று பார்ப்பதையும் இன்றளவும் நிறுத்தமுடியவில்லை. J
இரண்டு அமர்வுகளில் நூறு பக்கங்கள் ஓடிவிட்டது. முழு புத்தகத்தையும் வாசித்துவிட்டு எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே எழுதுவதற்கு தூண்டிவிட்டன இந்த நூறு பக்கங்கள்.
சாரு முதல் நூறு பக்கங்களில் என்ன சொல்கிறார்.
* 1. தான் தமிழகத்தில் இல்லாமல், தமிழில் எழுதாமல் ஆங்கிலத்திலோ, அரபியிலோ, எஸ்பாநியோலிலோ, ஏன் மலையாளத்திலோ எழுதியிருக்கலாம் என்று அங்கலாய்க்கிறார்
*2. இங்கு மக்கள் விலங்குகளைப் போல் வாழ்கிறார்கள் என்று வருந்துகிறார்
*3. தமிழகத்தில் யார் யாரெல்லாமோ டாக்டர் பட்டம் வாங்குகிறார்கள், யார் யாரெல்லாமோ இலக்கியவாதிகளாக கொண்டாடப் படுகிறார்கள் என்று பகடி செய்கிறார்.
*4.  போன தலைமுறை எழுத்தாளர்களை தமிழகம் மறந்துவிட்டது என்று கோபப்படுகிறார். ராஜா இசைய விட ஏதோ ஒருவர் பெயரைச் சொல்லி அவரின் இசையே நெஞ்சைத் தொருகிறது என்கிறார். ஆங்காங்கே மேற்கத்திய மொழிகள் வருகிறது( கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மொழி வருவதால் எது என்ன மொழி என்பதை தெரிந்துகொள்ள அதிகம் முயலவில்லை. மறு வாசிப்பில்  அவரே அவை என்ன மொழிகள் என்று கூறியுள்ளாரா என்று பார்க்க வேண்டும்.
* 5. போலி சாமியார்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், சாலை விதிகளை மதிக்காத இந்திய மக்கள் என எல்லோரையும் ஒரு வாங்கு வாங்குகிறார்.
* 6. பின் "சாரு நிவேதிதா செக்ஸ் ஸ்காண்டல்"க்கு தன் பக்க விளக்கங்கள் கொடுக்கிறார்.
முதல் நூறு பக்கங்களில் செக்ஸ் அதிகமில்லை( ஏன் இதை குறிப்பிடுகிறேனென்றால் சாருவைசெக்ஸ் ரைட்டர்’ என்றும், ‘அடல்ட் ரைட்டர்’ என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்)
இனி நான்:
*1. உண்மை தான் சாரு. நீங்கள் தமிழில் அல்லாமல் வேறு மொழியில் எழுதியிருக்கலாம். அதிகம் மதிக்கப்பட்டோ, பாரட்டப்பட்டோ, பரவலாக வாசிக்கப் பட்டோ இருந்திருப்பீர்கள். இல்லை அடையாளமே இல்லாமல் கூட போயிருப்பீர்கள். காலத்திற்குதான் வெளிச்சம். ஆனால் தமிழில் எழுதியதனால்தான் ஆட்டோபிக்சன் எழுத்து முறையை இந்தியாவிலேயே முதலில் அறிமுகப்படுத்தியவர் என்கிற பெருமைக் கிடைத்திருக்கிறதுஇந்த தேசத்தில்(தமிழ்) எழுத்தாளர்களின் நிலை இருக்க வேண்டிய நிலையில் இல்லை என்பது உண்மை. புதுமைப்பித்தனிடம் ஒருவர் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று வந்தாராம். அதற்கு அவர்,வந்தவரை முழு நேர எழுத்தாளரனால் சோறு கிடைக்காது என்று அனுப்பி வைத்தாராம். ஒரு சமூகத்தில் சிந்தனையாளர்கள் முன்னிலைப்படுத்த படவில்லையென்றால் அச்சமூகம் சரியான பாதையில் செல்லவில்லை என்று அர்த்தம். ஆனால் நாம், ருஷ்யாவைப் போல் சிந்தனையாளர்களைத் தேடிப் பிடித்துக் கொல்லவில்லை என்று ஆறுதல் கொள்ளுங்கள்.
*2 . இருக்கலாம். எங்களுக்கு "இங்கு சிறு நீர் கழிக்காதீர்கள்" என்று எழுதியிருப்பது சிரிப்பைத்தான் தருகிறது. அவமானமெல்லாம் இல்லை. திறந்த வெளியில் மலம் கழிப்பது இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கையாகவே தெரிகிறது. பெருங்காலம் அடிமைப் பட்டு கிடந்ததால் இக்கால அரசியல் அதிகாரங்களெல்லாம் புதுசில்லை.  
