Tuesday, October 28, 2014

“கடல்புரத்தில்”

குட்ரீட்ஸ் ரேட்டிங்: 5 நட்சத்திரங்கள் ( நண்பர்கள் எல்லா இடத்திலும் இருப்பதால் ஒரே மாதிரியே எல்லா இடத்திலும் சொல்ல வேண்டியிருக்கிறது{குட்ரீட்ஸ் தளத்தில் நண்பர்களாக இல்லாதவர்களுக்கு தனியாக ஒரு பதிவு எழுதி வேறு ரேட்டிங் தருகிறேன்}) :)
ஏன் 5 நட்சத்திரங்கள் என்று கேட்டால் குடுக்க வேண்டும் என்று தோன்றியது குடுத்தேன். என் ரேட்டிங் என் உரிமை :)
ஏற்கனவே உன் ரிவ்யூல‌ content இல்லைன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க. அதுக்காக சில வரிகள்:
ஆசிரியர் :வண்ணநிலவன்
பதிப்பகம் : நற்றினை
விலை : 90
பிடித்த விசயங்கள் : 112 பக்கங்கள் மட்டுமே இருப்பது :)
வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி விடை ஒன்று எழுதவே இயலாது. நம்ம வாழ்க்கை மாதிரியே இருக்கே, நம்ம வாழ்க்கைல நடந்தது மாதிரியே இதுலயும் வருதே என்று என்ன கூறினாலும் யாருடைய வாழ்க்கையும் இன்னொருவரது வாழ்க்கைப்போல் இருக்கவே முடியாது. ஒருவருக்கு யதார்த்தம் என்பது இன்னொருவருக்கு ஆச்சர்யமூட்டும்; ஒருவருக்கு அருவருப்பூட்டும் ; ஒருவருக்கு பயமூட்டும் ; ஒருவருக்கு யதார்த்தமாகவும் தெரியலாம். இவ்வாறு வெவ்வேறு எண்ணங்களைத்தரும் காட்சிகள் நிறைந்துள்ளதால் கடல்புரத்தில் என்னிடம் அதிகம் மணம் வீசுகிறது.
உதாரணத்திற்கு பிலோமி தன் தாய் பழகி வந்த வாத்தியாருடன் நாவலின் கடைசியில் பழகத்தொடங்குகிறாள். இருவரையுமே ஊர் தப்பாகப் பேசுகிறது. இதில் எது எதார்த்தம், எது அருவருப்பூட்டும், எது வியப்பூட்டும், எது பயமூட்டும் விசயமாகப் பார்க்கிறோம் என்பது படிப்பவர் மன நிலையைப் பொறுத்தது. எனக்கு எல்லாமே இருப்பதாகத் தோன்றுகிறது.ஊர் தப்பாகப் பேசுவது யதார்த்தம். பிலோமியின் வாழ்க்கைச் சூழலில் இருந்து வேறு ஒரு சூழலில் வாத்தியார் இருக்கிறார் என்று நினைத்தால் அவருடன் பழகுவதும் யதார்த்தம். தன் தாய் ஒருவருடன் பழகியிருக்கிறார்,அந்த ஒரு காரணத்தினாலேயே அவர் மீது ஒரு மதிப்பு வந்து அவருடன் பழகுவது இயல்பு என்று நினைத்தால் அதுவும் யதார்த்தமே. இவ்வாறு ஒவ்வொரு எண்ணத்தையும் ஏற்றிப் பார்க்கலாம்.
பழகியப் பெண்ணை எல்லாம் முடிந்தவுடன் விட்டுச்செல்லும் ஒருவன், தாய் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டாலும் அவளின் பிரிவை நினைத்து வருந்தும் மகள், மனைவி எவ்வளவு மோசமாக நடந்துகொண்டாலும் அவள் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத கணவன், பணத்திற்காக வீட்டிற்கு வரும் பையன்,சபல எண்ணங்களுடன் இருக்கும் பக்கத்து வீட்டு ஆண், தொழிலில் பணத்தால் வரும் ஏற்றத்தாழ்வு, துரோகம் செய்யும் வேலைக்காரன், சொந்தவீட்டைப் பிரிய(ஊரையும்) முடியாமல் மனம் பிறழும் பெரியவர் ( இந்த நாவல் எழுதப்பட்ட ஆண்டு 1977. பல ஆண்டுகள் கழித்து வந்த ஒரு தமிழ்ப் படத்தில் ஒரு பெரியவர் உயிரையே விட்டுவிடுவார்) என நமக்குத் தெரிந்த நிறையபேர் கடல்புரத்தில் இருக்கிறார்கள். நம்மால் புரிந்துகொள்ள முடியாத உணர்வுகளைத் தரும் மனிதர்களும் இருக்கிறார்கள்
எனக்கு இந்த ஊர் பிடித்திருந்தது. அடுத்தப் பயண அனுபவங்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.

No comments:

Post a Comment