"நான் உனக்கு மட்டுந்தான்"
என்று நீ கூறிய இடத்தில்
என் ஆசைகள்
இன்று
ஆயிரம் விழுதுகள் விட்டு
வளர்ந்து நிற்கின்றன
நான்
அந்த வார்த்தைகளுடந்தான்
வாழ்ந்து வருகிறேன்
உன்னோடு
எல்லாமும் போய்விட்டன...
இந்த உயிர் மட்டும்
அந்த வார்த்தைகளுக்கிடையில்
எங்கோ
ஒளிந்து கொண்டுவிட்டது
ஒரு முறை
நான் தொட்ட
உன் கன்னத்தைப்
பிரதி எடுத்து
அதையும்
எட்டாத உயரத்தில்
வைத்துவிட்டுப்
போய்விட்டாய்
உன் திருமணத்திற்கு
உன் வார்த்தைகளை
அனுப்பி வைத்திருந்தேன்
பத்திரமாய் திரும்பி வந்து
இன்னமும்
கதை கதையாய்
சொல்லிக்கொண்டிருக்கின்றன
உன்னைப் பிரிந்தாலும்
உன் வார்த்தைகளைப் பிரிய மனமில்லை
எனக்கு வாய்க்கரிசி போடப்போகிறவர்களிடம்
அவற்றைக் குடுத்து
சேர்த்துப் போடச் சொல்ல வேண்டும்
No comments:
Post a Comment