ஆனால் இந்தியாவை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டு அதிலும் குறிப்பாக அமெரிக்காவுடன் ஒப்பிட்டு நீங்கள் எழுதியிருப்பதை முற்றிலுமாக ஏற்க இயலாது. ஒப்பீடு என்றால் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரம் மட்டுமே அளவாக இருக்க இயலாது. இரு நாடுகளிலும் குற்றங்கள் நிகழ்கின்றன. இங்கு ஓடும் பேருந்தில் ஒரு பெண் வன்புணரப்படுகிறார்(கற்பழிப்பு என்கிற வார்த்தையையே தடை செய்ய வேண்டும். அங்கு யாரின் கற்பு அழிகிறது?) என்றால் அங்கு வெள்ளை மாளிகை அதிபர் அதே குற்றச்சாட்டில் சிக்குகிறார். இங்கு ஜாதி வெறி, மத வெறி என்றால் அங்கு இன வெறி. அமெரிக்காவில் நாற்பது சதவிகதம் மக்கள் மன நோய்க்கு மருந்து எடுத்துகொள்கிறார்கள் என்றால் இந்தியாவில் எண்பது சதவிகித மக்கள் தங்களுக்கு மன நோய் இருப்பதையே அறியாமல் வாழ்கிறார்கள் என்கிறீர்கள். நாங்கள் மன நோயாளிகள் அல்ல சாரு. நாங்கள் பள்ளிகளுக்குள் புகுந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் சுட்டுக் கொல்லாதவரை நிச்சயம் மன நோயாளிகள் அல்ல. இந்தியாவின் அழுக்கு முகங்களைச் சாடும் அதே நேரத்தில் மற்ற நாட்டிற்கு கொடி பிடிப்பதை ரசிக்க முடியாது. இந்தியாவைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதே ஆரோக்கியமானதாகும்.
*3. இதற்கு நான் எதுவும் சொல்ல இயலாது. ஏனென்றால் அப்படி ஒரு டாக்டர் நடிகரின் படங்கள் என்றால் அதிகம் பிடிக்கும். ஆனாலும் நீங்கள் அவர் பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டாம் . J
*4. ஆம் மறதி நம் தேசிய வியாதிதான். இசையப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனவே ராஜா ரசிகர்கள் பதில் கூறட்டும்.
*5. எத்தனைப் படங்கள் வந்தாலும், சத்தியமேவ ஜெயதேக்கள் வந்தாலும் அதையெல்லாம் பார்த்து விட்டு எவ்வளவு பேர் மாறுவார்கள் என்று தெரியவில்லை. எனவே நீங்கள் உங்கள் கடமையச் செய்திருக்கிறீர்கள்.
*6. எப்படி வாழ வேண்டும் என்பதற்கு காந்தியைப் படியுங்கள், எப்படி வாழக் கூடாது என்பதற்கு என்னைப் படியுங்கள் என்று சொன்ன கண்ணதாசனைப் போலோ இல்லை என் வீட்டு படுக்கையறக்குள் எட்டிப் பார்க்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்று சொன்ன கமலைப் போலோ நீங்களும் சொல்லுங்கள் சாருபிறகு வசைகள் குறையலாம்.
இதுவரை நான் அதிகம் ரசித்தது, ரசித்த பகுதி ஆவிகள் உலகம் தான். குறிப்பாக இந்திரா காந்தி ஆவியையும், ராஜிவ் காந்தி ஆவியையும் பார்க்க மனமில்லை எங்கள் கட்சியை ஒழித்தவர்கள் அவர்கள் என்பதால் என்று பக்கிரி  ஆவி கூறுவதை அதிகம் ரசித்தேன்.
எழுத்து முழுவதும் பகடியை இழையோட விட்டிருக்கிறார். அதுவே அதிகம் ரசிக்க வைக்கிறது. இது தமிழ் மக்களின் தனிச் சிறப்புநக்கல் செய்வது, நகைச்சுவை ததும்ப பேசுவது தமிழ் எழுத்தாளர்களுக்கும், கலைஞரகளுக்கும், ஏன் தமிழ் மக்கள் அனைவருக்குமே கைவந்த கலை. படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை க்ரேசி மோகனும், இந்தி எழுத்தாளர் ஒருவரும் தமிழ் படம் ஒன்றின் வசனங்களை மொழிப்பெயர்த்துக் கொண்டிருந்தார்களாம். ஒரு கட்டத்தில் அந்த இந்தி எழுத்தாளர் பேனாவைக் கீழே வைத்து விட்டு சிரித்து சிரித்து மாய்ந்தாராம். மதாராசிகளின் நகைச்சுவையுணர்வே உணர்வு என்றாராம். இதை எழுதும் பொழுது இப்புத்தகத்தில்  சாரு குறிப்பிட்டுள்ளஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. வெளி நாட்டில் ஒரு ஆண் தெருவில் நடந்து கொண்டு பெரும் சேஷ்டைகள் செய்து கொண்டிருந்தானாம். அவ்வழியே வந்த ஒரு ஆணை திடீரென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்தானாம். அதற்கு அந்த ஆள் ஒரு படி மேலே போய் அவனைச் சுவரோடு சேர்த்து புணர்வது போல் பாவனை செய்தானாம். அதைப் பார்த்து  தெருவே சிரித்து மகிழ்ந்ததாம்.. இப்படி ஒரு நாட்டில்  வாழாமல் போய்விட்டோமே என்று சாரு கவலை கொள்கிறார்.சாரு!!!!! ( Jவாழ்க்கையைக் கொண்டாடுவதைப் பற்றி எழுதும் பொழுது இதை எழுதியிருக்கிறார் என்பதையும் சொல்லி  விடுகிறேன்)
If i say, only because of transgressive  writing , Charu made the first hundred pages interesting, that’s almost true.

-தொடரும்.

No comments:

Post a Comment