Friday, October 10, 2014

அன்புள்ள அக்காவிற்கு,

அன்புள்ள அக்காவிற்கு,

வாழ்க்கை சில பாடங்களை நமக்குத் திரும்ப திரும்பக் கற்றுக்கொடுக்கிறது, அல்லது நாம் திரும்ப திரும்பப் படிக்கிறோம்.கிளையிலிருந்து உதிர்ந்த இலை கடலில் விழுந்தால் என்ன? கரையில் விழுந்தால் என்ன? சிலவற்றைப் பேசாமல் இருந்திருக்கலாம். சிலவற்றைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். இக்கடிதத்தைக் கூட எழுதாமல் இருந்திருக்கலாம்.

மரணம் எல்லாவற்றையும் நேர் படுத்திவிடுகிறது, சமன் படுத்திவிடுகிறது என்று எங்கோ படித்ததாய் நியாபகம். என்னளவில் தீராத அன்பும் அவ்வாறே. உடனடி எதிர்வினைகள் அடங்கிய பின் அமைதியான, ஆழமான ஒரு கடலைக் கொண்டிருக்கும் அது.

தோள் சாய்ந்து நீ அழும்போது, வழிந்தோடும் உன் கண்ணீரின் கனம் தாங்காமல்தான் புலம்புகின்றேன். உன் தோட்டத்தில் பூக்கும் பூக்களுக்கு தனி வாசம் உண்டு, அதை மனிதர்களின் சந்தையில் விற்காதே என்றுதான் கூறுகின்றேன்.

அழும் குழந்தையால் வார்தைகளை செரிக்கவே முடிவதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அரவணைப்புகளில் ஒளிந்திருக்கிறது சமாதானம் செய்யும் மந்திரம். ஆம். சிலவற்றைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். இக்கடிதத்தைக் கூட எழுதாமல் இருந்திருக்கலாம்.

சில பிரிவுகள், எதுவுமே எழுதப்படக்கூடாத/தேவைப்படாத ஒரு வெற்றிடத்தை விட்டுத்தான் செல்கின்றன‌ என்பது புரிகிறது. ஏன் எப்பொழுதுமே அழுதுகொண்டிருக்கிறாய் என்று சிலரிடம் கேட்பது ஏன் உனக்கு வண்ணங்களே தெரிவதில்லை என்று குருடனிடம் கேட்பதைப் போன்று அபத்தமானது. என்றாலும் எல்லா தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்வுகளும் ஏதோ ஒரு கணத்தில் நடந்துதான் விடுகின்றன.

மனுஷ்யபுத்திரனிடம் இந்தக் கவிதையை சத்தியமாக நான் எழுதச்சொல்லவில்லை. அவரும் எழுதாமல் விட்டிருக்கப்படவேண்டிய, அதிலும் குறிப்பாக இன்று எழுதிருக்கவே கூடாத ஒன்றை எழுதியிருக்கிறார்.
உன்னைவிட்டுப் போகும்போது
 ……………………………………………………….

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 நீ அவருக்குப் புரிந்துகொள்ளவே முடியாத
 ஒரு விடுதலையை அளிக்கிறாய்
 பதட்டமடையாமல்
 அவருக்கு நீ விடைகொடு

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 உன்னுடைய நிழல் இல்லாமல்
 அவர் தன்னைத் தானே பார்த்துக்கொள்ள
 அனுமதிக்கிறாய்

 எந்தக் குற்ற உணர்ச்சியையும்
 ஏற்படுத்தாமல் அவரைப் போகவிடு

 ஒருவர்
 உன்னைவிட்டுப் போகும்போது
 உன்னுடைய பழக்கங்கள் மாறுவதுபோலவே
 அவரது பழக்கங்களும் மாறிவிடுகின்றன

 போகும்போது அவருக்கு நீ
 எதையும் மறுக்காதே

 ஒருவர்
 உன்னைவிட்டுப் போகும்போது
 ஒரு சுவருக்கு அந்தப் பக்கமாய்
 போவதாகவே அவர் உணர்கிறார்

 நீ அவருக்கு
 நல்வாழ்த்துகளைத் தெரிவி

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 எதையோ
 கொஞ்சம் இழக்கிறாய்

 அவரும் எதையோ
 கொஞ்சம் இழந்துதான் போகிறார்
 என்பதால் நீ துக்கமடைய வேண்டியதில்லை

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 நீ இனி அவருக்குத் தர ஒன்றுமே
 இல்லை என்பதால்தான் போகிறார்

 நீ அவருக்கு
 உன்னிடம் இருப்பதிலேயே
 சிறந்த ஒன்றை அப்போது
 பரிசளித்துவிடு

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 இனி எப்போதும் திரும்பவே மாட்டார்
 என்றுதான் நினைக்கிறாய்

 அந்தக் கணத்தின் அன்பை
 அந்தக் கணத்தின் வெறுப்பை
 அவருக்கு முழுமையாகக் காட்டு

 ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது
 அவர் வெளிச்சத்தை நோக்கிப் போவதாக
 ஒரு கணம் உணர்கிறார்

 நீ அப்போது
 ஒரு காதல் கவிதையை
 எழுதாமலிரு

நாளை என்பது நிச்சயம் மற்றுமொரு நாளே. நம்பிக்கைகளே அதன் நிறம் மாற்றித் தர வல்லவை. நாளை உன் கண்ணீரின் கன‌மேனும் குறையும் என்ற நம்பிக்கையில் எழுதப்படாமல் விட்டிருக்கப்படவேண்டிய இக்கடிதம் முடிவடைகிறது.

No comments:

Post a Comment